பாகிஸ்தானில் இருமல் டானிக் குடித்த 16 பேர் பலி: 3 மெடிக்கல்களுக்கு சீல்
லாகூர்: பாகிஸ்தானில் இருமல் மருந்து குடித்த 16 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
பாகிஸ்தானில் உள்ள சில இடங்களில் இருமல் மருந்தில் அளவுக்கு அதிகமாக மயக்கத்தன்மை அளிக்கும் பொருட்கள் சேர்த்து விற்கின்றனர். போதைப் பொருள் எடுக்கும் பழக்கமுள்ளவர்கள் இந்த இருமல் டானிக்கை வாங்கி குடித்து வருகின்றனர். இந்நிலையில் லாகூர் அருகே உள்ள ஷாத்ரா நகரில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான மக்கள் பலர் அதிக மயக்கத்தன்மை கொண்ட இருமல் டானிக்கை குடித்துள்ளனர். அதில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று வரை 16 பேர் பலியாகியுள்ளனர்.
பலியானவர்களில் 7 பேர் மருத்துவமனையில் இறந்துள்ளனர். மீதமுள்ளவர்கள் கல்லறையில் அமர்ந்து டானிக்கை குடித்துவிட்டு அங்கேயே இறந்து கிடந்துள்ளனர் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவத்தை அடுத்து லாகூரில் உள்ள மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் போலி மருந்துகள் விற்ற 3 மெடிக்கல்கள் மூடப்பட்டு அதன் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்..
கடந்த ஜனவரி மாதம் லாகூரில் 100 இதயநோயாளிகள் இறந்தபோது தான் உள்ளூரில் தயாரிக்கும் போலியான மருந்து விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. மேலும் இத்தனை பேரின் உயிரைக் காவு வாங்கிய அந்த டானிக் பிற மெடிக்கல்களில் இருந்தும் திரும்பப் பெறப்படும் என்று பஞ்சாப் மாகாண சுகாதாரத் துறை அதிகாரி சல்மான் ரபீக் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி இன்னும் 72 மணி நேரத்திற்குள் அறிக்கை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு பஞ்சாப் முதல்வர் ஷாபாஸ் ஷரீப் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications