இந்தியாவை விரும்பும் சீனர்கள் 23%, சீனாவை விரும்பும் இந்தியர்களும் 23 சதவீதமே!
பெய்ஜிங்: சீனர்களில் 23 சதவீதத்தினர் மட்டுமே இந்தியாவை விரும்புவதாக சர்வே ஒன்றில் தெரியவந்துள்ளது. அதே போல இந்தியர்களில் 23 சதவீதத்தினர் மட்டுமே சீனா மீது மரியாதை வைத்துள்ளனர்.
வாஷிங்டனைச் சேர்ந்த பெவ் ரிசர்ச் சென்டர் என்ற ஆய்வு மையம் சீன மக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ள விவரம்,
நகர்ப்புற இந்தியர்களில் 53 சதவீதம் பேர் சீனாவின் பொருளாதார வளர்ச்சி இந்தியாவுக்கு நல்லதல்ல என்று கருதுகின்றனர். 26 சதவீதம் பேர் மட்டுமே அது இந்தியாவுக்கும் நல்லதே என்று நினைக்கின்றனர்.
அதே போல சீனர்களில் 44 சதவீதத்தினர் மட்டுமே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை விரும்புகின்றனர். இது கடந்த 2010ம் ஆண்டில் 60 சதவீதமாக இருந்தது. இரு ஆண்டுகளில் இந்திய பொருளாதார வளர்ச்சியை விரும்பாத சீனர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதற்குக் காரணம், எல்லைப் பிரச்சனையில் இந்தியா குறித்து சீன மீடியாக்களில் தொடர்ந்து வெளியாகி வரும் இந்திய எதிர்ப்புப் பிரச்சாரமே என்று கருதப்படுகிறது.
இந்தியாவிலும் சீனாவிலும் இரு நாட்டு அரசுகளும் நடத்தும் திரைப்பட விழாக்கள், கலாச்சார விழாக்களுக்கு பொது மக்கள் வருவதே அரிதாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஓ.சியில் டிக்கெட் கொடுத்தால் கூட பார்க்க ஆட்கள் வராத நிலையே நிலவுகிறது.
சீனாவின் டிவிட்டர் என்று அழைக்கப்படும் Weibo-வில் இந்திய பக்கத்தை பார்க்கும் சீனர்களின் எண்ணிக்கையும் மிக மிகக் குறைவாகவே உள்ளது.
இந்திய - சீன மக்களுக்கு இடையேயான நேரடி பிணைப்பினை ஏற்படுத்த இந்திய அரசு தவறிவிட்டதாக பெவ் ரிசர்ச் சென்டர் சுட்டிக் காட்டியுள்ளது.
இன்னொரு ஆச்சரியமான விஷயம், சீனர்களில் 31 சதவீதம் பேர் மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ளனர். பாகிஸ்தான்-சீனா இடையே பெருமளவில் பாதுகாப்பு, சமூக ஒத்துழைப்பு இருந்தும் கூட மிகக் குறைவான சீனர்களின் ஆதரவையே பாகிஸ்தான் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
