மு.க. ஸ்டாலின் வீடு சோதனை- முலாயம் சிங், மாயவதிக்கு மத்திய அரசு விடுத்திருக்கும் மறைமுக மிரட்டல்?
டெல்லி: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ திடீர் சோதனை நடத்தியிருப்பது என்பது சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி ஆகியோருக்கு மத்திய அரசுக்கு விடுத்த மிரட்டலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த ரெய்ட் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்குத் தெரியாமல் அவர்கள் தரப்பில் இருந்தே கூறப்பட்டாலும் கூட, இந்த ரெய்டின் பின்னணி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஈழத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசின் நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதரவை திமுக திரும்பப் பெற்றது. மத்திய அரசானது சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளின் தயவில்தான் இருக்கிறது. திமுக ஆதரவை விலக்கினாலும் தங்களது ஆதரவு தொடரும் என்று ஏற்கெனவே இரு கட்சிகளும் தெரிவித்திருந்தன. உத்தரப்பிரதேச அரசியலில் எதிரிகளாக இருக்கும் மாயாவதியும் முலாயம்சிங்கும் தங்கள் மீதான வழக்குகளில் இருந்து தப்பிக்கவே மத்திய அரசை தாங்கிக் கொண்டிருக்கின்றனர். மத்திய அரசுக்கு சிக்கலான நேரங்களில் இந்த இருவருமே காப்பாற்றியும் இருக்கின்றனர்.
இருப்பினும் தற்போது முலாயம்சிங் யாதவ், தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர் என்று பேசிய மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மாவை நீக்க வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி வலியுறுத்தி வருகிறது. அமைச்சர் பேனி பிரசாத்தை நீக்காவிட்டால் மத்திய அரசுக்கான ஆதரவு தெரிவிப்பது குறித்து யோசிக்க நேரிடும் என்றும் இன்று அரசுக்கான ஆதரவு குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் சமாஜ்வாடி கட்சி தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் அரசுக்கான ஆதரவை திமுக திரும்பப் பெற வேண்டும் என்பதில் முக்கியப் பங்கு வகித்ததாக கூறப்படும் மு.க.ஸ்டாலின் வீட்டில் திடீர் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற்ற மறுநாளே ஸ்டாலின் வீட்டில் சோதனை நடத்தியது என்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. குறிப்பாக இன்று முடிவெடுக்கப் போவதாக அறிவித்த சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம்சிங்குக்கு விடுக்கப்பட்டிருக்கும் ஒரு மறைமுக மிரட்டலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதேபோல் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கும் ஸ்டாலின் வீட்டு சோதனை நடவ்டிக்கை மூலம் அரசுக்கு ஆதரவு தராவிட்டால் உங்களுக்கும் இப்படி நடக்கலாம் என்று விடுக்கப்பட்ட மிரட்டலாகவும் இருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications