காளகஸ்தி கோவில் மேற்கூரை விரிசல்: மழைநீர் புகுந்து பக்தர்கள் அவதி
காளகஸ்தி: காளகஸ்தி கோவிலின் மேற்கூரையில் விரிசல் விழுந்துள்ளதால் மழைநீர் கோவிலுக்குள் புகுந்து பக்தர்களை அவதிக்குள்ளாக்கி வருகிறது.
ராகு - கேது பரிகாரத்தலமாக போற்றப்படுவது காளகஸ்தி வாயுலிங்கேஸ்வரர் ஆலயம். இங்கு ராகு-கேது தோஷ நிவாரண பூஜைக்காக தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் ராகு-கேது பெயர்ச்சி நடைபெற்றதை ஒட்டி காளகஸ்தியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இந்த கோவிலின் கருவறை மேற்கூரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே பெயர்ந்தும் காணப்படுகின்றன. இந்தநிலையில் அங்கு தொடர் மழை பெய்து வருவதால் மேற்கூரை விரிசல்கள் மூலம் மழைநீர் கோவிலுக்குள் வடிகிறது. கோவில் முழுவதிலும் மழை நீர் புகுந்துள்ளதால் பக்தர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காளகஸ்தி கோவிலின் ராஜகோபுரம் விரிசல் காரணமாக இடிந்து விழுந்தது. இப்போது கோவிலின் உள்ளே கருவரை மட்டுமல்லாது குருதட்சிணாமூர்த்தி சன்னதி, சனீஸ்வர சன்னதி, துர்காதேவி சன்னதி போன்றவற்றில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அவை மூலம் மழை நிர் வடிந்து கோவில் முற்றிலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது என்று பக்தர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
எனவே உடனடியாக கோவில் நிர்வாகிகள் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications