புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக்குவதை எதிர்க்கும் வழக்கில் மீண்டும் விசாரணை

தி.மு.க. ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. ஆனால் பின்னர் வந்த அ.தி.மு.க. அரசோ பழைய தலைமைச் செயலகத்தையே பயன்படுத்தியது. அத்துடன் புதிய தலைமைச் செயலகத்தை பல்நோக்கு நவீன சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வீரமணி என்பவர் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் டி.முருகேசன், கே.கே.சசீதரன் விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்து கடந்த ஜுலை 19-ந் தேதி உத்தரவிட்டனர். தொடர்ந்து வழக்கின் விசாரணையை வேறு டிவிஷன் பெஞ்ச்சுக்கு மாற்றக் கோரி ஜுலை 26-ந் தேதி தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தனர்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் கே.என்.பாஷா, என்.பால்வசந்தகுமார் ஆகியோரைக் கொண்ட அமர்வுக்கு வழக்கு விசாரணையை மாற்றி தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் நீதிபதிகள் கே.என்.பாஷா, என்.பால்வசந்தகுமார் முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் எஸ்.வெங்கடேஷ், மனுதாரர் தரப்பில் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகினர். இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் 19-ந் தேதி வழக்கை ஒத்திவைக்கிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அரசாணையை எதிர்த்து வீரமணி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications