மெட்ரோ நகரில் சிறுமிகளிடம் சில்மிஷம்: டெல்லி நம்பர் 1
டெல்லி: பாலியல் பலாத்கார வன்கொடுமைகளில் இந்தியாவின் தலைநகரம் டெல்லி முதலிடம் பிடித்துள்ளது. அதேபோல சில்மிஷ வழக்குகளும் டெல்லியில்தான் அதிகம் பதிவாகியுள்ளன. இந்தியாவின் மெட்ரோ நகரங்கள் என்று அழைக்கப்படும் 6 நகரங்களில் பதிவாகியுள்ள வழக்குகளில் டெல்லியில்தான் அதிக வழக்குகள் பதிவாகியுள்ளன.
கற்பழிப்பு நகரம் என்று பெயரெடுத்துள்ள டெல்லியில் கடந்த 2011- 12 ஆண்டு 453 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டு முதலிடம் பெற்றுள்ளது. இந்த தகவலே அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் பெண்களை சில்மிஷம் செய்த வழக்குகளும் டெல்லியில்தான் அதிகமாக பதிவாகியுள்ளதாக புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது.

சில்மிஷ தலை நகரம்
2011-2012 வரை, உள்துறை அமைச்சகம் எடுத்துள்ள புள்ளிவிவரத்தின் படி, டெல்லியில் சிறுமிகள் மற்றும் பெண்கள் சில்மிஷம் செய்யப்பட்டதாக 556 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2010 மற்றும் 2009ம் ஆண்டுகளில் டெல்லியில் முறையே 550 மற்றும் 491 வழக்குகள் பதிவாகியுள்ளது.

மும்பைக்கு 2 வது இடம்
2011-12ம் ஆண்டில் மும்பையில் 553 சில்மிஷ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் 2010ல் 475 வழக்குகளும் 2009ல் 400 சில்மிஷ வழக்குகளும் மும்பையில் பதிவாகி உள்ளன

கொல்கத்தா நம்பர் 3
கடந்த ஆண்டு கொல்கத்தாவில், 254 சில்மிஷ வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுவே 2010ல் 226 வழக்குகளும், 2009ம் ஆண்டு 201 சில்மிஷ வழக்குகள் பதிவாகி உள்ளன.

சென்னையில் 73
அதேசமயம் பெங்களூரில் கடந்த 2011-12ம் ஆண்டில் 250 சில்மிஷ வழக்குகளும், ஹைதராபாத்தில் 157 வழக்குகளும் பதிவாகியுள்ளன. அதேசமயம் சென்னையில் 73 சில்மிஷ வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

பெண்களுக்கு பாதுகாப்பில்லை
ஏற்கனவே பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரங்களின் பட்டியலில் டெல்லி இடம்பெற்றிருந்தது. இப்போது பாலியல் வன்முறைச்சம்பவங்களும், சில்மிஷ வழக்குகளும் அதிக அளவில் பதிவாகி பெண்களிடையே அச்சத்தை அதிகரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications