வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை அரபிக் கடலுக்கு நகர்ந்தது!
சென்னை: வங்கக் கடலில் மீண்டும் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்தது. இந் நிலையில் அது இப்போது அரபிக் கடலை நோக்கி நகர்ந்து வருவதால் தமிழகத்துக்கு கனமழை அபாயம் நீங்கியுள்ளது.
வங்கக் கடலில் கடந்த மாதம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அரபிக்கடலுக்கு நகர்ந்து புயலாக மாறி சோமாலியா கடற்கரையை கடந்தது. அப்போதும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்தது.

இந் நிலையில் தென் மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று உருவாகி உள்ளது. இது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.
இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் பல இடங்களில் கன மழை பெய்யும். காவிரி டெல்டா மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந் நிலையில் இன்று அது அரபிக் கடலுக்கு நகர்ந்து விட்டது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறுகையில், தென் மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை குமரி நோக்கி நகர்ந்து கர்நாடாகாவை ஒட்டி உள்ள அரபிக் கடலை நோக்கி சென்றுவிட்டது. இதனால் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்தான் மழை பெய்யும்.
வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில பகுதிகளில் மட்டுமே மழை பெய்யும் என்றார்.












Click it and Unblock the Notifications