பொட்டு சுரேஷ் மீண்டும் அரசியலுக்கு வந்தது பிடிக்காமல் போட்டுத் தள்ளிய அட்டாக் பாண்டி!!
மதுரை: மத்திய அமைச்சர் மு.க. அழகிரியிடம் யார் நெருக்கமாக இருப்பது? யார் ஆதாயம் அடைவது? என்ற போட்டிதான் பொட்டு சுரேஷை போட்டுத் தள்ளும் அளவுக்குஅட்டாக் பாண்டியை தூண்டியிருக்கிறது.
கடந்த தி.மு.க. ஆட்சியில் மு.க.அழகிரி மூலமாக மதுரை வேளாண் விற்பனைக் குழு தலைவர் பதவியை பெற்றார் அட்டாக் பாண்டி. இதில் அதிருப்தி அடைந்திருந்த பொட்டு சுரேஷ், கீரைத்துறை நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் அட்டாக் பாண்டி பெயரும் அடிபட்டது வசதியாகப் போனது. அழகிரி மூலமே அட்டாக் பாண்டியின் வேளாண் விற்பனைக்குழு தலைவர் பதவியை பறித்துவிட்டார். இதில் அட்டாக் பாண்டி செம கடுப்பாகிப் போனார். அதைத் தொடர்ந்து இருவருக்கும் ஏழாம் பொருத்தம் என்றாகிவிட்டது.
பின்னர் அதிமுக ஆட்சி வந்ததும் பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி என அனைவரும் மீதுமே கைது, குண்டர் சட்டம் பாய்ந்தது. சில காலம் இருவரும் அரசியலில் தலைகாட்டாமல் அமைதி காத்து வந்தனர். கடந்த மாதம்தான் இருவரும் 'மறுபிரவேசம்' செய்தனர். மு.க. அழகிரியின் பிறந்த நாளுக்கு ஒரு மாதத்துக்கு முன்னதாக வாழ்த்து விளம்பரம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் பொட்டு சுரேஷ். அட்டாக் பாண்டியோ மு.க.ஸ்டாலினை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
மு.க.ஸ்டாலினை சந்தித்தது தொடர்பாக ஜூனியர் விகடன் இதழுக்கு அட்டாக் பாண்டி பேட்டி கொடுத்திருந்த போது பொட்டு சுரேஷ் மீதான தமது காட்டத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.
அப்பேட்டியில், " ஏற்கெனவே பொட்டு சுரேஷ் மதுரையில் தி.மு.க-வை எப்படி எல்லாம் சிதைத்தார் என்று கட்சிக் கூட்டத்தில் நிர்வாகிகள் பலரும் பகிரங்கமாகப் பேசி இருக்கிறார்கள். சாதாரணமாக இருந்த அவர் இன்றைக்கு அமோகமாக வளர்ச்சி அடையக் காரணம் என்ன? அண்ணனுடன் இருந்த பலரையும் ஒழித்தது யார்? அதிகாரத்தில் இருந்தபோதும் இல்லாதபோதும் மதுரையில் அவர் செய்த காரியங்கள் எதுவும் அழகிரி அண்ணனுக்குத் தெரியக் கூடாது என்று அவரைச் சுற்றி ஒரு கருங்கல் கோட்டையை எழுப்பி விட்டனர். ஒரு வழியாக, அவரது துரோகத்தை அறிந்து கொண்டு அண்ணன் அவரை ஒதுக்கிவைத்து விட்டார் என்று நினைத்தோம். ஆனால், மீண்டும் அவர்களின் உறவு தொடர்கிறது. மதுரையில் சுரேஷின் ஆதிக்கம் மீண்டும் ஆரம்பம் ஆகிவிட்டது. மதுரையில் இருக்கும் உண்மையான கட்சித் தொண்டர்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள். இன்றைக்கும் பொட்டு சுரேஷ§க்கு உயர் மட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் பலர் இருக்கிறார்கள். உளவுத் துறை அதிகாரிகளிடம் அண்ணனைப் பற்றிய பொய் தகவல்களைச் சொல்லி ஆட்சியாளர்களிடம் நல்ல பெயர் வாங்குகிறார்.'' என்று கூறியிருந்தார்.
மேலும் அட்டாக் பாண்டியின் வீடியோ பேட்டியை "Attack Pandi about Pottu suresh - Alarming statement - Junior Vikatan " என்ற தலைப்பிலும் வெளியிட்டது ஜூனியர் விகடன்.
இந்த பேட்டி வெளியாகி சில வாரங்களுக்குள்ளாகவே பொட்டு சுரேஷின் கதையும் முடிக்கப்பட்டுவிட்டது. இதனால்தான் அட்டாக் பாண்டி கோஷ்டியை போலீஸ் சந்தேகித்தது. மேலும் அட்டாக் பாண்டி கோஷ்டியின் சந்தானத்துக்கு பொட்டு சுரேஷை வெட்டும் போது தவறுதலாக அவரது கையிலும் வெட்டு விழுந்திருக்கிறது. அப்படியே ரத்தம் வழிந்த நிலையில் தமது வீட்டுக்கு சந்தானம் போனதும் போலீசுக்கு தெரியவந்ததால் வேறு வழியில்லாமல் அட்டாக் பாண்டி கோஷ்டி சரணடைந்திருப்பதாக சொல்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications