50 ஆண்டு காலம் நண்பராக இருந்ததற்கு நல்ல பாடம் கற்றுத் தந்து விட்டார் விஜயகாந்த் - சுந்தரராஜன்
சென்னை: 50 ஆண்டு காலம் நான் விஜயகாந்த்துக்கு நண்பராக இருந்தேன். அதற்கு என்னை அவமானப்படுத்தி நல்ல பாடம் கற்றுக் கொடுத்து விட்டார் என்று கூறியுள்ளார் மதுரை மத்திய தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ சுந்தரராஜன்.
முதல் ஆளாக தேமுதிக முகாமிலிருந்து அதிமுக பக்கம் சாய்ந்த இரு எம்.எல்.ஏக்களில் முக்கியமானவர் சுந்தரராஜன். மதுரைக்காரர், விஜயகாந்த்தின் நீண்ட கால நண்பர், அவருக்கு முக்கியமான ஆலோசகராக இருந்தவர், ரசிகர் மன்றத்தை அழகுற வழி நடத்தி விஜயகாந்த்துக்கு உதவியாக இருந்தவர். அவரே நேற்று ஜெயலலிதாவைப் போய்ப் பார்த்தது தேமுதிகவினரை மட்டுமல்லாமல் பிற கட்சியினரையு்ம் கூட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஏன் நான் ஜெயலலிதாவைப் பார்த்தேன் என்பதற்கு நீண்டதொரு விளக்கம் கொடுத்துள்ளார் சுந்தரராஜன். இதுகுறித்து அவர் கூறுகையில்,
என் தொகுதியில், கால்வாய், பாலங்கள் கட்டுவது தொடர்பாக முதல்வரை சந்தித்து, 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தேன். முதல்வரை முதல் முறை சந்தித்தாலும், நல்ல மரியாதையுடன் நடத்தினார். ஆனால், 50 ஆண்டுகாலம் நண்பராக இருந்தவர், என்னை அவமானப்படுத்துகிறார்.
குடும்ப ஆட்சி என்று கோஷம் போடும், அவரது கட்சியில் மட்டும் என்ன நடக்கிறது. இதை கட்சியில் உள்ள அனைவரும் நினைத்து பார்க்க வேண்டும்.மக்களையும், தெய்வத்தையும் மட்டுமே நம்புவதாக விஜயகாந்த் கூறுகிறார். ஆனால், 50 ஆண்டுகள் அவரை மட்டுமே நம்பியதற்கு இப்போது நான் பாடம் கற்று விட்டேன்.
நான் விஜயகாந்திடம் சொத்தை எதிர்பார்க்கவில்லை; நல்ல நட்பைத்தான் எதிர்பார்த்தேன். நண்பர்களாக இருந்தவர்களுக்கே, கட்சியில் இந்த நிலைமை என்றால் மற்றவர்களுக்கு, என்ன நிலை ஏற்படும் என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
ஐந்து ஆண்டுக்கு முன்பு வந்த, இளங்கோவன், பார்த்தசாரதிக்கு கிடைக்கும் மரியாதை கூட, 50 ஆண்டு கால நண்பனான எனக்கு கிடைக்கவில்லை. நட்பிற்காகவும், மனித தன்மைக்காகவும் தான், சமீபத்திய கட்சி விழாக்களில், அவமானத்தை தாண்டியும் பங்கேற்றேன். ஆனால், உரிய மரியாதை கிடைக்கவில்லை.
எனக்கு ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த மக்களுக்காகத் தான், முதல்வரை சந்திந்தேன். மக்கள் பிரச்னைக்காக, முதல்வரை சந்திக்க, கட்சி தலைமையிடம் அனுமதி பெற தேவையில்லை. கட்சி பதவியை பறித்தால், எனக்கு கவலையில்லை.
சட்டபை கூட்டத் தொடரில், தே.மு.தி.க. எம்.எல்.ஏ.,க்களுடன் தான் உட்காருவேன். தே.மு.தி.க. - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் என் மனநிலையில் இருப்பதால், அவர்களால் எனக்கு, எந்த பாதிப்பும் ஏற்படாது. என்னிடம் இருந்த சொத்து, பரிமாற்றம் செய்யப்பட்டதா என்பதை பற்றி, என்னிடம் கேட்காதீர்கள்.
ஊத்துக்கோட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் விசாரித்து, நீங்களே தெரிந்து கொள்ளலாம். அதைத் தவிர, வேறு எதையும் என்னால் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார் சுந்தரராஜன்.












Click it and Unblock the Notifications