அன்பழகனுக்கு வயது 91: கருணாநிதி நேரில் வாழ்த்து- மாலையில் சென்னையில் பொதுக்கூட்டம்
சென்னை: திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் இன்று தனது 91வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். திமுக தலைவர் கருணாநிதி அவரை நேரில் வாழ்த்தினார்.
திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் இன்று தனது 91வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பிறந்தநாளையொட்டி அவர் இன்று காலை 7.30 மணிக்கு அண்ணா, பெரியார் நினைவிடங்களுக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கீழ்பாக்த்தில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தாருடன் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினார்.
இன்று காலை 10.20 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதி அன்பழகன் வீட்டுக்கு சென்று அவரை வாழ்த்தினார். மேலும் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, மு.க.தமிழரசு, துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், சாத்தூர் ராமச்சந்திரன், பிச்சாண்டி, தங்கம் தென்னரசு, கே.பி.பி.சாமி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் அன்பழகனுக்கு பொன்னாடை போர்த்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
அவர்கள் தவிர கட்சி நிர்வாகிகள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தென் மற்றும் வடசென்னை திமுக சார்பில் நடத்தப்படும் அன்பழகனின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு தங்கசாலை மணிக்கூண்டு அருகே நடைபெறுகிறது. வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் தலைமையில் நடக்கும் விழாவுக்கு தயாநிதி மாறன், தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
இந்த விழாவில் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், தி.க. தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், சுப.வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள்.












Click it and Unblock the Notifications