Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிலம் புயல் காரணமாக கடலோரத் தமிழகத்தில் தொடர்ந்து மழை

Subscribe to Oneindia Tamil

Heavy rain slams North Tamil Nadu
சென்னை: கடலோர தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவாரூர், நாகப்பட்டனம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது சென்னையிலிருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது புயலாக மாறியுள்ளது. நிலம் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளிலும் குறிப்பாக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றும் கன மழையும் பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. புதுவை, கடலூர் மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது.

சென்னையில்

சென்னையில் நேற்று நள்ளிரவுக்கு மேல் கன மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் இயல்பு வாழ்க்கை காலையிலேயே முடங்கிப் போய் விட்டது.

பள்ளிகளுக்கு விடுமுறை

கன மழை மற்றும் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கடலூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

புயல் காரணமாக கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுவதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்றும் கடல் சீற்றத்துடனும், கொந்தளிப்புடனும் காணப்படும். தரைக்காற்றும் பலமாக வீசக்கூடும். எனவே மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று கடலூர், நாகை மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அந்த மாவட்டங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

கடலூர் மாவட்டத்தில் பரவலாக நேற்று முன்தினம் மாலையில் இருந்து இரவு வரை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. நேற்று காலையில் வானம் மேகமூட்டத்துடன் இருண்டு காணப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கடந்த 18-ந்தேதி தொடங்கியதில் இருந்து கடலூரில் தான் அதிகமாக மழை பெய்துள்ளது. அதேபோல் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக கடலூரில் 67.40 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் மழையினால் அணைகள், ஏரிகள் மற்றும் குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அவற்றின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. வீராணம் ஏரியின் நீர்மட்டம் நேற்று 44.80 அடியாக இருந்தது. ஏரியில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 917 கன அடி தண்ணீரும், சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 75 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது.

கடலூர் துறைமுகத்தில் நேற்று காலையில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. கடலூர் மாவட்டத்தின் அனைத்து கடலோர கிராமங்களிலும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. ஏற்கனவே கடலுக்குள் சென்றவர்களும் நேற்று முன்தினமே கரைக்கு திரும்பி விட்டனர்.

நாகையில் சூறைக் காற்றுடன் பலத்த மழை- 4 பேர் பலி

நாகை மாவட்டத்தில் நேற்று மதியம் சூறை காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. முன்னதாக நேற்றுமுன்தினம் இரவு முதல் அதிகாலை வரை விடியவிடிய பலத்த மழை பெய்தது. இந்த தொடர் மழை காரணமாக நாகை நகர பகுதிகளில் சாலையில் வெள்ளம் தேங்கி நின்றது.

திருமருகல் பகுதி கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால், குடிசைகளில் உள்ள மக்கள் அருகே உள்ள பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர். நெல் வயல்களில் மழை நீர் தேங்கியது.

தரங்கம்பாடியில் அதிகபட்சமாக 135 மி.மீட்டர் மழையும், குறைந்தபட்சமாக மணல்மேட்டில் 23 மி.மீட்டர் மழையும் பதிவானது. நாகை துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. பள்ளிகளுக்கும் நேற்று விடுமுறை விடப்பட்டு இருந்தது.

நாகை மாவட்டத்தில் மழைக்கு 4 பேர் பலியானார்கள். நாகையில் நேற்று மதியம் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது. நாகையை அடுத்த கீழையூர், கீழ்வேளூர், தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. நாகை மாவட்டத்தில் பெய்த பலத்த மழைக்கு 3 பேர் பலியாகி உள்ளனர்.

செம்பனார்கோவில் அருகே குரங்கப்புத்தூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த இளங்கோராஜன் (வயது 40) வீடு இடிந்து விழுந்ததில் பரிதாபமாக இறந்தார். குத்தாலம் பெருஞ்சேரியில் கீர்த்திவாசன் (42) நேற்றுமுன்தினம் மின்னல் தாக்கியதில் உடல் கருகி உயிரிழந்தார். கீழ்வேளூர் மேலவெண்ணியை சேர்ந்த பக்கிரிசாமி (55) ஆற்றில் குளிக்கச்சென்ற போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக இறந்தார்.

கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்றவர்களின் படகு கவிழ்ந்தது. இதில் பஞ்சநாதம் என்ற மீனவர் இறந்தார். அருணாசலம் என்பவர் மாயமானார்.

புதுவையிலும் கன மழை

புதுச்சேரி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. புதுவை கடல் நேற்று சீற்றத்துடன் காணப்பட்டது. புதுவை புறநகர்ப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல் நீர் புகுந்தது. புதுவையில் மீனவர்கள் யாரும் நேற்று கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+