கேட் மிடில்டன் இப்பதான் 3 மாசம்.. அதுக்குள்ள ஆரம்பிச்சிட்டாங்க பந்தயம்
லண்டன்: இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டன் மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதாக புனித ஜேம்ஸ் மாளிகை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அவரது கர்ப்பச் செய்தி வெளியாகிய சில நிமிடங்களிலேயே வில்லியம் - கேட் தம்பதியருக்கு பிறக்கப்போவது ஆணா, பெண்ணா என்ற சூதாட்டம் தொடங்கிவிட்டது. ஆண் குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைக்கப்படலாம், அதுவே பெண் குழந்தையாக இருந்தால் என்ன பெயர் வைக்க வாய்ப்பு உள்ளது என்றும் இப்பவே ‘புக்கிகள்' தங்களின் சூதாட்டத்தை ஆரம்பித்துவிட்டனர்.

மூன்று மாத கர்ப்பம் உறுதி
கேட் மிடில்டன் தற்போது 12 வாரங்கள் கர்ப்பமாக இருக்கிறார். இதற்காக மருத்துவமனையில் ஆரம்ப கட்ட மருத்துவ பரிசோதனைக்காக லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் சில நாட்கள் அங்கேயே அவர் தங்கியிருப்பார்.

எலிசபெத் அல்லது டயானா
கேட் - வில்லியம் தம்பதியின் கர்ப்பச் செய்தி வெளியான உடன் என்ன பெயர் வைப்பார்கள் என்று புக்கிகள் பந்தையத்தை ஆரம்பித்துவிட்டார்கள். பெண் குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு ராணி எலிசபெத் பெயர் சூட்ட வாய்ப்புள்ளது என்று 8ல் ஒருவர் கூறியுள்ளனர். அதெல்லாம் இல்லை வில்லியம்ஸ் அம்மாவான டயானாவின் பெயரை சூட்ட வாய்ப்புள்ளது என்று 12ல் ஒருவர் கூறியுள்ளனராம்.

சார்லஸ் அல்லது ஜேம்ஸ்
அதேசமயம் ஆண் குழந்தை பிறந்தால் அதற்கு ஜான் அல்லது சார்லஸ் என்ற பெயர் சூட்டப்படலாம் என்று 10ல் ஒருவர் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து ஜேம்ஸ் என்ற பெயரை 12ல் ஒருவரும் கூறியுள்ளனர்.

தாய்மாமன் பெயரை வைக்கலாமோ?
இளவரசி கேட்டின் அண்ணன் பெயரான பிலிப் அல்லது ஜார்ஜ் என்ற பெயரை 14ல் ஒருவரும் தெரிவித்துள்ளனராம். ஒவ்வொரு வீட்டில் பிறந்தவன் மேல் உள்ள பாசத்தில் அந்த பெயரை தன் குழந்தைக்கு சூட்டி மகிழ்வார்களாம் பெண்கள். அதனால் இந்த பெயரை பலரும் கூறியுள்ளனர்.

எட்வர்டு கூட வைக்கலாமே
இதை எல்லாம் விட எட்வர்ட் என்ற பெயரை 16ல் ஒருவரும், ஆன்ட்ரூ என்ற பெயரை 20ல் ஒருவரும் தெரிவித்துள்ளனராம். வில்லியம்ஸ்க்கு பிலிப்ஸ் என்ற பெயர் நடுவில் வருகிறது. அதேபோல் பிறக்கும் குழந்தைக்கு ஆர்தர், மற்றும் லூயிஸ் என்ற பெயர்களில் எதை தேர்ந்தெடுப்பார்கள் என்றும் கூட ‘புக்கிகள்' பெட் கட்ட ஆரம்பித்து விட்டனராம்.

ஜெயிக்கப்போவது யாரு
இங்கிலாந்து அரசகுடும்பத்தின் இளவரசருக்கு முதல் குழந்தை பிறக்கப்போகிறது என்பதை ஒட்டி பல மில்லியன் பவுண்ட்கள் வரை சூதாட்டத்தில் புரள்கிறது. இதில் யார் ஜெயிக்கப்போகிறார்களோ தெரியலையே?

இவங்க இப்படி இருப்பாங்களோ?
புக்கிகளாவது பெயரோடு விட்டனர் ஆனால் இந்த தம்பதியினருக்குப் பிறக்கப் போகும் குழந்தை பார்க்க எப்படியிருக்கும் என வாஷிங்டனைச் சேர்ந்த தடயவியல் (forensic) படைப்பாளியான ஜோ முல்லின்ஸ் என்பவர் கணனி மூலம் படமே வரைந்து விட்டார். அவை இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நீல கண்களும் சப்பை காதும்
பிறக்கப் போகும் குழந்தை ஆணோ, பெண்ணோ அதற்கு கரும் முடியும், நீல நிறக் கண்களும் ஆலிவ் போன்ற சருமமும் இருக்கும் எனத் தெரிகின்றது. மேலும் இக்குழந்தைக்கு பிரிட்டிஷ் அரச குடும்பத்தினருக்கு உள்ளதைப் போன்றே காதுகள் சப்பட்டையாக இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.

அப்பா மாதிரியா? அம்மா மாதிரியா?
குழந்தை ஆணாக இருந்தால் அது வில்லியம்ஸின் காதுகள் தலை முடி என்பவற்றுடன் அப்பாவைப் போன்ற தோற்றத்துடன் இருக்கும் என்று கூறியுள்ளார். பெண்ணாக இருந்தால் அம்மாவைப் போல நீண்ட நெற்றியும் இதய வடிவ முகமும் நீளமான பழுப்பு நிற முடியும் கொண்டிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

குவியும் வாழ்த்துக்கள்
கேட் - வில்லியம் தம்பதிக்கு பிறக்கவுள்ள குழந்தை, எதிர்காலத்தில் இளவரசர் சார்லஸ் மற்றும் இளவசர் வில்லியம் ஆகியோரை அடுத்து சிம்மாசனத்தில் அமரும் உரிமையுடையது என்பதால் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை உட்பட உலகின் பல முக்கிய நாடுகளில் இருந்து இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.












Click it and Unblock the Notifications