ரத்த ஆறு ஓடும் பாலஸ்தீனத்தின் கதறலும் இந்தியாவும்....

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மேற்காசிய பிராந்தியத்தில் அரசியல் போர்க் குரல்கள் ஒருபக்கம் அரசுகளை அலற வைத்துக் கொண்டிருக்க... இப்போது ரத்தம் தோய்ந்த யுத்தம் ஒன்று வெடித்துக் கொண்டிருக்கிறது... சொல்லி வைத்ததுபோல் 4 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் நேரத்தில் இஸ்ரேல் கட்டவிழ்த்த பெருந்தாக்குதல்களை இப்போதும் அடுத்த இஸ்ரேல் தேர்தலையொட்டி பாலஸ்தீனத்து காசா பிரதேசம் சுமந்து கொண்டிருக்கிறது...

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் கடந்த ஒருவார காலமாக நடத்தி வரும் இடைவிடாத வான்வழித் தாக்குதலில் பச்சிளம் குழந்தைகளும் பெண்களும் பெரும் எண்ணிக்கையில் படுகொலை செய்யப்பட இப்பொழுது யுத்தகள பலி எண்ணிக்கை 100ஐத் தாண்டிப் போயிருக்கிறது... ஒரு நாளைக்கு ஆகக் குறைந்தது 25 முதல் 30 பேர் வரை பலியெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பாரத தேசமோ, பேச்சுவார்த்தை நடத்திப் பார்ப்போம் என்று பொத்தாம் பொதுவாக சொல்லி வைத்துக் கொள்கிறது.. நாங்களும் தலையிட்டோம் என்று சொல்வதற்காக... அப்படித்தான் இந்திய தேசத்தால் சொல்லவும் முடியும்! ஒன்றரை லட்சம் ஈழத் தமிழரை சிங்களம் காவெடுக்க காவடி தூக்கிய இந்தியாவிடம் இஸ்ரேலை கண்டிக்கும் குரலை எதிர்பார்க்கக் கூடாது என்று சொல்லுகிற ஆவேச குரல்களும் இருக்கத்தான் செய்கின்றன.

இந்தியாவின் பிரதமராக நேரு இருந்த போது அணிசேரா கொள்கையை இந்தியா கடைபிடித்தது. இப்பொழுதும் அணிசேரா நாடுகள் அமைப்பு உயிரோடு இருக்கிறது.. உயிர்ப்போடு அல்ல...

1950களிலும் 60களிலும் ஹங்கேரியையும் செக்கோஸ்லோவேகியாவை சோவியத் ஒன்றியம் ஆக்கிரமித்த போது இந்தியா கண்டிக்கவில்லை... ஆனால் 1979-ல் இந்தியாவின் தற்காலிக பிரதமராக இருந்த சரண்சிங், ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பை கண்டித்தார். அதன் பிறகு ஆட்சிக்கு வந்த இந்திரா காந்தியால் இந்தியாவின் நிலைப்பாடு இந்த விவகாரத்தில் தலைகீழாகம் மாறிப்போனது என்பதும் வரலாறு.

நேரு மறைவுக்குப் பிறகு இந்தியாவின் அணிசேரா கொள்கை என்பது காலாவதியாகிப் போய் பெயரளவில் 'இந்தியாவின் கெளரவக் கொள்கை'யாக இருக்கிறது.. வியட்நாம் மீதான அமெரிக்காவின் வியட்நாம் படையெடுப்பை இந்தியா கண்டிக்கவில்லை. அதே நேரத்தில் வங்கதேசப் போரின் போது அமெரிக்கா-பாகிஸ்தான் - சீனா என்ற முக்கூட்டணியை முறியடிக்க இயல்பாகவே சோவியத் யூனியனுடன் கை கோர்க்க வேண்டிய நிலையில் ராணுவக் கூட்டு அமைத்தது.

1950களில் கனடாவின் உதவியுடன் 'ஆக்கப்பூர்வ வழிகளுக்கான அணுசக்தி நிலையத்தை (CIRUS -Canadaian Indian Reactor, US) உருவாக்கியது இந்தியா. அதே 'சைரஸ்' மூலம் 1970களில் அணு குண்டு தயாரிபதற்கான "துருவா' நிலையத்தையும் உருவாக்கியது இந்தியாதான்...

காலந்தோறும் கொண்ட கொள்கைகளில் இருந்து மாறிவருகிறது இந்தியா. சர்வதேச அரசியல் போக்குகளில் நிரந்தர நண்பனும் இல்லை.. நிரந்தர எதிரியும் இல்லை... நிலைத்தே இருப்பது அந்தந்த நாடுகளின் சொந்த நலன்கள் மட்டும்தான்!

இந்த 2012-ல் உலகம் 'அமெரிக்கா' எனும் ஒற்றைத் தலைமையின் கீழான உலகமாக உருமாறிப் போய்கிடக்கிறது. இலங்கையில் லட்சம் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டு தமிழகமே கொந்தளித்தாலும் இந்தியா எதாவது முயற்சிக்க நினைத்தாலும் கூட அமெரிக்காவை பற்றி யோசித்தே தீர வேண்டும்... இந்தியாவின் எரிபொருள் பயன்பாடே ஈரானை நம்பித்தான் இருக்கிறது. ஆனால் அமெரிக்கா சொல்ல்விட்டது என்பதற்காக இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்தாக வேண்டிய கட்டாயத்தை இந்தியா எதிர்கொண்டிருக்கிறது. இந்த நிலைதான் இப்பொழுது இஸ்ரேல்- பாலஸ்தீன விவகாரத்திலும்!

டெல்லியிலும் நாட்டின் பிற நகரங்களிலும் பாலஸ்தீனத்தின் மீதான கொடுந்தாக்குதல்களுக்கு எதிரான எத்தனை அழுத்தமான போராட்டங்கள் நடைபெற்றாலும் இந்தியாவால் நழுவித்தான் போக முடியுமே தவிர பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேலைக் கண்டித்து ஒரு வலுவான குரல் கொடுக்க முடியாத நிலையில்தான் இந்திய தேசம் இருக்கிறது!

இந்தியா ஆதரித்த பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத் இப்போது இல்லை.. அவரது கட்சியைவிட இப்பொழுது ஹமாஸ் என்ற தீவிரவாத இயக்கத்தின் கை ஓங்கி இருக்கிறது. பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக 'மனிதாபிமான'குரல் எழுப்பினால் கூட அது ஹமாஸ் இயக்கத்துக்கு ஆதரவுக் குரலாகவே மாறும் ! இந்த நிலைதான் பல நாடுகளுக்கும் இருக்கிறது! இஸ்ரேலோ இதுதான் சந்தர்ப்பம் என்றும் ஹமாஸ் எனும் தீவிரவாத இயக்கத்துக்கு எதிரான தாக்குதல் என்று கூறிக் கொண்டு தேர்தல் வெற்றிக்காக அந்தக் குட்டி பிரதேசத்தையே உருக்குலைத்து போட்டு வருகிறது!

இந்தியா என்ன.. இலங்கையின் முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் ஊடாக கிழித்து தொங்கவிடப்பட்டிருக்கும் ஐ.நா.வாலும் கூட எந்த ஒரு கல்லையும் அங்கு எடுத்துப் போட்டுவிட முடியாது! .

ஓடும் ரத்த ஆறும்.. பெருங்குரலெடுத்து வீறிடும் அழுகுரலும் இப்போதைக்கு இந்தியாவினால் மட்டுமல்ல எந்த ஒரு தேசத்தாலும் நிறுத்திவிட முடியாது என்பதுதான் இன்றைய சூழல்.... சர்வதேச அரசியல் போக்கில் இப்படியான நிலைமைகள் நிரந்தரமாகவே இருந்துவிடப் போவதில்லைதானே! அதுவரை அதிர்வலைகளையும் அவல ஓலங்களையும் நம் காதுகள் கேட்டுக் கொண்டுதான் இருக்கும் ... அது இலங்கையின் முள்ளிவாய்க்காலாக இருந்தாலும் பாலஸ்தீனத்து காசாவாக இருந்தாலும்.....

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+