இனி யாரும் தீக்குளிக்க வேண்டாம் டாக்டர் ராமதாஸ், சீமான் வேண்டுகோள்
சென்னை: இலங்கை பிரச்சினைக்காக இனி ஒருபோதும் யாரும் உயிரை மாய்த்துக் கொள்ளவேண்டாம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்,
இதுகுறித்து, இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடலூரை அடுத்த நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்த மணி என்ற தமிழ் உணர்வாளர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்திருக்கிறார்.
இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியே அவர் தீக்குளித்திருக்கிறார்.
தமிழ் உணர்வாளர் மணி தீக்குளித்த செய்தி கேட்டு நான் பேரதிர்ச்சியும், வேதனையும் துயரமும் அடைந்தேன். அப்பாவி தமிழர்களை படுகொலை செய்த சிங்களப்படையினருக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதற்காக உலகெங்கும் உள்ள தமிழர்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். அத்தகைய போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதில் ஆர்வம் காட்டுவதை விடுத்து, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது நமது நோக்கத்திற்கு எந்த வகையிலும் வலு சேர்க்காது.
எனவே, தமிழ் உணர்வாளர்கள் எவரும் இத்தகைய செயல்களில் ஈடுபடவேண்டாம் இவ்வாறு அந்த அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
சீமான் வேண்டுகோள்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
நமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள் சிங்கள பேரினவாத அரசினால் இனப்படுகொலை செய்யப்பட்டதை தமிழ் தேசிய இனம் தனது ஆன்மாவில் ஆறாத காயமாய் சுமந்து வருகிறது என்பதற்கு சான்றாக கடலூர் மாவட்டம் நல்லவாடு கிராமத்தினைச் சேர்ந்த இல.மணியின் தீக்குளிப்பு சம்பவம் அமைந்துவிட்டது.
தீக்குளித்த இல.மணி நாம் தமிழர் கட்சியின் கடலூர் பகுதி ஒன்றிய ஒருங்கிணைப்பாளராக களமாடியவர். எமது அமைப்பின் பெருமைமிக்க தளபதியாக விளங்கும் இல.மணியின் தீக்குளிப்பு என்னை முழுமையாக உருக்குலைத்து விட்டது.
இல.மணியின் தீக்குளிப்பு போன்ற தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் செயல்களில் தமிழின இளைய சமூகம் ஒரு போதும் ஈடுபடக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.
உயிரை தர வேண்டாம் தம்பிகளே. நாம் தமிழர் என்கிற உணர்வினை தாருங்கள்.... அது போதும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications