கிறிஸ்துமஸ் பண்டிகை: கருணாநிதி, விஜயகாந்த், ராமதாஸ், வைகோ, வாசன் வாழ்த்து

திமுக தலைவர் கருணாநிதி தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
மனித நேயம் தழைக்க வழி காட்டிய மாமனிதர் ஏசு பெருமான் பிறந்த பொன்னாளைக் கிறிஸ்துமஸ் திருநாளாகக் கொண்டாடும் கிறிஸ்தவ சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
சமயப் பணிகள் ஆற்றிட வந்து தமிழ் மொழிக்குத் தொண்டுகள் செய்த தூயவர்களாம் வீரமா முனிவர், ஜி.யு. போப், கால்டுவெல் ஆகியோர்க்குச் சென்னைக் கடற்கரையில் 1968ல் சிலைகள் நிறுவிச் சிறப்புகள் செய்தோம். தமிழ் மொழியின் மேன்மையை மேதினிக்கு உணர்த்திய அறிஞர் கால்டுவெல் அவர்கள் நெல்லை மாவட்டம் இடையன்குடியில் வாழ்ந்த வீட்டினை அரசுடைமையாக்கி புதுப்பித்து, அங்கும் அவரது சிலையை நிறுவி நினைவு இல்லமாக்கி அவரைப் பெருமைப்படுத்தியுள்ளோம்.
பிற்படுத்தப்பட்டோர்க்கான சலுகைகளை 1974 முதல் அனைத்துத் தலைமுறையினர்க்கும் நீட்டித்து இலட்சக்கணக்கான கிறிஸ்தவக் குடும்பங்கள் பயன்பெறச் செய்தோம். 1989-ல் மாநிலச் சிறுபான்மையினர் நல ஆணையம் அமைத்தோம்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தைத் தனி அமைப்பாக நிறுவினோம். சிறுபான்மையினர் நல இயக்ககம் எனும் புதிய இயக்குநர் அலுவலகத்தை 2007இல் ஏற்படுத்தி, அரசின் சலுகைகளை விரைந்து பெற வழிவகுத்தோம்.
கிறிஸ்தவ குருமார்களின் கோரிக்கையை ஏற்று 1991 ஜுன் முதல 1999 மே வரை அரசு அங்கீகாரம பெற்றுச் சுயநிதியில் இயங்கி வரும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையல்லாத பள்ளிகளுக்கு 2011இல் 11 ஆயிரத்து 307 ஆசிரியர் பணியிடங்களையும், 648 ஆசிரியர் அல்லாத பணியிடங்களையும் ஆண்டுக்கு 331 கோடி ரூபாய்ச் செலவில் ஏற்படுத்தித் தந்தோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வாழ்த்துச் செய்தி:
சமுதாயத்தில் நலிந்த பிரிவினருக்கு இறுதிவரை தொண்டு செய்த பெருமை ஏசு கிறிஸ்து அவர்களுக்கு உண்டு. மனித குலம் மேம்பட தன் உயிரையே தியாகம் செய்தவரும் அவரே ஆவார். தொண்டும், தியாகமும் உயர்ந்த குறிக்கோள்களாகும். இதனாலேயே உலகமெங்கும் அவர் இன்று கொண்டாடப்படுகிறார்.
இந்த கிறிஸ்துமஸ் நன்னாளில் குடும்பங்கள் தோறும் மனநிம்மதியும், மகிழ்ச்சியும் திகழ்ந்திடவும், வரும் காலம் இருள் நீங்கி ஒளிமயமாக அமைந்திடவும் எனது இதயமார்ந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனின் வாழ்த்துச் செய்தி,
பெத்லகேமில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த ஏசு பிரானை அன்று துதித்தவர்கள் 'பூமியிலே சமாதானமும், மனுஷரிடைய பிரியமும் உண்டாவதாக' என்று ஆனந்தமாய் முழங்கிப் போற்றினார்கள். அவர் மாந்தருக்கு அருளிய அற்புதமான அப்போதனைகளை மனதில் ஏற்று நாட்டில் அமைதி, சமாதானம் மேலோங்கிட, வன்முறை ஒழிந்திட, அனைவரிடையேயும் அன்பு, பாசம், கருணை, மகிழ்ச்சி பொங்கிட, சாதி, மத, இன வேற்றுமைகளை மறந்து நல்லிணக்கம் பேணிக்காப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வாழ்த்து,
ஏசுபிரான் காட்டிய அன்பு வழியில் நடந்தால் அனைவரையும் ஒன்றாக நேசிக்கும் பண்பை வளர்த்தால் உலகில் அமைதியும், மகிழ்ச்சியும், ஒற்றுமையும், உயர்வும் நின்று நிலைக்கும். ஆகவே அவர் காட்டிய அன்பு வழியில், அறவழியில் நடக்க அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும்.
அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமனின் வாழ்த்துச் செய்தி,
அன்பு, சமாதானம், இரக்கம் இவற்றின் வடிவம் ஏசு கிறிஸ்து. இப்பொழுது இந்த நாட்டிற்குத் தேவைப்படும் அருமருந்தாகவும் அதுவே உள்ளது. மனித இனம் அன்பைத் தொலைத்துக் கொண்டிருக்கிறது. பூமிக்கு ஒரு புதுவிடியல் நேர வேண்டும் என்றால் சமாதானத் தூதுவனின் நெறி ஒன்றே அதனைச் செய்யும். 'புது உலகம் அது போரில்லா உலகம்' என்ற தகவலைச் சுமந்து தேவனின் சமாதானப் புறாக்கள் பறக்க வேண்டிய நேரம் இது. உலகெங்கும் உள்ள கிறிஸ்துவப் பெருமக்கள் இந்த உறுதிப்பாட்டை உலகிற்கு எடுத்துச் சொல்லட்டும்.
தமிழ்நாடு வர்த்தக காங்கிரஸ் தலைவர் வசந்தகுமார் வாழ்த்து,
இறைவேந்தர் ஏசுபிரான் பிறந்த தினத்தை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
பகைவருக்கும் அருளும் பாங்கினையும், அன்பாலே அகிலத்தை வெல்லலாம் என்ற போதனையையும் போதித்த ஏசு பிரானின் அறவழியை கடைபிடித்து உலகம் முழுவதும் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவ இந்நன் நாளில் அனைவரும் உறுதியேற்போம்.
லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் வாழ்த்து,
மாட்டு தொழுவத்தில் உதித்தவர், மனிதநேயத்தை மதித்தவர், மண்ணில் புனிதம் பதித்தவர், மன்னிக்கும் குணம் போதித்தவர், மாண்புகளை காக்க வாதித்தவர், மரணித்த பின்னும் சாதித்தவர், பளுவை ஏந்தியவர், சிலுவை தாங்கியவர், பாரத்தை சுமந்தவர், பாவத்தை போக்கியவர், பூவுலகை இரட்சிக்க பிறந்தவர்.
அந்த புனிதர் பிறந்த இந்நாள் அது பொன்னாள். இந்த கிறிஸ்துமஸ் நன்னாளில் மண்ணுலகம் பூத்துக்குலுங்க, மனிதநேயம் தழைத்து ஓங்க லட்சிய தி.மு.க. சார்பில் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
சமாதானப் பிரபு திருச்சபைகள் தலைவர் பேராயர் ஜேம்ஸ் சந்தோஷம் வாழ்த்து,
இறைவன் தமது குமாரனையே இந்த உலகத்திற்கு ஈவாக கொடுத்தார். விலை மதிப்பில்லாத அவரை வெகுமதியாக நமக்கு கொடுத்துவிட்டார். கிறிஸ்துமஸ் என்பது மற்றவர்களுக்கு முடிந்த அளவு உதவி செய்து கொண்டாடப்பட வேண்டிய பண்டிகையாகும். ஏசுவைப் போல் மனித நேயத்தோடும், மனித மாண்புகளோடும் நடந்துகொள்வோம். அவரது போதனைகளின்படி சகோதரத்துவம், சமத்துவம், சம நிலைப்பிரமாணம் தேசம் எங்கும் செழிக்க பாடுபடுவோம்.
ஏசுபிரான் காட்டிய அன்பு வழியில் நடந்தால் அனைவரையும் ஒன்றாக நேசிக்கும் பண்பை வளர்த்தால், உலகில் அமைதியும், மகிழ்ச்சியும், ஒற்றுமையும், உயர்வும் நின்று நிலைக்கும். ஆகவே அவர் காட்டிய அன்பு வழியில், அறவழியில் நடக்க அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்த்து,
உலகம் முழுவதும் அன்பு, கருணை, ஆனந்தம் ஆகியவை நிலவ வேண்டும் என்று விரும்பியவர் ஏசுபிரான். மனிதர்களிடத்தில் மட்டு மின்றி மற்ற உயிர்களிடத்திலும் பாசத்தையும், கருணையையும் வெளிப்படுத்தியவர் அவர். ஆனால், இன்று தங்களுக்கு பிடிக்காதவர்களை எப்படியாவது பழிவாங்கும் போக்கும், ஏமாற்றும் போக்கும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையை மாற்றி மண்ணில் மனித நேயம் தழைக்க பாடுபட வேண்டும்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து,
மனிதகுலத்தை இரட்சிப் பதற்காகவும், பாவங்களில் இருந்து மீட்பதற்காகவும் கர்த்தராகிய ஏசுநாதர், துன்பப்பாடுகளைச் சுமந்தார். சக மனிதர்களின் துன்பத்தைப் போக்கவும், கண்ணீரைத் துடைக்கவும் கருணையோடு அன்புகாட்டும் உன்னதமான நெறியை தான் பட்ட சிலுவைப்பாடுகளால் மனித குலத்துக்கு உணர்த்தினார்.
ஏசு பெருமானின் பிறந்த நாளாகிய கிறிஸ்துமஸ் பண்டிகை நன்னாளைக் கொண்டாடும் கிறிஸ்தவப் பெருமக்களுக்கு அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வாழ்த்து,
ஒருவரையொருவர் நேசிக்கும் உயர்ந்த பண்பை, மனித நேயத்தை வளர்த்துக் கொள்வதன் மூலமே சமூகத்தில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்பதை தம் வாழ்வின் செய்தியாக உலகுக்கு கூறியவர் தான் இயேசு பெருமான். அத்தகைய நன்னாளில் சாதி, மத எல்லைகளை கடந்து அன்பு, கருணை போன்ற அறவழியில் மானுடத்தை போற்ற அனைவரும் உறுதியேற்போம்.
அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமன் வாழ்த்து,
அன்பு, சமாதானம், இரக்கம் இவற்றின் வடிவம் ஏசு கிறிஸ்து. இப்பொழுது இந்த நாட்டிற்குத் தேவைப்படும் அருமருந்தாகவும் அதுவே உள்ளது. மனித இனம் அன்பைத் தொலைத்துக் கொண்டிருக்கிறது. பூமிக்கு ஒரு புதுவிடியல் நேர வேண்டும் என்றால் சமாதானத் தூதுவனின் நெறி ஒன்றே அதனைச் செய்யும். புது உலகம் அது போரில்லா உலகம் என்ற தகவலைச் சுமந்து தேவனின் சமாதானப் புறாக்கள் பறக்க வேண்டிய நேரம் இது. உலகெங்கும் உள்ள கிறிஸ்துவப் பெருமக்கள் இந்த உறுதிப்பாட்டை உலகிற்கு எடுத்துச் சொல்லட்டும்.
இந்திய சிறுபான்மை மற்றும் கிறிஸ்தவ கூட்டமைப்பு தலைவர் பேராயர் டாக்டர் எம்.பிரகாஷ் வாழ்த்து,
ஏசு பிறந்தபொழுது உலகத்திலே சமாதானமும் மனுஷர் மேல் பிரியமும் உண்டாவதாக என்று இறைத்தூதர்கள் அறிவித்தார்கள். இந்த கிறிஸ்துமஸ் நன்னாளில் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் இறைவன் உங்களுக்கு ஆசீர்வாதமாக தந்தருளுவாராக.
அவர்கள் தவிர முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழ்நாடு மதச்சார் பற்ற ஜனதாதள பொதுச் செயலாளர் இதயவண்ணன், ஐக்கிய ஜனதாதளம் தலைவர் ராஜகோபால், இந்திய தேசிய முஸ்லிம் லீக் தலைவர் ஜவஹர் அலி, சிறுபான்மை சமூக புரட்சி இயக்க தலைவர் கா.லியாகத்அலி கான், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை வடசென்னை மாவட்ட தலைவர் வியாசை எம்.மணி, நாடார் மக்கள் இயக்க தலைவர் டேனியல், மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழக தலைவர் பி.பாலசுப்பிர மணியன், சமத்துவ மக்கள் கட்சி வடசென்னை மாவட்ட செயலாளர் எம்.ஏ.சேவியர், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக்தாவூத், அருந்ததி மக்கள் கட்சி தலைவர் வலசை ரவிச்சந்திரன், தலித் மக்கள் முன்னணி தலைவர் குமரி அருண் ஆகியோர் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications