பறவைக்காய்ச்சல் எதிரொலி: 2 கோடி முட்டை, கோழிகள் தேக்கம்

கர்நாடக மாநிலம் ஹெசர்கட்டா பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான கோழிப்பண்ணை ஒன்றில் பறவை காய்ச்சல் நோய் தாக்கி 3,400 வான்கோழிகள் இறந்தன. இதையடுத்து கர்நாடகாவில் இருந்து முட்டைகள், கோழிகள் மற்றும் கோழி தீவனங்கள் வெளியே எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கேரள அரசு 29-ந் தேதி நள்ளிரவு முதல் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் இருந்து கோழிகள் மற்றும் முட்டைகள் கொண்டு வர திடீரென தடைவிதித்து உள்ளது. இந்த தடை காரணமாக திங்கட்கிழமை முதல் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு முட்டை மற்றும் கோழிகள் ஏற்றி செல்லப்பட்ட வாகனங்கள் ஆங்காங்கே தமிழக - கேரளா எல்லைப்புற சோதனை சாவடிகளில் நிறுத்தப்பட்டன.
கேரள அரசின் இந்த நடவடிக்கையால் நாமக்கல் மண்டலத்தில் நாள் ஒன்றுக்கு 70 லட்சம் முட்டைகளும், ஏறத்தாழ 1 லட்சம் கோழிகளும் தேங்கி வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் 2 கோடி முட்டைகளும், 3 லட்சம் கோழிகளும் தேங்கி உள்ளன. இதற்கிடையே தமிழக அரசு அதிகாரிகள், கேரள அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி, எங்களது முட்டை மற்றும் கோழி வாகனங்களை அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் வலியுறுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் இருமாநில கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகளும், பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இருப்பினும் செவ்வாய்கிழமை மாலை வரை கேரள அரசு தமிழக முட்டை மற்றும் கோழிகளுக்கான தடையை நீக்கவில்லை.
இதற்கிடையே கோழிப்பண்ணையாளர்கள் சிலர் ஆண்டகளூர் கேட் பகுதியில் உள்ள கோழியின நோய் ஆய்வகத்தில் உள்ள துணை இயக்குனர் டாக்டர் தேவராஜிடம், தமிழகத்தில் பறவை காய்ச்சல் நோய் தாக்குதல் இல்லை என சான்றிதழ் பெற்றுக்கொண்டு, முட்டைகளை வாகனங்களில் ஏற்றி சென்றனர். ஆனால் சோதனை சாவடிகளில் உள்ள கேரள அதிகாரிகள், தங்களது அரசிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை என தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
ன்றிதழ் பெற்றாலும் கூட, கேரளாவிற்குள் கோழி மற்றும் முட்டை லாரிகள் நுழைய முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான முட்டை லாரிகள் சோதனை சாவடிகளில் நிறுத்தப்பட்டு உள்ளன.
நாமக்கல் மண்டலத்தில் இருந்து உலக சுகாதார அமைப்பில் அங்கம் வகிக்கும் ஓமன், மஸ்கட் போன்ற நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதியும் தடைபட்டு உள்ளது. இதனால் நாமக்கல்லில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களில் முட்டைகள் தேங்க தொடங்கி உள்ளது. ஆனால் ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு வழக்கம்போல் முட்டை ஏற்றுமதி நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு அதிகாரிகள், கேரள அதிகாரிகளுடன் பேசி, விரைவாக தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கோழிப்பண்ணையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications