திமுக விலகல் இறுதியல்ல, மத்திய அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ள நெருக்கடியே: தா.பா

இது குறித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறுகையில், இலங்கை பிரச்னையில் மத்திய அரசு இனியாவது முடிவு எடுக்க வேண்டும் என்றார்.
தேர்தலை சந்திக்க பாஜக தயார்:
பாஜக தேசியத் தலைவர்களில் ஒருவரான முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில், திமுக வெளியேறியதை அடுத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி பெரும்பான்மையை இழந்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இறுதி கவுண்டவுன் துவங்கிவிட்டது. தேர்தலை எதிர்கொள்ள பாஜக எப்போதும் தயாராக உள்ளது என்றார்.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் தா.பாண்டியன் கூறுகையில், திமுகவின் முடிவு தாமதமாக இருந்தாலும் பாராட்டுதலுக்கு உரியது. இது இறுதி முடிவு இல்லை. இருந்தாலும் மத்திய அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ள நெருக்கடி என்றார்.
மறுபரிலீசனை செய்ய கருணாநிதிக்கு லாலு பிரசாத் கோரிக்கை:
மத்திய அரசு கூட்டணியில் இருந்து விலகும் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு ராஷ்டிரீய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
2009ல் செய்திருந்தால் தமிழர்கள் வென்றிருப்பார்கள் - பாஜக
தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவின் இந்த முடிவு மிகவும் வரவேற்க கூடிய ஒன்று. இதே நடவடிக்கையை 2009-ம் ஆண்டில் எடுத்து இருந்தால் இலங்கையில் மிகப்பெரிய அழிவு ஏற்பட்டு இருக்காது. தமிழர்கள் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள். போரில் தமிழர்கள் வென்று இருப்பார்கள். இருப்பினும்,
திமுக இப்போதாவது இந்த முடிவை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது என்றார்.
சிபிஎம் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்த மக்கள் விரோத கொள்கைகள் அனைத்தையும் திமுக தலைமை ஆதரித்தது. சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு செய்யும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தபோது, அது வரக்கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை விட்டார்.
பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தால் ஆதரிப்போம் என்றார். அதற்கான வாக்கெடுப்பு நடந்த போதும் மத்திய அரசை ஆதரித்தார்கள்.
திமுக தலைமை மீது மக்களுக்கு கடுமையான அதிருப்தி ஏற்பட்டு இருக்கிற இந்த சூழ்நிலையில் மத்திய அரசில் இருந்து விலகியதாக கூறியுள்ளார். இதுவும் ஒரு அரசியல் நாடகமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கருணாநிதி சொல்வது ஒன்றும், செய்வது ஒன்றுமாக இருக்கிறது. அதனால் பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications