''குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தேன், கழுத்தை நெரித்துக் கொன்று வாஷிங் மெஷினில் வீசினேன்''

Subscribe to Oneindia Tamil

சென்னை: கணவருக்குப் பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருந்ததாலும், தன்னை விட்டுப் பிரிந்து விடுவதாக அவர் மிரட்டி வந்ததாலும் தான் தனது கைக்குழந்தையைக் கொன்று வாஷிங் மெஷினில் வீசியதாக போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார் சென்னையில் கைதான ஆந்திரப் பெண் ரம்யா.

சென்னை புரசைவாக்கம் மூக்காத்தாள் தெருவில் டைமண்ட் பேலஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் கீழ் பகுதியில் உள்ள அறை ஒன்றில் கட்டிட காவலாளி வெங்கல்ராவ் (45) வசிக்கிறார். இவருடன் மனைவி, மகள் ரம்யா (20) ஆகியோரும் வசிக்கின்றனர். வெங்கல்ராவின் ஊர் வாரங்கல் ஆகும்.

ரம்யாவுக்குத் திருமணமாகி விட்டது. அவரது கணவர் பெயர் பாபு. இவர்களுக்கு 40 நாட்களுக்கு முன்புதான் பெண் குழந்தை பிறந்தது. சென்னையில்தான் குழந்தை பிறந்தது. வெங்கல்ராவ் சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்குப் போனார்.அவருடன் பாபுவும் போயிருந்தார். வீட்டில் ரம்யாவும், உறவுக்காரப் பெண் பாக்கியம் என்பவரும் மட்டுமே இருக்கின்றனர்.

2 நாட்களுக்கு முன்பு இரவு தனது குழந்தையைக் காணவில்லை என்று ரம்யா அலறினார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து தேடிப் பார்த்தனர். குழந்தை கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலையில், ரம்யா இருந்த வீட்டுக்குப் பின்புறம் பழுதாகிக் கிடந்த வாஷிங் மெஷினுக்குள் ரம்யாவின் குழந்தை இறந்த நிலையில் கிடந்தது. இதை ரம்யா பார்த்து விட்டு கத்தினார்.

இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர். குழந்தையின் பிரேதத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதல் கட்டவிசாரணையில் குழந்தை கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும் குழந்தையைக் கொன்று வாஷிங் மெஷினுக்குள் போட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது.

இந்த நிலையில் திடீரென ரம்யாவைக் காணவில்லை. இதனால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரைப் பிடிக்க போலீஸார் சென்டிரல் ரயில் நிலையம் விரைந்தனர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே ரம்யா அங்கு ரயிலில் ஏறுவதற்காக வந்து கொண்டிருந்தார். அவரைப் பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தபோது அவர்தான் குழந்தையைக் கொன்றது தெரிய வந்தது.

ஏன் இந்தக் கொடூரக்கொலை...?

போலீஸாரிடம் ரம்யா அளித்த வாக்குமூலம்...

நான் பாபுவை காதல் திருமணம் செய்துகொண்டேன். அவர் பெயிண்டிங் வேலை செய்தார். திருமணமாகி ஒரு வருடத்துக்குள் எனக்கு குழந்தை பிறந்துவிட்டது. திருமணம் ஆனவுடன் சொந்த ஊரில்தான் கணவருடன் வாழ்ந்து வந்தேன். நான் குழந்தை பெற்றுக்கொள்வதற்காகத்தான் சென்னையில் தந்தை வசித்த வீட்டுக்கு வந்தேன். எனது கணவரும் பின்னர் இங்கு வந்து, என்னுடன் தங்கிவிட்டார்.

எனது கணவர் பாபு குடிப்பழக்கம் உள்ளவர். அவருக்கு வேறு சில பெண்களிடமும் தொடர்பு இருந்தது. அவர் அந்த பெண்களிடம் செல்போனில் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார். இதை நான் கண்டித்தேன். இதனால் அவர் என்னை ஒதுக்கிவிட்டு, வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அடிக்கடி மிரட்டியபடி இருந்தார்.

அவர் என்னைவிட்டு பிரிந்து சென்றுவிட்டால், பெண் குழந்தையுடன் கஷ்டப்படமுடியாது என்று நினைத்தேன். மேலும் அவரது குழந்தை நம்மிடம் இருக்கக்கூடாது என்றும் முடிவு செய்தேன். அதனால் அவர் ஊரில் இல்லாதபோது, குழந்தையை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். மனதை கல்லாக்கிக் கொண்டேன். நள்ளிரவில் குழந்தைக்கு கடைசியாக பாலூட்டினேன். அப்படியே மார்போடு சிறிது நேரம் அணைத்தபடி இருந்தேன்.

அதன்பிறகு அருகில் கிடந்த வெள்ளை துண்டால், தூக்கத்திலேயே குழந்தையின் கழுத்தை இறுக்கி கொன்றேன். பிணத்தை வெளியில் எங்காவது வீசி விடலாம் என்று வெளியில் வந்தேன். வெளியில் ஆள்நடமாட்டம் இருந்தது. இதனால் பயந்துபோய், வாஷிங்மெஷினுக்குள் பிணத்தை போட்டுவிட்டேன். பின்னர்தான் குழந்தையை காணவில்லை என்று சத்தம் போட்டு அழுது, நாடகமாடினேன்.

ஆனால் என்னுடன் தூங்கிய எனது உறவுப்பெண் பாக்கியத்திற்கு என் மீது சந்தேகம் இருந்தது. என்னால் நாடகம் ஆட தெரியவில்லை. பின்னர் நானே குழந்தை வாஷிங்மெஷினுக்குள் கிடப்பதை கண்டுபிடித்துவிட்டது போலவும், யாரோ குழந்தையை இவ்வாறு கொலை செய்துவிட்டார்கள் என்று நடித்து தப்பிவிட நினைத்தேன். அந்த நடிப்பும் எடுபடவில்லை.

உறவுப்பெண் பாக்கியம் என் மீது சந்தேகப்பட்டே பேசியபடி இருந்தாள். வீட்டுக்குள் தூங்கிய குழந்தை எப்படி வாஷிங்மெஷினுக்குள் பிணமாக போனது. நானும் வீட்டுக்குள்தானே தூங்கினேன். எனக்கு தெரியாமல், சத்தமே இல்லாமல் குழந்தையை எப்படி, யார் தூக்கிச்சென்று இருப்பார்கள், என்றெல்லாம் அவள் கேள்வி கேட்டபடி இருந்தாள். அவள் என்னை மாட்டி விட்டுவிடுவாள் என்று பயந்தேன்.

இதனால் ஆந்திரா தப்பி ஓடிவிடலாம் என்று நினைத்து, அங்கிருந்து நைசாக நழுவிச்சென்றேன். பின்னர் சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு சென்று, ரெயில் ஏறி ஆந்திரா போய்விட, அங்கு காத்திருந்தேன். அதற்குள் போலீசார் என்னை பிடித்துவிட்டார்கள் என்றுகூறியுள்ளார் ரம்யா.

போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+