காவிரி மேலாண்மை வாரியம்- உடனே அமைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை
தஞ்சாவூர்: காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை செயல்படுத்த காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக்குழு வலியுறுத்தியுள்ளது.
காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் தஞ்சை பெ.மணியரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
காலம் கடந்தாவது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டு மத்தியஅரசு காவிரி தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டதை வரவேற்கிறோம். ஆனால் இந்த தீர்ப்பை செயல்படுத்துவதற்கு காவிரி தீர்ப்பாயம் தனது இறுதித்தீர்ப்பில் கூறியபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் இந்த தீர்ப்பு வெறும் ஏட்டு சுரைக்காயாக இருக்கும். ஏனெனில் காவிரி தீர்ப்பாயம் வழங்கிய இடைக்கால தீர்ப்பை 1991-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்தியஅரசு அரசிதழில் வெளியிட்டது. அதோடு விட்டுவிட்டது. அதை கர்நாடகம் செயல்படுத்தவே இல்லை.
1998-ல் பிரதமர் தலைமையில் ஒரு பஞ்சாயத்து சபை போல் காவிரி ஆணையம் அமைத்தார்கள். இது சரியாக செயல்படவில்லை. அது சொன்ன முடிவுகளையும் கர்நாடகம் ஏற்கவில்லை. எனவே கர்நாடகத்தில் உள்ள 4 அணைகளையும், தமிழகத்தில் உள்ள 3 அணைகளையும் நீர்நிர்வாகம் செய்யக்கூடிய தன்னாட்சி உள்ள காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, அதன்வசம் இந்த அணைகளை ஒப்படைத்தால் தான் இந்த தீர்ப்பு செயல்படுத்தப்படும்.
இதை மத்தியஅரசு செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்படி மத்தியஅரசை தமிழகஅரசு வலியுறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications