நாளை மிலாது நபி திருநாள்: முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்டோர் வாழ்த்து!

ஜெயலலிதா
தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில்,எளியோர்களிடம் கருணைக் காட்டுங்கள்; சிந்தனையிலும், நடத்தையிலும் தூய்மை உடையவராக இருங்கள்; பசித்தவர்களுக்கு உணவு அளியுங்கள் என்பது இறைத் தூதர் நபிகள் நாயகம் அவர்கள் உலகிற்கு எடுத்துரைத்த போதனையாகும். உலகில் அமைதி தவழ்ந்திட அன்னார் போதித்த பொறுமை, சகிப்புத் தன்மை, சமாதானம், சகோதரத்துவம் போன்றவற்றை பின்பற்றி வாழ்ந்தால் வாழ்வில் ஏற்றம் பெறலாம் என்பதை உணர்ந்து பெருமானார் நபிகள் நாயகத்தின் வழியை பின்பற்றிட உறுதியேற்போம்.
இந்த இனிய நாளில், இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய மீலாதுன் நபி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கருணாநிதி
கருணாநிதியின் மிலாது நபி வாழ்த்து அறிக்கையில், அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த பொன்னாளை மிலாது நபித் திருநாளாக இஸ்லாமிய சமுதாய மக்கள் மிகுந்த எழுச்சியுடன் ஆண்டுதோறும் கொண்டாடுகின்றனர். நபிகள் நாயகம் அவர்கள், தாயின் வயிற்றிலிருந்தபோதே தந்தையாரையும், 6 வயதில் தாயாரையும் இழந்து தொடர்ந்து பல இன்னல்களைச் சுமந்தவர். ஆயினும் அவர், தமது வாழ்நாளில் பொய் பேசியதே இல்லை; வாக்குறுதிகளில் இருந்து மாறியதில்லை; தனக்குத் துன்பம் இழைத்தவர்களைப் பழிவாங்கியதும் இல்லை. அவர் எப்போதும் ஏழைகளுக்காக இரக்கப்பட்டார்.
அனாதைகளுக்கு ஆதரவு தந்தார்.துன்பத்தில் சிக்கிக் கொண்டவர்களின் துயரங்களைத் துடைத்தார். கோபம், பொறாமை, பேராசை, புறம்பேசுதல் போன்ற குணங்கள் கூடாது என்றார். இதனை, "கோபம் அறிவை விழுங்கிவிடும்; பொறாமை மார்க்கத்தை விழுங்கிவிடும்; பேராசை வெட்கத்தை விழுங்கிவிடும்; புறம் பேசுதல் நற்செயலை விழுங்கிவிடும்" எனப் போதித்தார்.
"மற்றவரை ஒருவர் நிந்திக்கும்போது அது வானத்திற்குச் செல்கிறது. அங்கே வானத்தின் கதவுகள் மூடி இருக்கின்றன. பின்பு, அது உலகத்திற்கே திரும்புகிறது. உலகத்திலும் கதவுகள் மூடி இருக்கின்றன. பின்பு, அது வலதுபுறம், இடதுபுறம் என அலைந்து திரிகின்றது. எங்குமே அதற்கு இடமில்லாமல், அது எவர் நிந்தித்தாரோ அவரிடமே வந்து சேர்கிறது என்றுகூறி எவரையும் நிந்திக்கக் கூடாது என்றார்.
அண்ணல் நபிகளாரின் இத்தகைய போதனைகள் மனிதன் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கத்தக்க எளிய, ஆனால் அரிய அறிவுரைகளாகும். அவை அனைத்தும் இஸ்லாமியத் தத்துவ முத்துக்களாகவே மதிக்கப்படுகின்றன நபிகளாரின் இத்தகைய போதனைகள்!
70 ஆண்டுக்கு முன்பே....
சிறுவயதிலேயே என்னைக் கவர்ந்ததனால்தான், ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு முன்பே, திருவாரூரில் பள்ளியில் பயின்றபோது ஒரு கையிலே குடியரசு ஏட்டையும், ஒரு கையிலே முஸ்லீம் லீக் கொள்கை பரப்பும், தாருல் இஸ்லாம் ஏட்டையும் சுமந்தபடி இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொண்டேன் நான் என்பதை இவ்வேளையில் நினைவுகூர்கிறேன். அக்காலம்தொட்டு இன்று வரை நபிகளாரின் போதனைகளைப் பின்பற்றி வாழும் இஸ்லாமிய சமுதாயத்தின்பால் நிறைந்த பற்றும் பாசமும் கொண்டுள்ள உணர்வோடு, இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த மிலாது நபித் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன் என்று அதில் கருணாநிதி கூறியுள்ளார்
ராமதாஸ்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மிலாது நபி திருநாளில் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துகள். நபிகள் நாயகத்தின் போதனைகளை பின்பற்றுவதே அவருக்கு செலுத்தும் மரியாதையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணல் முகமது நபிகள் நாயகம்(ஸல்) அவதார தினத்தை, மீலாடி நபி என உலகு எங்கும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். உங்களில் யாராவது தவறைக் கண்டால், தமது கரத்தால் மாற்றட்டும்; அது இயலாவிட்டால், தமது நாவால் மாற்றட்டும்; அதுவும் இயலாவிட்டால், உள்ளத்தால் வெறுத்து விலகி விடட்டும் என்று உபதேசித்த உத்தமர் அண்ணல் முகமது (ஸல்)ஆவார்.
ஒருபோதும் மது அருந்தாதீர்கள். ஏனென்றால், தீமைகளுக்கெல்லாம் அது மூல ஆதாரமாக அமைந்து உள்ளது. எல்லா இழிவான செயல்களுக்கும் முதன்மையாக உள்ள மது, எல்லா பாவங்களின் மொத்தத் தொகுப்பு என்று, மதுவை ஒழித்திடவும், மதுவிலக்கை கட்டாயமாக்கிடவும் செய்திட்ட ஒப்பற்றவர் அண்ணல் முகமது (ஸல்) அவர்கள். "பசி உள்ளோருக்கு அன்னம் இடுங்கள்; நோயாளிகளைப் போய்ப் பார்த்து நலம் விசாரியுங்கள் என்று, மனிதநேயத்தைப் போதித்த மாண்பாளர் ஆவார். அகிலம் எங்கும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் உவகையுடனும், நம்பிக்கையுடனும் போற்றுகின்ற திருநாளாகிய நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நன்னாளில், அவர்கள் காட்டிச் சென்ற அறநெறியினைப் பின்பற்றி, அன்புடனும், சகோதர பாசத்துடனும், அனைவரும் வாழ்ந்திட உறுதிகொள்வோம் என்று, மீலாடி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்












Click it and Unblock the Notifications