விஸ்வரூபம் சர்ச்சை: இந்திய தேசிய முஸ்லிம் லீக் உண்ணாவிரதப் போராட்டம்
சென்னை: முஸ்லீம்களின் மனதை காயப்படுத்தும் வகையிலும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் உள்ள விஸ்வரூபம் திரைப்படத்தை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக இந்திய தேசிய முஸ்லீம் லீக் அறிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநில தலைவர் ஒய்.ஜவஹர் அலி வெளியிட்டுள்ள அறிக்கை:
நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது. தற்போது, நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், தனி மனித சுதந்திரம் என்றும், கலைஞனின் உரிமைகளில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை, படைப்பு சுதந்திரம், துணிச்சலான படைப்பாளியை முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பது வாழ்க்கையாகிவிட்டது என்று திரையுலக மற்றும் அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ரோஜா, மும்பை, ஹேராம், உன்னைப்போல் ஒருவன் ஆகிய படங்களுக்கு எல்லாம் சும்மா இருந்து விட்டு இப்போது மட்டும் ஏன் எதிர்க்கிறீர்கள் என்று கேட்கின்றனர். குட்ட குட்ட குனிந்து கொண்டே இருக்க வேண்டுமா?. விஸ்வரூபம் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய தேசிய முஸ்லிம் லீக் சார்பாக உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்துவோம் இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தில் இதுவரை எந்த திரைப்படத்திலும் இல்லாத வகையில் முஸ்லிம்களை காயப்படுத்துவதால் இது இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகவும், இந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைப்பதாகவும் உள்ளது என்று இஸ்லாமிய தலைவர்கள் கோரிக்கை விடுத்த காரணத்தால் அதனை ஏற்று விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications