62 அடி கேக்...1,00,000 பேருக்கு உதவி... மதுரையில் அமர்க்களப்பட்ட அழகிரி பிறந்தநாள்
மதுரை: மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் பிறந்தநாள் விழா மதுரையில் இன்று அமர்க்களமாக கொண்டாடப்பட்டது. 62 அடி
நீள பிரம்மாண்ட கேக் வெட்டி தொண்டர்களுடன் உற்சாகமாக கொண்டாடினார் மு.க.அழகிரி.
மு.க.அழகிரியின் பிறந்தநாள் என்றாலே மதுரை மாநகரம் களைகட்டும். காணும் இடமெங்கும் ஃப்ளக்ஸ் பேனர்கள், ஊர்வலங்கள், நலத்திட்ட உதவிகள் என அமர்க்களப்படுத்திவிடுவார்கள் தென்மாவட்ட திமுகவினர்.
ஜனவரி 30ம் தேதிதான் பிறந்தநாள் என்றாலும் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே மதுரை நகர சுவர்களில் ஒவியமாக சிரித்துக்கொண்டிருப்பார் அழகிரி.

அதிகாலையிலேயே அதிரடி
பிறந்தநாள் தினமான இன்று காலை 6மணியில் இருந்தே அழகிரியின் வீட்டிற்கு தொண்டர்கள் குவியத்தொடங்கினர். காலை 8 மணிக்கு வீட்டில் உறவினர்கள் முன்னிலையில் கேக் வெட்டி மகிழ்ச்சியோடு கொண்டாடினார்.

அண்ணா, பெரியாருக்கு மாலை
இதனைத் தொடர்ந்து நெல்பேட்டையில் உள்ள அண்ணாசிலைக்கு தொண்டர்கள் புடைசூழ சென்று மாலை அணிவித்தார். பின்னர் மதுரை மாநகராட்சி அவுட்போஸ்ட் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.

62 அடி பிரம்மாண்ட கேக் வெட்டிய அழகிரி
இதனைத் தொடர்ந்து ராஜா முத்தையா மன்றத்தில் பிரம்மாண்ட விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தென்மாவட்டத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் அங்கு திரண்டிருந்தனர். விழா மண்டபத்திற்கு வந்த அழகிரிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

கேக் வெட்டிய அழகிரி.. கை தட்டிய காந்தி
அங்கு வைக்கப்பட்டிருந்த 62 அடி கேக்கினை அழகிரி வெட்டினார். அப்போது அழகிரியின் மனைவி காந்தி அழகிரி, மகன் துரை தயாநிதி, மருமகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக கரவொலி எழுப்பி மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

நலத்திட்ட உதவி
அழகிரி பிறந்தநாளை முன்னிட்டு 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தென்மாவட்டங்களில் இருந்து அழகிரியைக் காண வந்திருந்த தொண்டர்களுக்கு சுவையான விருந்து பரிமாறப்பட்டது.

பிரதமர் மான்மோகன், கருணாநிதி வாழ்த்து
அழகிரியின் பிறந்தநாளுக்கு பிரதமர் மன்மோகன்சிங் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அழகிரியின் தந்தையும், திமுக தலைவருமான கருணாநிதி தொலைபேசியில் வாழ்த்து கூறினார். ஆண்டுதோறும் அழகிரியின் பிறந்தநாளுக்கு மதுரை வரும் மு.க.ஸ்டாலின் இந்த ஆண்டு வரவில்லை. அவர் டெல்லியில் இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications