ஸ்டாலின் தலைவராவது உறுதி... அடுத்து என்ன செய்யப் போகிறார் மு.க. அழகிரி?
சென்னை: திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினை முன்னிறுத்தி கருணாநிதி அறிவித்திருப்பதைத் தொடர்ந்து அவரது மூத்த மகனான மு.க.அழகிரி என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் அதிகரித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பே திமுக தலைவராக மு.க. ஸ்டாலினை கருணாநிதி கோடிட்டுக் காட்டினார். இதனால் கடுப்பாகிப் போன மு.க.அழகிரி சென்னைக்கு பறந்துவந்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் கருத்து கேட்டனர். அதற்கு, வாரிசுகளை தலைவராக்க திமுக மடம் ஒன்றும் இல்லை என்று சொன்னவர் கருணாநிதி.. அவரிடம் போய் இப்போது கேளுங்கள் என்று கொந்தளித்தார். முன்பு ஒருமுறை திமுக தலைவர் பதவிக்கு நான் போட்டியிடுவேன் என்றும்கூட அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. ஆனால் தென்மண்டல அமைப்பு செயலாளர் பொறுப்பு வகிக்கும் மு.க.அழகிரி புறக்கணித்துவிட்டார்.
இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் மு.க.ஸ்டாலினை கட்சித் தலைவராக முன்மொழிவதில் என்ன தவறு? முன்மொழிவேன் என்று கருணாநிதி வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார். இதனால் மு.க.அழகிரியின் தலைவர் கனவு தகர்ந்து போய்விட்டது. இதைத் தொடர்ந்து மு.க. அழகிரி என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி இப்பொழுது எழுந்துள்ளது.

கூட இருந்தே குடைச்சல் கொடுக்கலாம்
திமுகவில் இருந்துகொண்டே ஸ்டாலினை அவமதிக்கும் வகையில் தொடர்ச்சியாக தமது ஆதரவாளர்கள் மூலம் குழப்பம் விளைவித்துக் கொண்டிருக்கலாம்.

ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடலாம்
கட்சித் தலைவர் பதவிக்கு ஸ்டாலின் போட்டியிட்டால் அவரை எதிர்த்துப் போட்டியிட்டு பிரச்சனை செய்யலாம்

கட்சியை உடைக்க முயற்சிக்கலாம்
திமுகவில் தமக்கும் செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்காக சில மாவட்டச் செயலர்கள், முன்னாள் அமைச்சர்களை இணைத்து திமுகவை உடைக்கப் போவதாக மிரட்டல் விடுக்கலாம்.. அல்லது உடைக்கவும் செய்யலாம்.. இப்படிச் செய்யமாட்டார் என்று மட்டும் உறுதியாக சொல்ல முடியாது. திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக போட்டி வேட்பாளர்களை நிறுத்தியவர்தான் அழகிரி என்பதால் எந்த எல்லைக்கும் அவர் செல்லக் கூடும்.

தனிக் கட்சி தொடங்கலாம்
தனியே ஒரு கட்சியை தொடங்கி மதுரை மற்றும் தென்மாவட்டத்தை இலக்கு வைத்து தீவிர அரசியலில் இறங்கலாம்.

அதிமுகவில் சேரலாம்
மு.க.அழகிரியின் அண்ணன் மு.க. முத்து, கடந்த 1991-96 கால கட்டத்தில் அதிமுகவில் ஐக்கியமாகியிருந்தார். அவரைப் போலவே கருணாநிதியை கடுப்படிக்க அதிமுகவில் தமது ஆதரவாளர்களுடன் போய் சேர்ந்துவிடலாம் என்று முடிவெடுத்தால் பெரும் பரபரப்பாக இருக்கும்.
மு.க. அழகிரி அடுத்து மேற்கொள்ளப் போகும் நடவடிக்கையை திமுக மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக அரசியல் களமும் உற்று நோக்கி பார்த்து வருகிறது.












Click it and Unblock the Notifications