கருணாநிதி - குஷ்பு திடீர் சந்திப்பு: கோபாலபுரத்தில் சமரசம் பேசப்பட்டதா?
சென்னை: நடிகை குஷ்பு திமுகவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு போக திட்டமிட்டுள்ளதாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் நடிகை குஷ்பு திடீரென சந்தித்து பேசியுள்ளார்.
திமுகவின் அடுத்த தலைவர் பற்றி குஷ்பு கூறிய கருத்துகள் ஸ்டாலின் ஆதரவாளர்களை கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றது. இதனையடுத்து திருச்சியில் ஸ்டாலின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டார் குஷ்பு. அவரது வீடுகளில் கல்லெறியப்பட்டது. குஷ்புவைத் தாக்கியவர்களின் செயலை காட்டுமிராண்டித்தனம் என கடுமையாக கண்டித்தார் கருணாநிதி.
இந்த நிலையில், கருணாநிதியையும் குஷ்புவையும் இணைத்து, இன்னொரு மணியம்மை என்று குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் கடந்த சில வாரங்களுக்கு முன் செய்தி வெளியானது. கட்டுரை வெளியான குமுதம் ரிப்போர்ட்டரை கொளுத்தினர் திமுகவினர்.

அப்பா மகள் உறவு
இது குறித்து நக்கீரன் வார இதழுக்கு நடிகை குஷ்பு அளித்த பேட்டியில், சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக எதையும் எழுதலாம் என்பது கீழ்த்தரமான, நாலாந்தர சிந்தனை. தனிமனித தாக்குதல், கேரக்டரைஸேஷன் அட்டாக் என்பது பத்திரிகை தர்மங்களை குழி தோண்டிப் புதைத்து விட்டதற்கு சமம். தலைவர் கலைஞருக்கும் எனக்குமான உறவு அப்பா-மகள் போன்றது. அந்த புனிதமான உறவையே இவர்கள் இவ்வளவு கேவலமாக சித்தரித்து செய்தி வெளியிட்டுள்ளனர் என்று வேதனை தெரிவித்தார்.

காங்கிரஸ் செல்ல திட்டம்
என்னதான் பரபரப்பாக செய்திகளில் அடிபட்டாலும் அதற்கு மத்தியில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மானாட மயிலாட சூட்டிங், சீரியல் சூட்டிங் என் பிஸியாகவே இருந்தார் குஷ்பு.
இந்த நிலையில் நடிகை குஷ்பு மார்ச் 15க்குப் பின்னர் திமுகவில் இருந்து விலகி தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியில் இணைப்போவதாகவும் தகவல் பரவியது.

கோபாலபுரத்தில் திடீர் சந்திப்பு
இந்த நிலையில், இன்று காலை திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் நடிகை குஷ்புவும், அவரது கணவர் சுந்தர்.சியும் திடீரென சந்தித்து பேசினர். இது மரியாதை நிமித்தான சந்திப்பு என கூறப்படுகின்றது.

வதந்திக்கு முற்றுப்புள்ளி
தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் கருணாநிதி மீது குஷ்பு கோபமாக இருக்கிறார் என்றும் பேசுவதில்லை என்றும் கூறப்பட்டது. தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மார்ச் 15ம் தேதி கெடு விதித்தார் என்றும் கூறப்பட்ட நிலையில் வதந்திக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக கருணாநிதியை கணவர் சகிதமாக சந்தித்துள்ளார் நடிகை குஷ்பு என்று தெரிகிறது.
என்னதான் கருணாநிதியைப் பார்த்து குஷ்பு பேசினாலும் கூட ஸ்டாலின் ஆதரவாளர்கள் தொடர்ந்து மரியாதையுடன் குஷ்புவை நடத்துவார்களா என்பது சந்தேகம்தான் என்றும் சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications