துரை தயாநிதிக்கு எதிரான பிடிவாரண்டுக்கு தடை; முன் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

ஒலிம்பஸ் குவாரி என்ற பெயரில் கிரானைட் நிறுவனம் நடத்தி பல்லாயிரம் கோடி மோசடி செய்ததாக மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவர் தலைமறைவாக உள்ளார்.
இதையடுத்து அவரைக் கைது செய்ய மேலூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்த பிடிவாரண்டை ரத்து செய்யக் கோரி துரை தயாநிதி சார்பில் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்,
நான் ஏற்கனவே என் மீதான வழக்கில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தேன். அது தள்ளுபடி செய்யப்பட்டது. என் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன். அந்த மனு நிலுவையில் உள்ளது. பின்னர் மீண்டும் நான் மீண்டும் முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளேன். இந்த மனு மீதான விசாரணையும் நிலுவையில் உள்ளது.
இந் நிலையில் எனக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க முடியாது. எனவே பிடிவாரண்டை ரத்து செய்ய வேண்டும் என்று துரை தயாநிதி கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது துரை தயாநிதியின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை மற்றொரு நீதிபதி முன் நடந்து வருவதால் இந்த மனு மீதான விசாரணையையும் அந்த நீதிபதிக்கே மாற்றம் செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
துரை தயாநிதியின் முன் ஜாமீன் தொடர்பான மனு மீதான விசாரணை நீதிபதி மதிவாணன் முன்னிலையில் நடந்து வருகிறது. எனவே பிடிவாரண்டை ரத்து செய்யக் கோரிய மனு மீதான விசாரணையும் நீதிபதி மதிவாணன் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது துரை சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் கோபிநாத், முன் ஜாமீன் மனுவும், வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவும் நிலுவையில் இருக்கும்போது கீழ் நீதிமன்றம் இந்த பிடிவாரண்ட் பிறப்பித்ததில் உள்நோக்கம் இருக்கிறது. எனவே இதை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை வரும் 2ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதுவரை கைது பிடிவாரண்டுக்கும் இடைக்காலத் தடை விதித்தார்.
ஜாமீன் மனு ஒத்திவைப்பு:
இந் நிலையில் துரை தயாநிதி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு மீதான விசாரணையும் வரும் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications