திருச்சி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி! ஆபரேஷன் செய்த மூதாட்டியின் கால் கட்டை விரலை கடித்த எலி!
திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் 60 வயது மூதாட்டிக்கு எலும்பு மூட்டு சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் இன்று அதிகாலை வார்டில் சுற்றிக் கொண்டிருந்த எலி ஒன்று அந்த பெண்ணின் கால் கட்டை விரலை கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம் பொன்மலை அருகே ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ் கொடி (60). எலும்பு மூட்டு சிகிச்சைக்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டில் எலித்தொல்லை இருந்ததாக சொல்லப்படுகிறது.
எலி தொல்லை இன்று அதிகாலை அதிகமாக இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் மூதாட்டியின் படுக்கைக்கு வந்த எலி, தமிழ்கொடியின் கால் கட்டை விரலை கடித்ததாக சொல்லப்படுகிறது.
வலியால் அலறிய அவருக்கு மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து மூதாட்டியின் விரலை பரிசோதித்து தடுப்பூசியை செலுத்தினர். அரசு மருத்துவமனையில் எலி தொல்லை இருப்பதை கட்டுப்படுத்தாமல் இன்று மூதாட்டியின் விரலை கடித்த சம்பவம் நோயாளிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எலி கடித்த பிரச்சனை அதிகாலையில் நடந்துள்ள நிலையில் மருத்துவத் துறை அமைச்சர் அருண் ராஜோ ரோகிணி தியேட்டரில் ஜனநாயகன் படம் பார்க்க சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.
இதே போல் கடந்த 2012 ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணியில் கஸ்தூரிபா காந்தி தாய்- சேய் நல அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த பச்சிளம் குழந்தையின் உடலை எலி கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அந்த மருத்துவமனையில் எடை குறைவாக பிறந்த ஒரு குழந்தையை இன்குபேட்டரில் வைத்து பராமரித்த போது அந்த குழந்தை 12 நாட்களாக இன்குபேட்டரில் வைக்கப்பட்ட நிலையில் அது இறந்துவிட்டது. இதுகுறித்து தகவலறிந்த உறவினர்கள் குழந்தையின் உடலை பெற்ற போது அதிர்ச்சி காத்திருந்தது. குழந்தையின் கன்னம், மூக்கு உள்ளிட்ட பகுதிகளை எலி குதறியிருந்தது. இதை உறவினர்கள் கேட்ட போது பெருச்சாளி, அல்லது பூனை கடித்திருக்கும் என ஒரு நர்ஸ் சர்வசாதாரணமாக சொன்னதாக அதிர்ச்சி தகவல் வந்தது. இதையடுத்து புகாரின் பேரில் அங்கு டூட்டியில் இருந்த டாக்டர்கள், நர்சுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
