மாணவியை சீரழித்த சிறுவன் சில மாதங்களிலேயே விடுதலையாகி விட வாய்ப்பு?

டெல்லியில் டிசம்பர் 16ம் தேதி இரவு ஓடும் பஸ்சில் 23 வயது மாணவி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். கடும் காயங்களுடன் போராடி வந்த அவர் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டு அங்கு மரணமடைந்தார்.
இந்த கொடும் செயலில் ஈடுபட்டதாக 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களில் 17 வயது கொண்ட நபரும் அடக்கம். இந்த ஆறு பேரிலேயே இவன்தான் மாணவியை மிகவும் மோசமாக தாக்கியவன் மற்றும் பலாத்காரம் செய்தவன் என்று போலீஸார் கூறுகிறார்கள்.
இவனால்தான் அப்பெண் படுகாயமடைந்தார், பின்னர் உயிரிழந்தார். ஆனால் இவனுக்கு 17 வயதுதான் ஆகிறது என்பதால் இவனை மற்ற கோர்ட்டுகளில் விசாரிப்பது போல விசாரிக்க முடியாது. மாறாக, சிறார் நீதிமன்றத்தில்தான் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த முடியும். மேலும் இவனை சிறையிலும் அடைக்க முடியாது. சிறார் சீர்திருத்தப் பள்ளியில்தான் சேர்க்க முடியும்.
மேலும், இந்த சிறுவன் பெரும் தண்டனையிலிருந்து எளிதாக தப்பி விடும் அளவுக்கு சட்டம் இவனுக்குச் சாதகமாக உள்ளது. அது எப்படி என்பதைப் பார்ப்போம்...
- குற்றம் இழைத்தபோது இந்த சிறுவனுக்கு வயது 17 என்பதால் இவனுக்கு கடும் தண்டனை கிடைக்காது. அதிகபட்சம் 3 வருடம்தான்.
- 3 வருட தண்டனயைக் கூட இவன் சிறையில் கழிக்க முடியாது. மாறாக சிறார் சீர்திருத்தப் பள்ளியில்தான் சேர்ப்பார்கள். அங்கு தண்டனை கிடையாது, மாறாக போதனைதான் தருவார்கள்.
- இவனுக்கு 18 வயதாக இன்னும் சில மாதங்களே உள்ளன. 18 வயதை எட்டி விட்டால் யாரையும் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் வைக்க முடியாது. விடுவித்து விட வேண்டும்.
- அப்படி விடுவிக்கப்பட்ட பின்னர் இவனை சிறைக்கு மாற்றலாமா என்றால் அதுவும் முடியாது. காரணம், சிறார் குற்ற சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவரை வழக்கமான சிறைக்கு மாற்ற முடியாது, மாற்றக் கூடாது. அது சட்டவிரோதமாகும்.
பாலியல் பலாத்காரத்திலும், கடும் தாக்குதலிலும் ஈடுபட்டு அப்பாவி மாணவியின் உயிர் போக காரணமான இந்த சிறுவன் தற்போது பெரிய அளவிலான தண்டனை எதிலும் சிக்காமல் தப்பி விடும் வாய்ப்புகளே அதிகம் இருப்பதாக சட்ட நிபுணர்களும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications
