எஸ்.ஐ ஆல்வின் சுதன் படுகொலை- 4 எஸ்.ஐகள் உட்பட 15 மானாமதுரை போலீசார் கூண்டோடு டிரான்ஸ்பர்
மானமதுரை: எஸ்.ஐ.ஆல்வின் சுதன் படுகொலை, மானாமதுரை மோதல் சம்பங்களின் எதிரொலியாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 4 எஸ்ஐக்கள் உட்பட 15 போலீசார் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அக்டோபர் 27ல் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி எஸ்ஐ ஆல்வின்சுதனை, புதுக்குளத்தை சேர்ந்த ரவுடி கும்பல் குத்திக்கொன்றது. இதையடுத்து மானாமதுரை பகுதியில் ஏற்பட்ட மோதலில் 4 பேர் வெட்டப்பட்டனர். மேலும் மானாமதுரை, சிப்காட், முத்தனேந்தல், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் கலவரம் வெடித்தது.
இதையடுத்து மானாமதுரை டிஎஸ்பி கருணாநிதி மாற்றப்பட்டு, மதுரை அண்ணாநகர் துணை கமிஷனர் வெள்ளத்துரை நியமிக்கப்பட்டார். இவர் நடத்திய விசாரணையில், சில போலீசாருக்கு உள்ளூர் ரவுடிகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க டிஎஸ்பி வெள்ளத்துரை, சிவகங்கை மாவட்ட எஸ்பி பன்னீர்செல்வத்திற்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில், டிஐஜி ராமசுப்பிரமணியன் வெள்ளிக்கிழமையன்று மானாமதுரை டிஎஸ்பி அலுவலகத்திற்கு உட்பட்ட பூவந்தி போலீஸ் ஸ்டேஷன் எஸ்ஐ விஜயலெட்சுமி, மானாமதுரை சிறப்பு எஸ்ஐ சக்திவேல், சிப்காட் சிறப்பு எஸ்ஐக்கள் நாகராஜன், ராமசாமி உட்பட 15 போலீசாரை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.
இந்த அதிரடி இடமாற்றம் மானாமதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications