தற்கொலை முடிவை கைவிடுங்க... விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும்: முதல்வர் ஜெ. அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: காவிரி டெல்டா விவசாயிகளுக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்பதாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்பதாலும் தற்கொலை முடிவை கைவிடுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டிற்கு உரிமைப்படி கிடைக்க வேண்டிய காவிரி நீர் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இடர்பாடு காலங்களில் நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை கர்நாடகத்திலிருந்து பெற முடியும் என்ற அடிப்படையிலும், வடகிழக்கு பருவமழை இயல்பான அளவில் இருக்கும் என்ற அடிப்படையிலும், புதிய விவசாய உத்திகளை கையாள்வதன் மூலம் இயல்பான பரப்பில் சம்பா சாகுபடி மேற்கொள்வதற்கு ஏதுவாக செப்டம்பர் 17-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

தண்ணீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, ரூ.68 கோடியே 10 லட்சம் மதிப்பில் சிறப்பு தொகுப்பு திட்டம் ஒன்றை ஆகஸ்டு மாத இறுதியில் நான் அறிவித்தேன்.
பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிரை காப்பாற்றிட ரூ.69 கோடியே 88 லட்சம் செலவில் கூடுதல் சிறப்பு தொகுப்பு திட்டம் ஒன்றினை நான் கடந்த 5-ந் தேதி அறிவித்தேன். அதன்படி, காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள மின்சார பம்பு செட்டுகளை இயக்கி நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்காக கடந்த நவம்பர் மாதம் 29-ந் தேதி முதல் பகலில் 6 மணி நேரம் இரவில் 6 மணி நேரம் என ஒரு நாளைக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

முன் எப்போதும் இல்லாத வகையில் காவிரி டெல்டா விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர் காப்பீட்டு கட்டணத்தை முழுமையாக அரசே செலுத்தியுள்ளது. இதன்படி 5.51 லட்சம் விவசாயிகள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம், காவிரி டெல்டா விவசாயிகள் அனைவருக்கும் விவசாய காப்பீட்டு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.இடர்பாடு காலங்களில், நீர் பங்கீட்டு விகிதாச்சாரத்தில், கர்நாடகம் 110 டிஎம்சி அடி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்கியிருக்க வேண்டும் என்றாலும், இதுவரை மேட்டூர் நீர்த்தேக்கத்தில் 63 டிஎம்சி அடி தண்ணீரே பெறப்பட்டுள்ளது. எனவே, மேட்டூர் அணையில் நீர் இருப்பு 8.582 டிஎம்சி அடி தண்ணீராக குறைந்ததையடுத்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட இயலாத சூழ்நிலையில், மேட்டூர் அணையிலிருந்து நீர்ப்பாசனத்திற்கு விடுவிக்கப்படும் நீர் கடந்த 21-ந் தேதி மாலை முதல் நிறுத்தப்பட்டு, தற்போது குடிதண்ணீருக்கு மட்டுமே தண்ணீர் விடுவிக்கப்பட்டு வருகிறது.

வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதத்தில் பொய்த்துவிட்டதன் காரணமாகவும், கர்நாடகம் தமிழகத்துக்குரிய தண்ணீரை விடுவிக்காததன் காரணமாகவும், மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் வழங்குவது நிறுத்தப்பட்டு உள்ளதாலும், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சம்பா பயிரை காப்பாற்ற இயலுமா என்ற கவலையில் உள்ளனர் என்பதை நான் அறிவேன். கர்நாடகம் குறைந்தபட்சம் 18 டிஎம்சி அடி நீரை விடுவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு அடுத்த மாதம் (ஜனவரி) 4-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது, உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவதற்கான ஆணையை வழங்கும் என நம்புகிறேன்.

தற்போது வழங்கப்பட்டு வரும் மும்முனை மின்சாரம் சம்பா சாகுபடி காலம் முடியும் வரை தொடர்ந்து கிடைத்திடும் என்பதை நான் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன்மூலமும், ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி புதிய உத்திகளை கடைப்பிடிப்பதன் மூலமும், சம்பா சாகுபடி பெருமளவில் காப்பாற்றப்பட்டுவிடும் என நான் நம்புகிறேன்.சம்பா பயிர் காப்பாற்ற இயலாத விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகை முழுவதையும் எனது அரசு வழங்கும் என்பதை நான் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். நான் ஏற்கனவே அறிவித்துள்ளபடி, பயிர் இழப்பு ஏற்படும் விவசாயிகளுக்கு, வேளாண் காப்பீட்டு திட்டம் மற்றும் பேரிடர் நிவாரண நிதி ஆகியவற்றிலிருந்து ஏக்கர் ஒன்றுக்கு மொத்தம் ரூ.13,692 வரை வழங்கப்படும்.

விவசாயிகளின் பாதுகாவலனாக திகழும் எனது அரசு, நெற்பயிரைக் காப்பாற்றவும், பயிர் இழப்பு ஏற்பட்டால் முழுமையான நிவாரணம் வழங்கவும், அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ள இந்த சூழ்நிலையில் விவசாயிகள் எவரும், எந்தவித கவலையோ, அச்சமோ கொள்ள வேண்டியதில்லை என்றும், அவர்கள் எந்த விபரீத முடிவையும் எடுக்க வேண்டாம் என்றும் விவசாயப் பெருமக்களை நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இயற்கை பொய்த்துவிட்டாலும், கர்நாடகம் வஞ்சித்தாலும், மத்திய அரசு அலட்சியமாக இருந்தாலும், அவை காரணமாக தமிழக விவசாயிகள் எவ்வித துன்பம் அடைவதை நான் ஒருபோதும் சகித்துக் கொள்ளமாட்டேன். சம்பா பயிர் இழப்பு ஏற்பட்டால், உரிய நிவாரணம் வழங்கி விவசாயிகளுக்கு உறுதுணையாக அவர்களை பாதுகாக்கும் அரணாக எனது அரசு விளங்கும் என்பதை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+