மின்தடை இவ்வளவு முற்றும் வரை இத்தனை நாட்கள் என்ன செய்தீர்கள்?- நீதிமன்றம் கேள்வி
மதுரை: இருக்கும் மின்சாரத்தை அனைத்து தரப்பினருக்கும் முறையாக பகிர்ந்தளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.
மதுரை சர்வேயர் காலனியை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், மின்தடை குறித்து முன்கூட்டியே நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடவும், முன் அறிவிப்பு வெளியிடாமல் மின் தடை செய்யக்கூடாது என்றும் உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஆர்.சுதாகர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மின்வெட்டு குறித்து பொதுமக்களுக்கு நாளிதழ்கள் மூலம் முன்கூட்டியே அறிவிப்பு கொடுக்காதது ஏன், தமிழகத்தின் மின் நிலைமை என்ன ஆகியவை குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக (டான்ஜென்ட்கோ) தலைமை என்ஜினீயர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து தலைமை என்ஜினீயர் (வர்த்தகம்) கீதானந்தன், மின் தொடரமைப்பு கழகம் (இயக்கம்) இயக்குநர் விசுவநாதன் ஆகியோர் நீதிபதி முன் நேரில் ஆஜராயினர்.
அவர்கள் கூறுகையில், பருவமழை உரிய நேரத்தில் தேவையான அளவுக்கு இல்லாமல் போனது, காற்றாலைகள் இயங்காதது போன்ற காரணங்களால்தான் தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதாகவும், அதைச் சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறினர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இந்த அளவுக்கு பிரச்சனை முற்றும் வரை இத்தனை நாட்களாக அதற்கு மாற்றுத் தீர்வு காணாமல் என்ன செய்தீர்கள்?' என்று கேள்வி எழுப்பினார்.
அவரது கேள்விக்குகூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் அரவிந்த் பாண்டியன், செல்லப்பாண்டியன் ஆகியோர் பதிலளித்தனர். அவர்கள் கூறுகையில்,
மின்தடைக்கும் அரசுக்கும் நேரடியாக எந்த தொடர்பும் இல்லை. ஆனாலும் மின் பற்றாக்குறையை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக முதல்வர் இந்த பிரச்சனை தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். மின்சார திட்டங்களுக்கு ரூ. 1,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.
வட மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை தமிழகத்திற்கு கொண்டு வரலாம் என்றால் அதற்கான மின் பாதை இணைப்புகள் முறையாக இல்லை. அவற்றை சரி செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. அந்தப் பணிகள் வருகிற 2014ம் ஆண்டு முடிவடையும். இதற்கிடையே இன்னும் 4 மாதங்களில் தமிழகத்திற்கு 2,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இதனால் மின் பற்றாக்குறை ஓரளவு சரி செய்யப்படும் என்றனர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, மின்தடைக்கு மாநில அரசை குற்றம் சொல்ல முடியாது. ஆனால் தமிழகத்தில் தற்போது மின் பற்றாக்குறை மிகக் கடுமையாக உள்ளது. அதற்கு பருவமழை இல்லாதது உள்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. இருந்தாலும் தற்போது உள்ள மின்சாரத்தை அனைத்து தரப்பினருக்கும் முறையாக பகிர்ந்து அளிக்க வேண்டியது மின்சார வாரியத்தின் கடமை. வட மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை கொண்டுவர சரியான மின்பாதை இல்லை என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சரியான மின் பாதையை அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கடந்த ஆண்டும் இதேபோல மின்சார பற்றாக்குறை தொடர்பான ஒரு மனு மீதான விசாரணையின் முடிவில், பொதுமக்களுக்கு முறையாக தடையின்றி மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்கள் மின்சார ஒழுங்குமுறை ஆணைத்திடம் முறையிட்டு பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications