இரட்டையர் மணமகன் வேண்டும்.. சுயமரியாதை திருமண விழாவில் இரட்டை சகோதரிகளின் விருப்பம்!
சென்னை: சென்னை பெரியார் திருமண திடலில் நடைபெற்ற சுயமரியாதை திருமண விழாவில் பங்கேற்ற கரூரைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் தங்களுக்கு இரட்டையர்களோ, அல்லது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பிகளோதான் மாப்பிள்ளையாக வரவேண்டும் என்று கூறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இதுபோன்ற முற்போக்கு சிந்தனையுள்ள குடும்பத்தினருக்கு பயன்படும் வகையில், தமிழகம் தழுவிய அளவில் சாதிமறுப்பு இணை தேடல் பெருவிழா மன்றல் 2012 சென்னையில் நடைபெற்றது. பெரியார் சுயமரியாதை திருமண நிலையம் சார்பில், பெரியார் திடலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சாதி மறுப்பு, மதமறுப்பு, மாற்றுத்திறனாளிகள், மணமுறிவு பெற்றோர், துணையை இழந்தோர் என்று தனித்தனியாக 5 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் இந்த அரங்குகளில் தங்கள் பெயர்களை காலை பதிவு செய்தனர். அனைத்து சான்றுகளும் சரிபார்க்கப்பட்டு பின்னர் திருமணத்திற்கு தயாராகுதல், மருத்துவம், மனநல ஆலோசனைகள் குறித்த மருத்துவ முகாமும் நடந்தது. இதன்பின்னர் திருமணம் செய்து கொள்பவர்களின் விருப்பங்களை கேள்வி-பதில் மூலம் கேட்கப்பட்டது. அதில் பல்வேறு ருசிகரமான பதில்களை அளித்தனர் திருமணத்திற்கு பதிவு செய்தவர்கள்.
இரட்டையர்கள் மாப்பிள்ளை
கரூர் பள்ளிப்பட்டை சேர்ந்த இரட்டை சகோதரிகளான கீதா-சீதா. கூறியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
ஒன்றாகவே பிறந்தோம், ஒன்றாகவே படித்தோம். இப்போது இருவரும் ஒரே நிறுவனத்தில் ஒன்றாகவே வேலை பார்க்கிறோம். இதுவரை எங்களுக்குள் சின்ன சின்ன சண்டைகூட வந்தது இல்லை. எங்களைப்போல் இரட்டையர்கள் மாப்பிள்ளையாக கிடைத்தால் மிகவும் சந்தோஷப்படுவோம் என்றனர். இரட்டையர்கள் கிடைக்காவிட்டால் அண்ணன், தம்பிகளுக்கு ஒரே வீட்டில் வாழ்க்கைப்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறோம் என்றனர். இவர்கள் சென்னை காமராஜர் நகரில் தங்கியிருந்து இருதய நோயாளிகளுக்கு ஈ.சி.ஜி எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
62 வயதில் திருமணம்
சென்னை தலைமைச்செயலகம் குடியிருப்பை சேர்ந்தவர் வி.கே.ராமச்சந்திரன். ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர். இவர் தனக்கு திருமணமாகி 4 குழந்தைகள் இருந்தும், தன்னை யாரும் கவனிக்கவில்லை என்று கூறி 62 வயதில் திருமணம் செய்து கொள்வதற்காக கலந்து கொண்டார்.
ரெயில் விபத்தில் கணவனை இழந்த பெண் தமிழரசி. திருமணமாகி 3 மாதம் மட்டுமே கணவருடன் வாழ்ந்துள்ளார். திருப்பத்தூரில் உள்ள பாலிடெக்னிக்கில் டைப்பிஸ்டாக வேலை பார்க்கும், இவர் சமுதாயத்தில் தனிபெண்ணாக வாழ முடியாது என்பதால் தன்னை கண் கலங்காமல் பார்த்து கொள்ளவும், மனதுக்கு பிடித்த மணமகனை தேடிவந்ததாக கூறினார்.
நெற்குன்றம் மேட்டுக்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியை ஜெயந்தி. இரண்டு கால்களும் போலியோ நோயால் பாதிக்கப்பட்ட இவர், எம்.ஏ., எம்.பில் படித்தவர். தன்நிலையை உணர்ந்து வாழ்நாள் முழுவதும் தன்னை கண்கலங்காமல் பார்த்துக் கொள்ள ஒரு துணையை தேடி வந்ததாக ஜெயந்தி கூறினார்.
இரண்டு கால்களையும் இழந்து தவழ்ந்து வந்தவர் தாம்பரத்தை சேர்ந்த மகேந்திரன். இவர் பழவியாபாரம் மூலம் மாதம் ரூ.20 ஆயிரம் சம்பாதிக்கிறார். இவர் தன்னை கவனித்துக்கொள்ள பெண் தேவை. சாதி, மதம் பார்க்கமாட்டேன். வரதட்சணையும் தேவையில்லை என்றும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் சாதி, மதம் மறுப்பு தெரிவித்த காரைக்குடியை சேர்ந்த அறிவரசுக்கும், மதுரையை சேர்ந்த ஜான்சிராணிக்கும் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த வெங்கடசுப்பிரமணியன், தமிழ்செல்வி ஆகிய இரண்டு ஜோடியினரையும் உறுதிமொழி வாசிக்க வைத்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி திருமணங்களை நடத்திவைத்தார்












Click it and Unblock the Notifications