அதிமுக அரசின் பட்ஜெட்டால் அனைவருக்கும் பெரும் ஏமாற்றம்: கருணாநிதி

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பொதுவாக அதிமுக அரசின் நிதி நிலை அறிக்கைக்கு எந்தவிதமான முக்கியத்துவமும் இருப்பதாகத் தெரியவில்லை. காரணம், நிதி நிலை அறிக்கைக்கு முதல் நாள் கூட முதல்வர் பெயரால் அறிவிப்புகள் வரத் தவறுவதில்லை.
பேரவை நடைபெறுகிறபோது அன்றாடம் 110வது விதியின் கீழ் ஒரு அறிவிப்பினை வெளியிடுவதும், பேரவை நடைபெறாத நேரங்களில், எப்போதோ நிதி நிலை அறிக்கையில் வெளிவந்த அறிவிப்புக்கான அரசாணைகளில் கையெழுத்திட்ட பிறகு, அதை ஏதோ முதல்வர் அப்போது தான் புதியதாகத் தெரிவிப்பதைப் போல அறிவிப்பதும், அந்த அறிவிப்பின் பெயரால் நன்றி விளம்பரங்களை முழுப் பக்க அளவிற்கு வெளியிடுவதும் அனைவரும் அறிந்த வழக்கமான ஒன்று தான்.
மேலும் நிதி நிலை அறிக்கையிலே கூறப்பட்டவை, அடுத்த ஆண்டு நிதி நிலை அறிக்கை படிக்கப்படுவதற்கு முன்பு தான் முதல்வரால் கையெழுத்திடப் பட்டு அரசின் செய்தி வெளியீடுகளாகத் தரப்படுகின்றன. கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையிலே தெரிவிக்கப்பட்ட பல அறிவிப்புகளுக்கான தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று கடந்த சில நாட்களுக்கு முன்பாகக் கூட எந்தெந்தத் துறையில் எத்தனை அறிவிப்புகளுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதைப் பற்றிப் பெரிதாக வெளியிட்டிருந்தார்கள்.
காவிரித் தண்ணீரை உரிய நேரத்தில் தேவையான அளவுக்கு அதிமுக அரசு பெற்றுத் தராத காரணத்தால் டெல்டா மாவட்டங்களில் குறுவைப் பயிரும், சம்பாப் பயிரும் பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டது. 17 விவசாயிகள் இந்த ஆட்சியில் தற்கொலை செய்து கொண்டு இறந்த பிறகும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் இந்த ஆட்சியிலே நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தஞ்சையிலே முதல்வர் அறிவிப்பார் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்ததைப் போலவே, இந்த நிதி நிலை அறிக்கையிலாவது நிவாரணம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் இந்த நிதி நிலை அறிக்கையும் பெரும் ஏமாற்றத்தை அவர்களுக்கு மட்டுமல்லாமல், தமிழகத்திலே உள்ள அனைத்து விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கும் அளித்துள்ளது.
ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து மாணவர்கள் உள்ளிட்ட தமிழகமே கொதித்துப் போய் ஆங்காங்கு சாலை மறியல், மனிதச் சங்கிலி போன்ற அறப்போராட்டங்களில் நாள்தோறும் ஈடுபட்டிருக்கும்போது, இந்த நிதிநிலை அறிக்கையில் ஒரு வரி கூட இடம் பெறச் செய்யாதது, இந்த ஆட்சியினர் ஈழத் தமிழர் பிரச்சினையில் எந்த அளவிற்கு அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தான் தெளிவுபடுத்துகிறது. நல்ல வேளையாக 2002ம் ஆண்டு இதே சட்டப் பேரவையில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான ஒரு தீர்மானத்தை ஜெயலலிதா முன்மொழிந்து நிறைவேற்றினாரே, அதைப் போல ஒரு தீர்மானத்தை மீண்டும் கொண்டு வருவோம் என்று அறிவிக்காமல் விட்டார்களே, அதற்காக நாம் ஆறுதல் கொள்ளலாம்.
நிதி நிலை அறிக்கையில் பத்தி 41ல் 'கூட்டுறவு நிறுவனங்களில் ஜனநாயகம் தழைத்தோங்கச் செய்வோம்' என்று குறிப்பிட்டிருப்பது நகைப்பிற்குரிய ஒன்றாகும். கூட்டுறவு நிறுவனங்களில் உறுப்பினர்களையே முறையாகச் சேர்க்காமலும், வாக்காளர் பட்டியலை சட்டப்படி வெளியிடாமலும் கூட்டுறவுத் தேர்தல்களை நடத்த அதிமுக அரசு முன் வந்திருப்பது ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் செயலாகும்.
தமிழக மீனவர்கள் அன்றாடம் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டு அவர்கள் பல்வேறு இழப்புகளுக்கு ஆளாகி வருகிறார்கள். அதைப் பற்றியும் நிதி நிலை அறிக்கையிலே எந்தக் குறிப்பும் இல்லை.
தமிழகத்திலே உள்ள பல்வேறு அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்திருக்கின்ற நிலையில் அதைப்பற்றியெல்லாம் என்ன செய்யப் போகிறோம் என்று நிதி நிலை அறிக்கை விளக்குவதற்குப் பதிலாக மத்திய அரசின் மீது பழி போட்டுத் தப்பிக்க நினைக்கும் போக்கே இந்த நிதி நிலை அறிக்கையில் காணப்படுகிறது.
நாள்தோறும் 15 மணி நேரம் மின் வெட்டு, 18 மணி நேரம் மின்வெட்டு என்று அதிமுக ஆட்சியில் இருந்து வருகின்ற காரணத்தால் சிறு, குறு தொழில்கள் எல்லாம் நசிவடைந்து பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் தேடி அண்டை மாநிலங்களுக்கு குடி பெயர்ந்து விட்டார்கள். அவர்களின் நிவாரணம் குறித்தோ, சிறு குறு தொழில்களை மீண்டும் உயிர்ப்பிப்பது குறித்தோ நிதி நிலை அறிக்கையில் எந்த விதமான விளக்கமும் இல்லை. அதைப் போலவே கொஞ்சம் கொஞ்சமாக நசிந்து வரும் கைத்தறித் தொழிலுக்கு கை கொடுத்து உதவிட புதிய திட்டம் எதுவும் நிதி நிலை அறிக்கையிலே இல்லாதது, லட்சக்கணக்கான கைத்தறி நெசவாளர்களை ஏமாற்றம் அடையவே செய்யும்.
இரண்டாண்டுகள் ஆட்சி நடத்திய பிறகும் மின் உற்பத்தித் திட்டங்களிலே எந்த முன்னேற்றத்தையும் காட்டாமல் உடன்குடி மின் உற்பத்தித் திட்டமே 2013-2014ம் ஆண்டிலே தான் தொடங்கும் என்று அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றுவதற்கான ஒன்றே தவிர மின் உற்பத்தி குறித்தும், தமிழகம் தொடர்ந்து இருளில் மூழ்கிக் கிடப்பதைக் குறித்தும் இந்த ஆட்சியினர் கவலைப்படவில்லை என்பதையே காட்டுவதாக நிதி நிலை அறிக்கை உள்ளது.
அதிமுக அரசு 2011ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையிலே 3000 பேருந்துகளையும், 2012ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையிலே 3000 பேருந்துகளையும் புதிதாக வாங்கப் போவதாக அறிவித்துவிட்டு, அதற்கு மாறாக இன்றைய நிதி நிலை அறிக்கையில் இதுவரை 2,855 பேருந்துகளை மட்டுமே, அதாவது ஓராண்டிற்கு வாங்கப் போவதாகத் தெரிவித்ததை விடக் குறைவாக, புதிதாகப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருப்பதாகக் கூறியிருப்பது ஒன்றே, இந்த அரசின் வேகத்தைப் பற்றி அறிந்து கொள்ள வழிவகை செய்துள்ளது. இந்த லட்சணத்தில் பேருந்து கட்டணத்தை இந்த அரசு பொறுப்புக்கு வந்தவுடன் இதுவரை இல்லாத அளவிற்கு உயர்த்தியது என்பதையும் நாம் நினைவிலே கொள்ள வேண்டும்.
தமிழகம் முழுவதுமே இந்த ஆண்டு கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்று வல்லுநர்களும், பத்திரிகைகளும் தொடர்ந்து எச்சரிக்கை கொடுத்த வண்ணம் உள்ளனர். அது பற்றியும் நிதி நிலை அறிக்கையிலே எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
முதியோர், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் சமுதாயத்தில் நலிந்த பிரிவினருக்கு வழக்கம் போலவே இந்த நிதி நிலை அறிக்கையிலே எந்தப் புதுவித அறிவிப்பும் இல்லை.
திமு கழக ஆட்சியில் அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்காக பல்வேறு வாரியங்களை அமைத்து, அவர்களை எல்லாம் உறுப்பினர்களாக்கி, நிவாரண உதவிகளும், நலத்திட்டச் சலுகைகளும் செய்து வந்தோம். ஆனால் தற்போது அதிமுக ஆட்சியில் அந்த அமைப்புச் சாரா வாரியங்கள் எல்லாம் மூடப்பட்ட நிலையில், அதில் உறுப்பினர்களாகச் சேர்ந்த பல லட்சக்கணக்கான தொழிலாளர்களின் கதி என்ன என்பதைப் பற்றி இந்த நிதி நிலை அறிக்கை சிறிதும் கவலை கொள்ளவில்லை.
அரசு அலுவலர்கள் என்றால் அதிமுக அரசுக்கு அலர்ஜி என்பது தான் தெரியுமே; அந்த வகையில் அவர்களுக்கு ஏதேதோ செய்யப் போவதாக அறிவித்தும், அதற்கான எந்தத் திட்டமும் இந்த நிதி நிலை அறிக்கையிலே கூறப்படவில்லை.
ஒட்டு மொத்தமாக 2013-2014ம் ஆண்டுக்கான அதிமுக அரசின் நிதி நிலை அறிக்கை என்பது தமிழகத்தின் அனைத்துப் பிரிவினரையும் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாக்கியிருப்பதோடு, எந்தத் தரப்பினருக்கும் நிவாரணம் அளிக்கக் கூடிய ஒன்றாகவும் அமையவில்லை என்பது தான் உண்மை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications