விஜயகாந்த் கையை நீட்டி, நாக்கைத் துறுத்தி.. விறுவிறுப்பான பிப்ரவரி!
2012ம் ஆண்டு பிப்ரவரி மாதமும் சும்மா இல்லை. விறுவிறுப்பும், பரபரப்பும் பற்றிக் கொண்டிருந்த மாதமாகவே முடிந்தது.
சட்டசபையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆடிய கோபாவேச ஆட்டத்தைப் பார்த்து தமிழகமே அரண்டு போனது. சங்கரன்கோவிலில் தனித்துப் போட்டி என விஜயகாந்த் அறிவிக்க, முடிந்தால் திராணியை நிரூபியுங்கள் என்று ஜெயலலிதா சவால் விட பிப்ரவரியே பிரளயமாகிப் போனது.
சசிகலா சித்தப்பா மருமகன் ராவணன் கைது, சசி தம்பி திவாகரன் கைது, கருணாநிதி மகள் செல்வியின் மருமகன் மீது நில அபகரிப்புப் புகார், விஜயகாந்த் நண்பர் ராகிம் ராவுத்தர் அதிமுகவில் இணைந்தது, வேளச்சேரியில் ஐந்து வட மாநிலத்தவர் என்கவுண்டர் என்று பிப்ரவரியும் பரபரப்பாகவே போனது.

சட்டசபையில் அதிமுக - விஜயகாந்த் போர்
சட்டசபையில் இன்று அதிமுக, தேமுதிக இடையிலான மோதல் பெரிய அளவில் வெடித்தது. விஜயகாந்த உள்ளிட்ட தேமுதிக எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
- சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் நாங்கள் தனித்து நிற்கப் போகிறாம். உங்களுக்குத் திராணி இருந்தால் தனித்து வேட்பாளரை நிறுத்துங்கள். நாங்கள் அங்கு மகத்தான வெற்றியை பெறப் போகிறோம். உங்களால் முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என்று தேமுதிகவுக்குமுதல்வர் ஜெயலலிதா பகிரங்கமாக சவால் விடுத்தார்.
- சங்கரன்கோவிலுக்கு கவர்னரின் ஆட்சியின் கீழ் இடைத் தேர்தலை நடத்துங்கள். நாங்கள் தனித்துப் போட்டியிடத் தயார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த், முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பதில் சவால் விட்டார்.
- பதிலுக்கு பேசிய முதல்வர் ஜெயலலிதா தகுதியே இல்லாத தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்காக இப்போது நான் வெட்கப்படுகிறேன்.அதிமுகவினரை திருப்திப்படுத்தவே விருப்பமில்லாமல் தேமுதிகவுடன் கூட்டணி வைத்தேன். தகுதியில்லாதவர்கள் அரசியலில் உயர் நிலையை எட்டினால் தேமுதிகவினர் போலத்தான் நடப்பார்கள் என்று காட்டமாக பேசினார்.
- சட்டசபையில் அதிமுகவினரைப் பார்த்து விஜயகாந்த் நாக்கைத் துருத்தி, கைகளை உயர்த்தி படு ஆவேசமாகப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

சட்டசபையிலிருந்து விஜயகாந்த் 10 நாள் சஸ்பெண்ட்
சட்டசபையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக அவரை 10 நாட்கள் அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அனுமதி மறுத்து இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- செய்தியாளர்ள் கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், மதுரைக்கே மல்லிகைப் பூவா, திருநெல்வேலிக்கே அல்வாவா, தேமுதிகவுக்கே சவாலா?. எங்க கிட்ட சவால் விடாதீங்க, அதுக்கெல்லாம் பயப்படுபவன் இந்த விஜயகாந்த் இல்லை. தகுதியே இல்லாத அதிமுகவுடன் சேர்ந்ததற்காக நான்தான் வெட்கப்படுகிறேன் என்று கோபமாகக் கூறினார்.

பிப்ரவரி 3
சசிகலாவின் சித்தப்பா மருமகன் ராவணன் ரூ. 1 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
- சசிகலாவன் தம்பியான திவாகரனை நீடாமங்கலம் போலீஸார், திருச்சி அருகே செக்போஸ்ட்டில் வைத்து கைது செய்தனர். உடனடியாக அவரை திருச்சி சிறையிலும் கொண்டு போய் அடைத்தனர்.

அரசு கொடுத்த காரை திருப்பிக் கொடுத்தார் விஜயகாந்த்
சட்டசபையிலிருந்து 10 நாட்கள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தனக்கு வழங்கப்பட்ட அரசுக் காரை திரும்ப ஒப்படைத்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

கருணாநிதி மகள் செல்வி மருமகன் மீது நில அபகரிப்பு முயற்சி புகார்
திமுக தலைவர் கருணாநிதியின் மகளான செல்வியின் மருமகன் ஜோதிமணி உள்பட 4 பேர் மீது சென்னை மதுரவாயல் அருகே உள்ள 28.77 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது.

விஜயகாந்த் நண்பர் ராகிம் ராவுத்தர் அதிமுகவில் இணைந்தார்!
விஜயகாந்த்தின் சிறு வயது முதல் உற்ற தோழனாக விளங்கி, விஜயகாந்த் திருமணத்திற்குப் பிறகு அவரை விட்டு ஓரம் கட்டப்பட்ட இப்ராகிம் ராவுத்தர் இன்று அதிமுகவில் இணைந்தார்.
சங்கரன்கோவிலில் தேர்தல் பணியாற்ற 26 அமைச்சர்கள் ஒதுக்கீடு
சங்கரன்கோவில் தொகுதியில் இடைத் தேர்தல் பணியாற்ற 26 அமைச்சர்கள் உள்பட 34 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

பிப்ரவரி 9
சென்னை பிராட்வே ஆர்மீனியன் தெருவில் உள்ள செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் ஆண்கள் பள்ளியில் இந்தி ஆசிரியை உமா மகேஸ்வரியை அவரது வகுப்பு மாணவன் வகுப்பறையிலேயே கத்தியால் குத்திக்கொலை செய்தான்.

பிப்ரவரி 10
சங்கரன் கோயில் இடைத் தேர்தலில் மதிமுக தனித்துப் போட்டி - வைகோ
சங்கரன்கோயில் இடைத் தேர்தலில் மறுமலர்ச்சி திமுக தனித்துப் போட்டியிடப் போவதாக வைகோ அறிவித்தார்.

பிப்ரவரி 11
மின்வெட்டுக்கு எதிராக கோவையில் பல்லாயிரம்பேர் ஆர்ப்பாட்டம் - தடியடி!
கோவையில் 8 மணி நேர மின்வெட்டைக் கண்டித்து 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டன. 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். பல ஆயிரம் பேர் சேர்ந்து மறியல் போராட்டத்தில் குதித்ததால் போலீஸார் தடியடி நடத்திக் கலைத்து விரட்டினர்.

பிப்ரவரி 12
அதிமுக அமைப்புச் செயலாளரானார் பி.எச்.பாண்டியன் நியமனம்
அதிமுகவின் அமைப்புச் செயலாளராக பி.எச்.பாண்டியனை நியமனம் செய்து ஜெயலலிதா உத்தரவிட்டார்.

பிப்ரவரி 14
பொய்யான வழக்கை ரத்து செய்யக் கோரி குஷ்பு வழக்கு
தேர்தல் விதிகளை மீறியதாக நத்தம் போலீசார் போட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகை குஷ்பு மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

பிப்ரவரி 15
திமுகவில் தலைவர் பதவி கொடுத்தால் ஏற்பேன்-அழகிரி
சென்னையில் தன்னைச் சந்தித்த செய்தியாளர்களிடம், திமுக தலைவர் பதவியை என்னிடம் கொடுத்தால் ஏற்பேன் என்று கூறினார் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி.

பிப்ரவரி 16
மார்ச் 18ம் தேதி சங்கரன்கோவில் இடைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

சென்னையில் நடராஜன் கைது!
சொத்துக் குவிப்பில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு தொடர்பும் இல்லை, எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பு என்று பெங்களூர் தனி நீதிமன்றத்தில் சசிகலா கண்ணீர் வாக்குமூலம் அளித்த நிலையில், சென்னையில் அவரது கணவர் நடராஜன் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டார்.

பிப்ரவரி 20
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தா.பாண்டியன் மீண்டும் தேர்வு
ராஜபாளையத்தில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் கட்சியின் மாநிலச் செயலாளராக மீண்டும் தா.பாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- திருப்பூரில் உள்ள ஆலுக்காஸ் நகைக் கடைக்குள் ஓட்டை போட்டு நுழைந்த கொள்ளையர்கள் கடையில் இருந்த ரூ. 14 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றதால் திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டது.

பிப்ரவரி 21
விஜயகாந்த்துக்கு 'டபுள் ஆக்ட்'-தேமுதிக தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் தேர்வு!
சென்னை, வானகரம், ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று நடந்த தேமுதிகவின் பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் இரண்டு பதவிகளுக்கும் விஜயகாந்த்தை ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர்.

பிப்ரவரி 23
சென்னையை பரபரப்பில் ஆழ்த்திய 5 கொள்ளையர்கள் என்கவுண்டர்
சென்னை பெருங்குடி பாங்க் ஆப் பரோடா மற்றும் கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில் துணிகரமாக கொள்ளையடித்த வட மாநில கொள்ளையர்கள் ஐந்து பேரையும் சென்னை போலீஸார் வேளச்சேரியில் வைத்து இன்று சுட்டு வீழ்த்தினர். ஹாலிவுட் திரைப்படங்களையும் மிஞ்சும் வகையில் இன்று அதிகாலையில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த என்கவண்ட்டர் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிப்ரவரி 26
புதிய மின்வெட்டு அமலுக்கு வந்தது-சென்னைக்கு 2 மணி நேரம்
தமிழகத்திலும், சென்னையிலும் இருந்து வரும் மின்வெட்டு நேரம் மாற்றியமைக்கப்பட்டு புதிய மின்வெட்டு இன்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி சென்னை மின்வெட்டுநேரம் 2 மணி நேரமாக அதிகரித்தது. தமிழகத்தின் பிற பகுதிகளில் பல மணி நேரமாக மாறிப் போனது.

பிப்ரவரி 28
கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது - நிபுணர் குழு
கூடங்குளம் அணு தொலை தொடர்பான மாநில அரசின் வல்லுநர் குழு இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் அறிக்கை தாக்கல் செய்தது. கூடங்குளம் அணு உலை மிகவும் பாதுகாப்பானது என்று இக்குழு தமது அறிக்கையில் கூறியிருந்தது.

ஜெயலலிதாவுடன் உதயக்குமார் சந்திப்பு
கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரம் தொடர்பாக மாநில அரசின் குழு தனது அறிக்கையை முதல்வர் ஜெயலலிதாவிடம் நேற்று தாக்கல் செய்து விட்ட நிலையில் இன்று முதல்வரை சந்தித்தார் போராட்டக் குழுத் தலைவர் உதயக்குமார். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
கணவருடன் வாழ விடாமல் தடுக்கிறார்- சங்கரன்கோவில் முத்துச்செல்வி தந்தை மீது மருமகள் புகார்
சங்கரன்கோவில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வியின் சகோதரர் மனைவி சமுத்திரக்கனி, தன்னை தனது கணவருடன் வாழ விடாமல் அவரது தந்தை தடுப்பதாக கூறி போலீஸில் புகார் கொடுத்தார்.












Click it and Unblock the Notifications