வரும் 15ம் தேதிக்குள் தமிழகத்திற்கு 4 டி.எம்.சி. தண்ணீர் கொடுங்க: காவிரி கண்காணிப்பு குழு
டெல்லி: தமிழகத்திற்கு வரும் 15ம் தேதிக்குள் காவிரியில் இருந்து 4 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகா அரசிற்கு காவிரி கண்காணிப்பு குழு உத்தரவிட்டுள்ளது.
காவிரியில் இருந்து தினமும் 2 டி.எம்.சி வீதம் 24 நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் விட கர்நாடக அரசிற்கு உத்தரவிட கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் முடிவில், இரு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சனையை காவிரி கண்காணிப்பு குழு ஆய்வு செய்து உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். அதை இரு மாநில அரசுகளும் ஏற்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் காவிரி கண்காணிப்பு குழுவின் கூட்டம் இன்று காலையில் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு குழுவின் தலைவர் மத்திய நீர் வளத்துறை செயலாளர் துருவிஜய்சிங் தலைமை தாங்கினார்.
தமிழகம், புதுவை, கர்நாடகம், கேரளம் ஆகிய 4 மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழகம் சார்பில் தலைமை செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காவிரியில் கர்நாடகம் திறந்துவிட வேண்டிய தண்ணீரின் அளவு குறித்து தமிழகத்தின் சார்பில் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் கர்நாடகாவில் தற்போது நிலவி வரும் பிரச்சனை குறித்தும் விவரிக்கப்பட்டது.
இருத்தரப்பினரின் கருத்துகளை கேட்ட பிறகு, கண்காணிப்பு குழு தலைவர் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது,
கர்நாடக அரசு வரும் 1ம் தேதி(நாளை) முதல் 15ம் தேதிக்குள் தமிழகத்துக்கு 4 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும். ஏற்கனவே அக்டோபர் மாதம் தர வேண்டிய 1.5 டி.எம்.சி. தண்ணீர் நிலுவையையும் சேர்த்து மொத்தம் 5.5 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்.
இதை இரு மாநில அரசுகளும் ஏற்றுக் கொண்டு ஒரு வாரத்தில் எழுத்து பூர்வமாக அறிக்கை அளிக்க வேண்டும். காவிரி கண்காணிப்பு குழுவின் அடுத்த கூட்டம் வரும் 15ம் தேதி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications