தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க கருணாநிதிக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கோரிக்கை

கருணாநிதி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், பொதுச் செயலாளர் க. அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், தலைமைக் கழக முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி, பொதுச் செயலாளர்கள் துரைமுருகன், வி.பி. துரைசாமி, எஸ்.பி. சற்குண பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்தும், தேர்தல் நிதி திரட்டுவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அப்போது கூட்டத்தில் பேசிய பெரும்பாலான மாவட்டச் செயலாளர்களும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விஜய்காந்தின் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தாகத் தெரிகிறது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் இந்தக் கோரிக்கையை முன் வைத்தனர்.
இந்தக் கூட்டணியை மக்களே எதிர்பார்ப்பதாகவும், காங்கிரஸை கழற்றி விடலாம் என்றும் சிலர் கூறியுள்ளனர். ஆனால், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கூட்டணிக்கே ஆதரவு தெரிவித்தனர். ஆனால், பெரும்பாலானவர்கள் காங்கிரஸ்-திமுக கூட்டணி தொடர வேண்டும், அதில் தேமுதிகவையும் சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மின்வெட்டு காரணமாக அதிமுக மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளதால், திமுக-காங்கிரஸ்-தேமுதிக கூட்டணி அமைந்தால் அது பெரும் வெற்றி பெறுவது நிச்சயம் என்றும் பல மாவட்டச் செயலாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
மேலும் சிலர் தேர்தலுக்கு அதிக நாட்கள் இருப்பதால் அவசரப்பட்டு கூட்டணி முடிவை எடுக்க வேண்டாம் என்றும், தேர்தல் நெருங்க நெருங்க அப்போதைய அரசியல் சூழ்நிலையை வைத்து முடிவெடுக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.
இறுதியில் திமுக தலைவர் கருணாநிதி பேசுகையில், காங்கிரஸ் கூட்டணியில் திமுக தொடர்கிறது. இந்தக் கூட்டணி தொடரும். கூட்டணி விஷயத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். தேர்தலுக்கு இப்போதே தயாராகுங்கள். தேர்தல் பணிகளில் நீங்கள் தீவிரமாக ஈடுபடுங்கள். கூட்டணியில் எத்தனை கட்சிகள் இடம் பெற்றாலும் கடந்த முறையை விட இந்த முறை திமுக அதிக இடங்களில் போட்டியிடும் என்று கூறியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை கருணாநிதி சந்தித்தபோது, நாடாளுமன்ற தேர்தலில் திமுகவும் தேமுதிகவும் கூட்டணி சேர வாய்ப்பிருருக்கிறதா என்று நிருபர்கள் கேள்வி கேட்டதற்கு, தேமுதிகவிலேயே திமுக என்பதும் இருக்கிறதே என்று சூசகமாக பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications