சர் கிரீக்கை பாக்.க்கு கொடுப்பதா? தேசத்தை விற்கிறார் மன்மோகன்சிங்: குஜராத் முதல்வர் கடும் சாடல்
அகமதாபாத்: குஜராத் கட்ச் வளைகுடா பகுதியில் இருக்கக் கூடிய சர் கிரீக் சதுப்பு நிலத்தை பாகிஸ்தானுக்கு தாரை வார்ப்பதன் மூலம் நாட்டை விற்றுவிட்டார் பிரதமர் மன்மோகன்சிங் என்று அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி கடுமையாக சாடியிருக்கிறார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளில் ஒன்று குஜராத்தின் கட்ச் வளைகுடாவில் இருக்கும் சர் கிரீக் சதுப்பு நிலம். இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியைத்தான் பாகிஸ்தானுக்கு தாரை வார்க்கப் போகிறது இந்தியா என்று மோடி கூறி வருகிறார்.
குஜராத்தின் கட்ச் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்த நரேந்திர மோடி பேசுகையில்,
சர் கிரீக் பகுதியை பாகிஸ்தானுக்கு தாரை வார்க்கலாம் என்று நினைக்கிறது மத்திய அரசு. அதை அனுமதிக்க முடியாது. மத்திய அரசு தாரை வார்க்கவில்லை என்று இப்போது கூறுகிறது. அப்படியானால் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஏப்ரல் மாதம் இந்தியா வந்து உங்களோடு விருந்து சாப்பிட்ட போது இதைப் பற்றி நீங்கள் விவாதிக்கவில்லை என்பது உண்மையில்லையா?
பிரதமர் மட்டுமல்ல.. நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சருக்க்ம் இந்த டீல் பற்றி நன்கு தெரியும். கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் போர்பந்தர் வந்து இது தொடர்பாக விவாதிக்கவில்லையா? போர்பந்தரில் அவர் கூறினாரே, சர் கிரீக் தொடர்பாக பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என்று!
பாகிஸ்தானின் சிந்த் பகுதியைச் சேர்ந்த பிரதிநிதிகளும் குஜராத் தலைவர்களும் டிசம்பர் 2-ந் தேதி இது தொடர்பாக விவாதித்திருக்கின்றனரே....
இந்த நாட்டுக்கு தவறான தகவலைத் தருகிறார் பிரதமர் மன்மோகன்சிங். நான் ஒன்றும் தேர்தல் வாக்குப் பதிவின் போது இதை கேள்விக்குள்ளாக்கவில்லை.. ஏப்ரல் மாதம் நடந்த முதலமைச்சர்கள் மாநாட்டில் கூட கேள்வி எழுப்பினேன்.. நீங்கள்தான் வாயே திறக்கவில்லை..
2001-ம் ஆண்டு ஆக்ராவில் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சர் கிரீக் விவகாரத்தை அவர் அனுமதிக்கவில்லை.
சர் கிரீக் பகுதியை பாகிஸ்தானுக்கு தாரை வார்த்துக் கொடுத்து நாட்டின் இயற்கை வளத்தை விற்றுவிடப் போகிறார் மன்மோகன்சிங். இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் வரப்போகிறது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் விளையாட்டு ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல் என தொடர்கதையாகி இப்போது தேசத்தையே விற்கிறார் மன்மோகன்சிங் என்று சாடியுள்ளார்.
முன்னதாக நேற்று, சர் கிரீக்கை பாகிஸ்தானிடம் கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துவிட்டது என்றும் வரும் 15-ந் தேதி சர் கிரீக், பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்படுகிறது என்றும் தமக்கு தகவல் கிடைத்திருக்கிறது .. அப்படி முடிவு செய்திருப்பதை கைவிட வேண்டும் என்று பிரதமர் அலுவலகத்துக்கு நரேந்திர மோடி ஒரு கடிதம் அனுப்பியிருந்தார் இதற்குப் பதில் அளித்திருக்கும் பிரதமர் அலுவலகம், மோடியின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விவகாரமும், அதனை பொதுமக்கள் மத்தியில் வெளியிட்டுள்ள நேரமும் கேள்விக்குரியது. வாக்குப்பதிவுக்கு முந்தைய தினம் இது போன்ற சர்ச்சையை எழுப்புவது விஷமத்தனமானது. சர் கிரீக் பகுதி பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் என்ற தகவலில் உண்மையில்லை என்று கூறியிருந்தது. மோடியின் கடிதம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கேலிக்கூத்தாக இருக்கிறது என்று சாடியிருந்தார்.












Click it and Unblock the Notifications