நாங்க ஆடுவது நாடகம்னா, விஜயகாந்த் போடுவது கபட நாடகமா... சுந்தரராஜன் கேள்வி

சென்னையில் இன்று முதல்வர் ஜெயலலிதா, முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருடன் தேமுதிகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் சுந்தரராஜன், மைக்கேல் ராயப்பன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இருவரையும் செய்தியாளர்கள் சந்தித்து பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். அதற்கு இருவரும் பொறுமையாக பதிலளித்தனர்.
முதல்வரை சந்தித்து நீங்கள் மனு கொடுத்தது போல் விஜயகாந்தும் சந்திக்க அனுமதி கேட்டு இருக்கிறாரே? என்ற கேள்விக்கு சுந்தரராஜன் பதிலளிக்கையில், நாங்கள் ஆரம்ப காலத்தில் இருந்து தொகுதி பிரச்சினை குறித்து முதல்வரையும், அமைச்சர்களையும் சந்தித்து பேச கட்சி தலைவர் விஜயகாந்திடம் அனுமதி கேட்டோம்.
இதேபோல் மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் அரசு விழாக்களிலும் பங்கேற்க அனுமதி கேட்டோம். ஆனால் அதற்கு அவர் அனுமதி அவர் தரவில்லை.
தொகுதி பிரச்சினை எதுவும் நிறைவேறாததால் முதல்வரை சந்தித்தோம். நாங்கள் சந்தித்ததை நாடகம் என்று கூறும் விஜயகாந்த் இப்போது அவரே சந்திக்க அனுமதி கேட்டு இருக்கிறார். அப்படியானால் இப்போது அவர் நடந்து கொள்வது கபட நாடகமா? என்று திருப்பிக் கேட்டார்.
வீட்டை காலி செய்யும்போது உரிமையாளரிடம் பொருட்களை ஒப்படைத்து விட்டுதான் செல்ல வேண்டும் என்று கூறி உங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என மறைமுகமாக கட்சி கொறடா கூறி இருக்கிறாரே என்ற கேள்விக்கு,
தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 29 பேரும் அதிமுக தயவால்தான் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆகி இருக்கிறார்கள். அதிமுக கூட்டணியில் இல்லை என்ற பிறகு விஜயகாந்த் உள்பட 29 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்ய தயாரா? அப்படி அவர்கள் ராஜினாமா செய்ய முன் வந்தால் அதில் முதல் ஆளாக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வது நாங்களாகத்தான் இருக்கும் என்றார்.
அசிங்கமாக எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார்கள்
மேலும் அவர்கள் கூறுகையில், எங்களது வீடு தாக்கப்பட்டது மட்டும் அல்ல. கொலை மிரட்டல், ஆபாச எஸ்.எம்.எஸ். தந்து தொல்லை கொடுக்கிறார்கள். கலாட்டாவில் ஈடுபடுகிறார்கள். இது அநாகரீக செயல். தைரியம் இருந்தால் எங்களை கட்சியை விட்டு நீக்கி பார்க்கட்டும்.
தேமுதிகவிலிருந்து மேலும் 10 எம்.எல்.ஏக்கள் வருவதாக கூறப்படுவது குறித்து எங்களுக்குத் தெரியாது.
விஜயகாந்த், பத்திரிக்கையாளர்களிடம் கோபப்பட்டு அநாகரீகமாக நடந்து கொண்டது தவறானது, கண்டனத்துக்குரியது என்றார்கள்.












Click it and Unblock the Notifications