இலங்கையில் 367 இந்துக் கோயில்கள் இடிப்பு: கருணாநிதி புகார்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் தமிழர்கள் வாழும் 89 கிராமங்களுக்கு இருந்த தமிழ்ப் பெயர்களையெல்லாம் சிங்களப் பெயர்களாக மாற்றியதைப் பற்றி நான் முன்னரே ஆதாரங்களோடு விரிவாக எடுத்துக் கூறியிருக்கிறேன்.
தற்போது இலங்கையில் 367 இந்துக் கோவில்களை இடித்துள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளி வந்துள்ளன. இந்தச் செய்தியினை இண்டர்நேஷனல் பாலிசி டைஜஸ்ட் என்ற இதழ் விரிவாக வெளியிட்டுள்ளது.
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் உள்ள கோயில்கள் உட்பட அனைத்து நினைவுச் சின்னங்களையும் ஒழிப்பது என்கிற கொள்கை முடிவினை ராஜபக்சே அரசு எடுத்திருப்பதாகவும், தமிழர்கள் வாழ்ந்த இடங்களின் அடையாளங்கள் அனைத்தையும் அழித்து விட்டு, அந்த இடங்களில் சிங்களவர் குடியிருப்புகளை ஏற்படுத்தும் பணியினைச் செய்து வருவதாகவும், யாழ்ப்பாணத்தில் மட்டும் 208 கோயில்கள் இதுவரை தரைமட்டமாக்கப்பட்டுள்ளன என்றும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற திரிகோணமலைப் பகுதியிலே 17 இந்துக் கோயில்கள் இடித்துத் தள்ளப்பட்டுள்ளதாம். வவுனியா, மன்னார், அம்பாரை மாவட்டங்களிலும் பல கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த இடங்களில் இந்துக் கோயில்கள் இருந்தன என்பதற்கான அடையாளங்களே எதுவுமில்லை என்றும் அந்தச் செய்தியிலே கூறப்பட்டுள்ளது.
இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் அடுத்த மாதம் அமெரிக்கா கொண்டு வரவிருக்கின்ற தீர்மானத்தின் மூலமாகவாவது விடிவு காலம் ஏற்படுமா என்பது தான் நம்முடைய இன்றைய கவலையாகும்.
மேலும், இலங்கை அரசு தொடர்ந்து செய்து வரும் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் வகையில், இலங்கையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ள 'காமன்வெல்த்' மாநாட்டை, வேறொரு நாட்டில் நடத்த வேண்டுமென நியூயார்க்கில் உள்ள சர்வதேச மனித உரிமை அமைப்பு, காமன்வெல்த் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடருவதால், காமன்வெல்த் மாநாட்டினைப் புறக்கணிக்கப் போவதாக கனடா போன்ற நாடுகள் எச்சரித்துள்ளன. இந்தச் செய்திகள் எல்லாம் இலங்கை ராஜபக்சே அரசின் கொடுமைகளை உலக நாடுகள் புரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கின்றன என்பதை உணர்த்துவதால், அது நமக்கு நம்பிக்கை அளிக்கின்றது.
உலகநாடுகளும், உலக அமைப்புகளும் இலங்கையில் நடைபெற்ற- மனித உரிமை மீறல்களையும், ராஜபக்சே அரசு புரிந்திருக்கும் வரலாறு காணாத போர்க் குற்றங்களையும் புரிந்து கொண்டு இலங்கை அரசின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தீர்மானித்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
சர்வதேச அளவில் நடைபெறும் இந்த முயற்சிகளைப் புரிந்து கொண்டு தான், அவற்றை எப்படியாவது திசை திருப்பிட வேண்டுமென்ற தந்திரத்தோடு, மீண்டும் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தப் போகிறார்கள் என்று இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தம்பியும், இலங்கைப் பாதுகாப்புத் துறை செயலாளருமான கோத்தபாய ராஜபக்சே பேசியிருக்கிறார்.
மேலும் கோத்தபாய ராஜபக்சே தனது உரையில்; "இலங்கைக்கு எதிராகச் செயல்படும்படி உலக நாடுகளை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் நிர்ப்பந்திக்கின்றனர். வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்கள், இலங்கைக்கு எதிரான பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். விடுதலைப் புலிகளின் ராணுவத் தலைமை அழிக்கப்பட்டுவிட்ட தெனினும்; மிகப் பெரிய அளவிலான விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு பிரிவினர் தான் அழிக்கப்பட்டுள்ளனர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சர்வதேச அளவில் அவர்கள் ஜனநாயகவாதிகள் போன்ற முகத்தைக் காட்டி வந்தாலும், அவர்கள் இலங்கைக்கு எதிராக மீண்டும் தாக்குதல் தொடுக்கக் கடுமையாக முயற்சிப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. சர்வதேச அளவில் இலங்கைக்கு உதவி செய்யும் நாடுகள் இலங்கை அரசின் திட்டங்களைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளன. விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் இலங்கையில் நடைபெற்று வரும் மறு குடியமர்வுப் பணிகள் குறித்துத் தவறானத் தகவல்களைப் பரப்பி வருவதன் மூலம், சர்வதேச மன்றங்களில் உலக நாடுகளை இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தூண்டுகின்றனர்"
என்று குறிப்பிட்டிருப்பதில் இருந்தே; ஜெனீவா நகரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தீர்மானத்தை முனை மழுங்கச் செய்திடும் முயற்சியில் இலங்கை அரசு சாதுர்யமாக ஈடுபடத் தொடங்கியுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இலங்கை அதிபர் ராஜபக்சே எப்படிப்பட்ட தந்திரோபாயங்களைக் கையாண்ட போதிலும், உலக நாடுகளின் கண்டனத்திலிருந்தும், தண்டனையில் இருந்தும் தப்பி விட முடியாது என்பதே உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் நம்பிக்கையாகும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications