மணி அடிப்பது என்பது ஒன்றும் அவமானகரமான காரியமல்ல: ஜெயலலிதா குற்றச்சாட்டு குறித்து கருணாநிதி

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் பத்து நிமிடத்திற்கு மேல் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிவித்து, அது தமிழக மக்களை மத்திய அரசு அவமானப்படுத்தி விட்டதாகக் குற்றச்சாட்டு கூறியிருக்கிறார். இந்தச் செய்தியை செய்தியாளர்கள் நேற்றைய தினமே என்னிடம் வந்து பரபரப்பாகத் தெரிவித்த போது, ஜெயலலிதாவையோ, தமிழகத்தையோ மத்திய அரசு அவமானப்படுத்தியிருந்தால், அதை நான் கண்டிக்கிறேன், ஆனால் என்ன நடந்தது என்பதை விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி அதுவும் ஏடுகளிலே வந்துள்ளது.
பத்து நிமிடம் பேசியவுடன் மணி அடிக்கப்பட்டது என்றும், அது தனக்கும், தமிழகத்திற்கும் ஏற்பட்ட அவமானம் என்றும் செய்தியாளர்களிடம் தமிழக முதல் அமைச்சர் தெரிவித்திருக்கிறார். 30க்கு மேற்பட்ட முதல் அமைச்சர்களும், மத்திய அமைச்சர்களும் உட்பட 40 பேர் பேச வேண்டியிருப்பதால், அனைவரும் பேசுவதன் அவசியத்தைக் கருதி ஒவ்வொருவருக்கும் பத்து நிமிடம் என்றால் கூட 400 நிமிடம், அதாவது அனைவரும் பேசுவதற்கு ஆறு மணி நேரத்திற்கு மேல் தேவைப்படும் என்பதால் முன் கூட்டியே ஒவ்வொருவரும் பத்து நிமிடத்திற்குள் தங்கள் பேச்சினை முடித்துக் கொள்ள வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் பத்து நிமிடத்திற்கு மேல் பேச வேண்டுமென்று விரும்பியிருந்தால் முன்கூட்டியே தனக்குக் கூடுதலாக சற்று நேரம் ஒதுக்கித்தர வேண்டுமென்று கோரியிருக்கலாம். அல்லது தன் பேச்சிலே முக்கியமான பகுதிகளை மட்டும் சுருக்கி பத்து நிமிடத்திற்குள் பேசிவிட்டு, மற்ற பகுதிகளை பேசியதாக அவையின் நடவடிக்கைகளிலே சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று கூறிவிட்டு, ஏடுகளுக்கு முழுப் பேச்சினையும் வழங்கியிருக்கலாம்.
ஆனால் தமிழக முதலமைச்சர் பத்து நிமிடம் முடிந்து மணி அடித்தவுடன் வெளியேறியிருக்கிறார். மணி அடித்த காரணத்தினாலே பேச்சினை உடனடியாக முடித்துக் கொள்ள வேண்டுமென்பது இல்லை. மேலும் சில மணித்துளிகள் தொடர்ந்து தன் பேச்சினைத் தொடர்ந்து அதன் பின்னர் முடித்துக் கொண்டிருக்கலாம். அதை யாரும் தடுத்திருக்கப் போவதில்லை. ஆனால் நம்முடைய முதலமைச்சர் அவருக்கே உரிய முன் கோபம் காரணமாக வேகவேகமாக வெளியே வந்து நிருபர்களிடம், தமிழக மக்களை மத்திய அரசு அவமானப்படுத்தி விட்டதாக ஒரு குற்றச்சாட்டினைத் தெரிவித்து விட்டு தனி விமானத்தில் ஏறி சென்னைக்கு வந்து விட்டார். பேச்சினை விரைவாக முடிக்கச் சொல்வதற்காக மணி அடிப்பது என்பது ஒன்றும் அவமானகரமான காரியமல்ல.
உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமேயானால், தமிழகச் சட்டப்பேரவை நடைபெறுகிறதே, அங்கே மணி வைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தால் அப்போது மணி அடிப்பார்கள். அதனை காதிலே வாங்கிக் கொள்ளாமலே உறுப்பினர்கள் பேசிக் கொண்டே இருப்பார்கள். அது பல ஆண்டுக் காலமாக எல்லா ஆட்சிக் காலத்திலும் இருந்து வரும் நடைமுறை. அதை அவமானகரமானது என்று யாரும் கூறுவது கிடையாது.
அது மாத்திரமல்ல; பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்படவிருக்கையில், "இன்றைய தினம் இத்தனை பேர் பேச வேண்டியிருக்கிறது, அதற்குப் பிறகு முதல் அமைச்சர் பதில் சொல்ல வேண்டும், எனவே பேசுகின்ற ஒவ்வொரு உறுப்பினரும் ஐந்து நிமிடத்திற்குள் தங்கள் பேச்சினை முடித்துக் கொள்ள வேண்டும்" என்று பேரவைத் தலைவரே கூறுவார். இப்போதும் அந்த நடைமுறை தான் இருந்து வருகிறது. அதிலே எந்தத் தவறும் கிடையாது.
ஆனால் முதலமைச்சர், பள்ளிகளிலே மணி அடித்து பிள்ளைகளை உட்கார வைப்பதைப் போல என்று சொல்லியிருக்கிறார். அப்படியென்றால் பேரவையில் மணி அடித்து உட்கார வைப்பதும் பள்ளிகளிலே மணி அடித்து பிள்ளைகளை உட்கார வைப்பதைப் போலத்தானா?.
முதலமைச்சரின் முழுப் பேச்சு ஏடுகளில் எல்லாம் வெளிவந்திருக்கிறது. அவ்வளவையும் அங்கே அவர் படித்திருந்தால் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகியிருக்கும். ஒவ்வொரு முதலமைச்சரும் தமிழக முதல்வரைப் போல நாங்களும் பேசுவோம் என்று ஆரம்பித்தால் எவ்வளவு நேரமாகியிருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? எனவே தமிழ்நாட்டிற்கே அவமானம் நேர்ந்து விட்டதாகக் கூறுவது என்பது மிகைப்படுத்தப்படும் ஒன்றே தவிர உண்மையான குற்றச்சாட்டு அல்ல!
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications