சுப்ரீம் கோர்ட், மத்திய அரசின் பேச்சைக் கேட்காத கர்நாடக அரசை முடக்க வேண்டும்: திருமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்திற்கு தண்ணீர தர மறுத்துள்ள கர்நாடக அரசை மத்திய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி முடக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை ஏற்று முதல்வர் ஜெயலலிதா கர்நாடக முதல்வரைச் சந்தித்து தமிழகத்துக்கு உரிய தண்ணீரைத் திறந்து விடுமாறு கோரிக்கை விடுத்தும் கர்நாடக அரசு பிடிவாதமாக மறுத்திருக்கிறது. தமிழகத்துக்குச் சேர வேண்டிய தண்ணீரில் பாதி அளவாவது கொடுங்கள் என்று தமிழக முதல்வர் கேட்டும் கூட கர்நாடக அரசு ஒப்புக்கொள்ளவில்லை.

1 டி.எம்.சி. தண்ணீர் கூடக் கொடுக்க முடியாது என்பதே கர்நாடக அரசின் நிலைப்பாடாக இருக்கிறது. மைய அரசின் ஆணையையும், உச்ச நீதிமன்றத்தின் ஆணையையும் கர்நாடக அரசு நிராகரித்திருப்பதன் மூலம் இந்தியாவில் ஓர் அரசியல் அமைப்புச் சட்டச் சிக்கலை உருவாக்கியிருக்கிறது. தமிழகத்தில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் கருகும் அபாயத்தில் உள்ளன. ஏற்கனவே டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் இந்த நெருக்கடியைத் தாள முடியாமல் தற்கொலை செய்துகொள்ள ஆரம்பித்துள்ளனர்.

இதுவரை நான்கு விவசாயிகள் அவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன. கர்நாடகாவின் பிடிவாதமான போக்கால் இன்னும் பல விவசாயிகள் தங்களை மாய்த்துக் கொள்ளக்கூடிய ஆபத்து உருவாகியுள்ளது.

தமிழகத்துக்கு உரிமையான காவிரி நீரைத் தராமல் இப்படி ஒரு அரசியல் அமைப்புச் சட்ட நெருக்கடியை உருவாக்கியிருக்கும் கர்நாடக அரசைக் கலைப்பதற்கு அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடமுள்ளது. எனினும் கர்நாடக அரசைக் கலைக்க வேண்டும் என்பதற்கு மாறாக, அரசியலமைப்புச் சட்டத்தின்படி முடக்கி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் முன்வைக்கிறது.

அதாவது மத்திய அரசு பிறப்பிக்கும் நியாயமான உத்தரவுகளை மாநில அரசு நடைமுறைப்படுத்த மறுக்கும்போது அந்த மாநில அரசை முடக்கி வைப்பதற்கு அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 365 அதிகாரம் அளிக்கிறது. மத்திய அரசின் பரிந்துரையின்படி குடியரசுத் தலைவர் இந்த நடவடிக்கையை எடுக்கலாம். உறுப்பு 356ஐப் பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலைப்பதற்குத்தான் எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளதே தவிர உறுப்பு எண் 365ஐப் பயன்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை.

கர்நாடக அரசின் அணுகுமுறை தமிழக விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளுகிறது என்பது மட்டுமல்ல, இந்தியாவின் கூட்டாட்சி முறையையே சிதைப்பதாக அமைந்திருக்கிறது. இந்த நேரத்தில் மத்திய அரசு தமது அதிகாரத்தைப் பயன்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் இந்தியா ஒரே நாடாக இருக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. எனவே மத்திய அரசு தயங்காமல் அரசியல் அமைப்புச் சட்ட உறுப்பு 365ன் கீழ் கர்நாடக அரசை முடக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.

காவிரி நீரைப் பெறுவதற்குத் தேவையான அனைத்துவிதமான சட்ட நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்கிறது என்றாலும் தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகளும் தமிழக மக்களும் ஒரே கருத்தோடு தம் பின்னே அணிவகுத்து நிற்கிறார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தத் தயக்கம் காட்டுகிறது.

உச்ச நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே நேரத்தில் இங்கிருக்கிற அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் அனைவரும் தமிழக அரசோடு ஒருங்கிணைந்து நிற்கிறார்கள் என்பதை உலகுக்குக் காட்டும் வகையில் உடனடியாக தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.

அத்துடன் தமிழக சட்டப் பேரவையில், அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 365ஐப் பயன்படுத்தி கர்நாடக அரசை முடக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிற தீர்மானத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்றும் விடுதலைச்சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியனின் அறிக்கை:

காவிரி டெல்டாப் பகுதிகளில் 16 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி பயிர்கள் தண்ணீர் சிறிதும் இன்றி கருகியிருக்கின்ற நிலையில் விவசாயிகள் கண்ணீர் வெள்ளத்தில் மிதக்கின்றனர். குறுவை சாகுபடியில் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளை சம்பா சாகுபடியிலாவது காப்பாற்றிட வேண்டும் எனும் முனைப்புடன் முதல் அமைச்சர் ஜெயலலிதா உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் நேரடியாக சென்று கர்நாடக முதல்வரைச் சந்தித்து தமிழகத்திற்கு காவிரி தண்ணீரைத் திறந்து விட வேண்டும் எனும் கோரிக்கையை வைத்துள்ளார்.

ஆனால் கர்நாடக முதல் அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் தமிழகத்திற்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூடத் தரமுடியாது என்று கூறியிருப்பது தமிழக விவசாயிகளின் தலையில் பேரிடியாக விழுந்துள்ளது.

காவிரி நீர் ஆணையத் தலைவராக இருக்கும் பிரதமரின் தீர்ப்பை ஏற்க மறுக்கும் மாநில அரசை அரசியலமைப்புச் சட்டத்தின்படியே கலைத்து விடலாம். இந்திய அரசின் இறையாண்மைக்கு சவால் விடுகின்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தலைவணங்க மறுகின்ற மாநில அரசை உடனடியாகக் கலைப்பதுதான் மன்மோகன்சிங் அரசு செய்ய வேண்டிய முதல் காரியம் ஆகும்.

கர்நாடகத்தில் பிறக்கும் காவிரி நீரை தமிழகத்திற்குத் தரமுடியாது என்று கர்நாடக அரசு அடம்பிடித்தால் தமிழ்நாட்டில் உள்ள நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தை கர்நாடகத் திற்குத் தரக்கூடாது என்று தமிழரிடையே குரல் எழுவது தவிர்க்க முடியாதது.

தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணனின் அறிக்கை:

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதி மன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற கர்நாடக, தமிழக முதல்வர்களின் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இப்போது பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ள நிலையில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுக போவதாக தமிழக முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவர் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழக பாரதீய ஜனதா கட்சி உறுதுணையாக இருக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். பிரதமர் மன்மோகன் சிங் தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டுமெனவும், இரு மாநிலமக்களது உணர்வுகளோடு சம்மந்தப்பட்டது என்பதால் கர்நாடகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் தமிழக விவசாயிகளின் நலனை கருதி காவிரியில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். காவிரி நதிநீர் பிரச்சனைக்கு வாஜ்பாய் கொண்டு வந்த தேசிய நதிநீர் திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் அறிவிக்க வேண்டும்.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ.நெடுமாறனின் அறிக்கை:

எதிர்பார்த்தபடியே கர்நாடக முதல் அமைச்சர் தமிழகத்திற்கு காவிரி நீர் தர மறுத்துவிட்டார். காவிரி பாசனப்பகுதியில் வாடிக்கொண்டிருக்கும் சம்பாப் பயிரில் கணிசமான பகுதியையாவது காப்பாற்ற அப்பகுதி விவசாயிகளுக்குத் தங்குத் தடையில்லாத மின்சாரத்தை உடனடியாக வழங்கவேண்டும்.

அதற்காக தொழிற்சாலைகளும் வணிக நிலையங்களும் தங்களின் மின்சாரத் தேவையில் ஒரு பகுதியைக் குறைத்துக்கொண்டு விவசாயிகளுக்கு உதவ முன்வரவேண்டும். உடனடியாகக் அனைத்துக் கட்சிகள், அனைத்து விவசாய அமைப்புகள் ஆகியவற்றின் கூட்டத்தை முதல் அமைச்சர் கூட்டி அடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆராய வேண்டும்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அறிக்கை:

காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடக மாநில அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க மறுத்துள்ள கர்நாடக அரசை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிப்பதோடு, காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழக முதல்வர் அனைத்துக் கட்சி மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளின் அவசர ஆலோசனைக் கூட்டத்தை கூட்டவேண்டும்.

இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் டி.ஆர். பாரிவேந்தரின் அறிக்கை:

தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவும், கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரும் சந்தித்து காவிரி நதிநீர் சம்மந்தமாக நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியடைந்துள்ளது. எனவே இன்று (வெள்ளிக்கிழமை) உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், மத்திய அரசு கர்நாடகாவில் உள்ள அணைகளை அவசர சட்டத்தின் மூலம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வேண்டும்.

பின்னர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி கர்நாடக மற்றும் தமிழக பாசனத்தின் தேவைக்கேற்ப நதிநீரை பிரித்துக்கொள்ளலாம். இதைத் தவிர தமிழ்நாட்டு விவசாயிகளை காப்பாற்றுவதற்கு வேறு எந்த வழியும் இல்லை என்கிற நிலையில் மத்திய அரசு அதிரடியாக இம்முடிவை எடுக்கவேண்டும்.

காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுத்துள்ள கர்நாடக அரசுக்கு இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஜவஹர் அலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+