ரவுடிகளை, கொள்ளையர்களை சுட்டுத் தள்ள போலீஸுக்குத் தடை இல்லை: டிஜிபி ராமானுஜம்
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதன் உடலுக்கு டிஜிபி ராமானுஜம் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர், போலீசாரின் தற்காப்பிற்காக தான் துப்பாக்கி கொடுத்துள்ளோம் என்று தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூரில், மருதுபாண்டியர் குரு பூஜை விழா நடைபெற்றது. அப்போது வன்முறை கும்பல் ஒன்று, திருப்பாச்சேத்தி எஸ்.ஐ. ஆல்பின்சுதனை(28) கத்தியால் குத்தி கொன்றது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த போலீசார் சிவக்குமார்(40), கர்ணன்(45) ஆகியோர் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மதியம் மதுரை அரசு மருத்துவமனையில், எஸ்.ஐயின் உடலுக்கு, முதல்வர் ஜெயலலிதா சார்பாக அமைச்சர் செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, டிஜிபி ராமானுஜம் அஞ்சலி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது டிஜிபி ராமானுஜம் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தென் மாவட்டங்களில் அடிக்கடி மோதல் ஏற்படுகிறதே என்றாலும் எஸ்.ஐ. கொலை எதிர்பாராதவிதமாக நடந்த சம்பவம். இறந்த எஸ்.ஐ. குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கவும், காயம்பட்டவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகப்படும் சிலரிடம் விசாரித்து வருகிறோம். இதில் முக்கிய குற்றவாளியான பிரபுவை தேடி வருகிறோம். முத்துராமலிங்க தேவர் ஜெயந்திக்காக 12 பட்டாலியன் படைகள், 30 உள்ளூர் யூனிட் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மக்களை பாதுகாக்கவே நாங்கள் உள்ளோம். சில சமயங்களில் அசம்பாவிதங்கள் நடக்கின்றன. இதனால் தங்களை பாதுகாத்து கொள்ள, போலீசாருக்கு துப்பாக்கி கொடுத்துள்ளோம். சட்டம் ஒழுங்கு பிரச்னையின் போது, முடிந்த அளவு துப்பாக்கி கையாளுவதை தவிர்க்கும்படி, போலீசாருக்கு அறிவுறுத்தி உள்ளோம்.
அதே நேரம் கொலையாளிகள், கொள்ளைக்காரர்களால் அச்சுறுத்தல் ஏற்படும் போதும், அவர்களுடன் போராடும் போது, தங்களை பாதுகாத்துக் கொள்ளவே, அவர்களுக்கு துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications