கூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழகத்துக்கே - ஜெ பேச்சு

இந்தக் கூட்டத்தில் தனக்கு போதிய நேரம் ஒதுக்கவில்லை என்று கோபத்துடன் ஜெயலலிதா வெளியேறிவிட்டாலும், கூட்டத்தில் அவரது 28 பக்க உரை பதிவு செய்யப்பட்டது.
அதில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:
தற்போது தமிழகத்தில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான திட்டங்களை மிகுந்த சிரத்தை எடுத்து போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. 2015-ம் ஆண்டில் தமிழகம் மிகைமின் மாநிலமாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். ஆனால், இந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நிதி மேலாண்மையில் உள்ள கட்டுப்பாடுகள் பெரிய தடையாக உள்ளன.
2015ம் ஆண்டில் 3,000 மெகாவாட் சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்து அதில், உலகில் தலைசிறந்த மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கத்தில் தமிழ்நாடு சூரியசக்தி கொள்கை 2012 அறிவிக்கப்பட்டது.
கடந்த முறை எனது ஆட்சியின்போது மழைநீர் சேகரிப்பு திட்டத்தை ஒரு மக்கள் இயக்கமாக எப்படி கொண்டு வந்தோமோ, அதேபோன்று சூரியசக்தி மின்சார உற்பத்தியையும் கொண்டு வர வேண்டும் என்பதுதான் எனது அரசின் நோக்கம். இந்த திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் மத்திய அரசு கொள்கைகளை உருவாக்கி, நிதி ஆதாரங்களை அளிக்க வேண்டும்.
நீர்வழி தொகுப்புகள்...
நீர்ப்பாசனம் தமிழகத்தில் முக்கிய பிரச்சினையாக உள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு பிரச்சினைகளான காவிரி, பெண்ணையாறு, முல்லைப்பெரியாறு அணை, அட்டப்பாடி அணை ஆகியவை குறித்து மத்திய அரசிடம் பலமுறை தமிழக அரசு நீதி கேட்டு முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் வீணாய்ப் போய்விட்டன.
நீர்வழி தொகுப்புகளை உருவாக்குவது, வெள்ள தடுப்பு மேலாண்மை, நீர்ப்பாசன மேம்பாடு ஆகியவற்றிற்காக மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகளை இணைக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். இதற்கு மத்திய அரசு உண்மையான ஆதரவு அளிப்பதாக தெரியவில்லை.
இந்த விவகாரமும், 12வது ஐந்தாண்டு திட்டத்தில் பேச்சு, மூச்சற்று இருப்பது ஆச்சரியமாக உள்ளது. துரிதப்படுத்தப்பட்ட நீர்ப்பாசன பயன்பாட்டுத் திட்டம், ஒரு ஏமாற்றம் அளிக்கும் திட்டமாகவே உள்ளது. சிறிய நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இந்த திட்டம் நம்பிக்கை அளிக்கவில்லை. 21வது நூற்றாண்டில் மேற்கண்ட அம்சங்கள் கவலை அளிக்கக்கூடியதாக இருக்கும். எனவே, இந்த திட்டம் முழுவதுமாக மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
மீனவர்கள் மீது தாக்குதல்
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை, தேசிய இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்கும் செயல் என்பதால், அதை புறக்கணிக்கக்கூடாது. ஆழ்கடல் மீன்பிடிப்பு, மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு உதவி கிடைக்கவில்லை.
மின்சாரம் வேண்டும்...
தற்போது தமிழகத்தில் பரவலாக மின்தடை உள்ளது. மின்சாரத்தின் தேவை மற்றும் சப்ளைக்கு இடையே 4 ஆயிரம் மெகாவாட் பற்றாக்குறை இருக்கிறது. தென்பகுதியில் அதிகபட்ச பற்றாக்குறை இதுதான். பருவமழை பொய்த்ததாலும், அதோடு மின்பற்றாக்குறையும் இணைந்து உணவு உற்பத்தியை பாதித்துள்ளது. சிறிய தொழில்களும் மிகப்பெரிய பிரச்சினை சந்தித்து வருகிறது.
மின்துறை முதலீட்டில் தேவையான சலுகைகள் வழங்குதல், மின்வழிப்பாதையில் உள்ள தடைகளை நீக்குதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை நாங்கள் மீண்டும், மீண்டும் கேட்டும் மத்திய அரசு தரவில்லை. வடமாநிலத்தில் உபரியாக உள்ள மின்சாரத்தை தமிழ்நாட்டிற்கு வழங்கக்கோரி பிரதமருக்கு பலதடவை கடிதம் எழுதியுள்ளேன். ஆனால், மின்வழிப்பாதையில் உள்ள தடைகளை காரணம் காட்டி, எங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை.
தமிழகத்தில் மின்வழிப்பாதையில் எந்த தடங்கலும் எதுவுமில்லை. மின்பற்றாக் குறையால் பாதிக்கப்படும் தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள மத்திய மின்உற்பத்தி நிலையங்கள் மூலம் கிடைக்கும் 2830 மெகாவாட் மின்சாரம் முழுவதையும் இடைக்கால ஏற்பாடாக ஒராண்டிற்கு தமிழ்நாட்டிற்கே ஒதுக்க வேண்டும். தமிழகத்தின் புதிய மின் உற்பத்தி திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும் வரை இந்த இடைக்கால ஏற்பாடு தொடர வேண்டும்.
கூடங்குளம் மின்சாரம் முழுவதும்...
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டிற்கே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் நான் முன்வைக்கிறேன். இது ஒரு நியாயமற்ற கோரிக்கை அல்ல. ஆந்திர மாநிலம், சிம்ஹத்ரி என்ற இடத்தில் உள்ள மத்திய மின்உற்பத்தி திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் முழுவதும் ஆந்திர மாநிலத்திற்கே வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கடந்த 25-ந் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
மாநிலங்களின் அதிகாரங்களையும், ஆதாரங்களையும் பறித்துக் கொள்கிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு இருக்கின்ற போதிலும், அதை மத்திய அரசு வேண்டுமென்றே நிறைவேற்றாமல் இருக்கிறது. மாநில அரசின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் கூட்டாட்சி தத்துவத்தின் கொள்கையாகும். அந்த வகையில் மின்சாரம் தொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள கோரிக்கைகளை பிரதமர் நிறைவேற்ற வேண்டும்.
எரிசக்தி பாதுகாப்பற்ற நிலை
எரிசக்தி பாதுகாப்பு நமதுநாட்டில் அபாய கட்டத்தில் உள்ளது. அதில் இதுவரை இல்லாத அளவுக்கு நிலையற்ற தன்மையும் காணப்படுகிறது. இதுபோன்ற அம்சங்களை முன்னரே சிந்திக்காமல் இருந்ததே இந்தப் பிரச்சினை ஏற்படுவதற்கு காரணம். அதோடு தேவையான அளவு நிலக்கரி சப்ளையை உறுதி செய்யாததும், மின்உற்பத்தி திட்டங்களுக்கான நிலக்கரி சப்ளை இணைப்பை ஏற்படுத்தாததும் இந்த பிரச்சினைக்கு காரணம்.
மத்திய அரசின் கொள்கைகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளது என்பது வெளிப்படையாக தெரிகிறது. ஏற்கனவே இருக்கும் மின்உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான அளவுக்கு உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி போதுமானதாக இல்லை. நாட்டில் 25 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய பல்வேறு மின்உற்பத்தி நிலையங்களுக்கு தற்போது நிலக்கரி சுரங்கத்தின் இணைப்பிற்கான அனுமதி தேவைப்படுகிறது. இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட்டு, தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
மற்ற மாநிலங்களில் கிடைக்கும் மின்சாரத்தை தென்பகுதியில் உள்ள சில மின்உற்பத்தி குறைவாக உள்ள மாநிலங்களுக்கு கொண்டு வருவதற்கு வழியில்லாமல் இருக்கிறது. இது, இந்திய மின் தொகுப்புக் கழகம், மின்வழிப் பாதையில் உள்ள தடைகளை நீக்குவதற்கான நீண்டகால திட்டமும், துரித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதும்தான் காரணம். எனவே, பிராந்தியங்களுக்கு இடையேயான மின்பகிர்மான திட்டங்களை போர்க்கால அடிப்படையில் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்.
பழிவாங்கும் மத்திய அரசு
பழிவாங்கும் நடவடிக்கைகளை விட்டுவிட்டு பெருந்தன்மையோடு இதுபோன்ற கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். மத்திய அரசின் பழிவாங்கும் போக்கினை பார்க்கும்போது அது தனது இலக்கை இழந்து, பொதுமக்கள் பிரச்சினையை மாநில அரசுகளே பார்த்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டதையே காட்டுகிறது.
எனவே, பொதுமக்களின் எதிர்பார்ப்புகளையும், ஏழை மக்களின் தேவைகளையும் கருத்தில் கொண்டு அடிப்படை யதார்த்தங்களைப் புரிந்துகொண்டு, மாநில அரசுகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய அரசு இனிமேலாவது செவிசாய்க்கும் என்று நம்புகிறேன். மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக நிதியைக் கையாளும் விஷயத்தில் இன்னும் சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன்.
''உங்கள் பணம் உங்கள் கையில் திட்டம்' உணவு தானிய வினியோகத்துக்கு உதவாது
யதார்த்த நிலையை புரிந்து கொள்ளாமல், நேரடி பணப் பரிமாற்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. பொது வினியோக திட்டம், உர மானியம், உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தும் திட்டங்களுக்கு இந்த திட்டம் உதவாது. ஆதார் திட்டமும் எதிர்பார்க்கும் பலனை மத்திய அரசுக்கு கொடுக்கப் போவதில்லை என்று தனது உரையில் கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications