கேரளாவுக்கு ஒரு நியாயம், தமிழக மீனவர்களுக்கு ஒரு நியாயமா... கருணாநிதி கேள்வி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: கேரள மீனவர்களையும், தமிழக மீனவர்களையும் மத்திய அரசு பாகுபடுத்தி பார்ப்பது நியாயம் தானா? இதுவரை தமிழக மீனவர்கள் 600 பேருக்கு மேல் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்களே! ஒரு நிகழ்விலாவது கேரள மீனவர் பிரச்சினையில் பின்பற்றப்பட்ட அணுகுமுறையும், காட்டப்பட்ட ஆர்வமும், வேகமும்; தமிழக மீனவர் இலங்கை கடற்படையினர் பிரச்சினையில் கடைப்பிடிக்கப்பட்டதுண்டா? என்று திமுக தலைவர் கருணாநிதி காட்டமுடன் கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த கேரளாவைச் சேர்ந்த 2 மீனவர்களை சுட்டுக்கொலை செய்த இத்தாலி கடற்படை அதிகாரிகள் 2 பேரை விடுவிக்க ராஜ்ய ரீதியில் இத்தாலி அரசு எடுத்த பல்வேறு தொடர் முயற்சிகள் வெற்றி அளிக்கவில்லை. இது தொடர்பாக இத்தாலி அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

கடந்த மாதம் தேர்தலில் வாக்களிப்பதற்காக சுப்ரீம் கோர்ட் அனுமதியுடன் இத்தாலி சென்ற 2 அதிகாரிகளை, இந்தியாவுக்கு அனுப்ப முடியாதென்று அந்நாட்டு அரசு அறிவித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த இடதுசாரி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் மன்மோகன் சிங்கை தனித்தனியே சந்தித்து, இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினர்.

அதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங், இத்தாலி அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அம்மையாரும் இத்தாலி அரசு துரோகம் இழைத்து விட்டதாக குற்றஞ்சாட்டினார்.உச்ச நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுத்தது. இத்தாலி தூதர் நாட்டை விட்டு வெளியேற அதிரடியாக தடை விதித்தது. இதையடுத்து இத்தாலி அரசு பணிந்து, 2 வீரர்களையும் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. இது இத்தாலி; இப்போது இலங்கைக்கு வருகிறேன்.

கடந்த மாதம் பிப்ரவரி 27-ந் தேதியன்று தூத்துக்குடி, தருவைகுளத்தைச் சேர்ந்த மீனவர்கள் 16 பேர் சிங்கள கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரை மார்ச் 13-ந் தேதியன்று சிங்களப் படையினர் கடத்திச் சென்று, தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 19 மீனவர்களும் மார்ச் 28-ந் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையில் 14-ந் தேதியன்று ராமேசுவரத்தைச் சேர்ந்த 34 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றார்கள். 18.3.2013 அன்று புதுக்கோட்டை மாவட்டம் புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த 3 பேரை இலங்கை கடற்படையினர் கடுமையாக தாக்கியிருக்கிறார்கள்.தமிழக மீனவர்கள் இவ்வாறு சிறை பிடிக்கப்படும்போதெல்லாம் மத்திய அரசுக்கு, முதல்வர் உடனே கடிதம் எழுதுவதும், மத்திய அரசின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் இலங்கையிடம் முறையிடுவதும் தொடர்கதையாக நீடித்து வருகிறது.

இந்த நிலையில் 13-ந் தேதி சிறைபிடிக்கப்பட்டு, அனுராதபுரம் சிறையில் இருக்கும் ராமேசுவரம் மீனவர்கள் 28-ந் தேதி ரிமாண்ட் காலம் முடிவுற்று தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ஏப்ரல் 11-ந் தேதி வரை அவர்களது ரிமாண்ட் காலத்தை நீட்டித்து இலங்கை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதை அறிந்து அந்த 19 மீனவர் குடும்பத்தினரும் பெரும் வேதனையில் மூழ்கியுள்ளனர்.

கேரள மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் பிரச்சினை எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய பிரதமர் மன்மோகன் சிங், இரு கடற்படை வீரர்களையும் திருப்பி அனுப்ப முடியாதென இத்தாலி கூறியிருப்பது, ஏற்கத்தக்கதல்ல என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது. இத்தாலியின் நடவடிக்கை, நமது நாட்டில் கிளர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்சினை மிக முக்கியமான பிரச்சினை என்பதை உணர்ந்து அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.

இந்த அளவிற்கு வேகம் காட்டுகின்ற இந்திய அரசு, கடலில் மீன் பிடிக்கச் சென்ற பாவத்திற்காக 19 தமிழக மீனவர்கள் இலங்கையிலே சிறையிலே அடைக்கப்பட்டு, தற்போது அவர்களின் ரிமாண்ட் நீடிக்கப்பட்டிருக்கிறதே, அதற்காக என்ன சொல்கிறது?

கேரள மீனவர்களையும், தமிழக மீனவர்களையும் பாகுபடுத்தி பார்ப்பது நியாயம் தானா? இதுவரை தமிழக மீனவர்கள் 600 பேருக்கு மேல் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்களே! ஒரு நிகழ்விலாவது கேரள மீனவர் பிரச்சினையில் பின்பற்றப்பட்ட அணுகுமுறையும், காட்டப்பட்ட ஆர்வமும், வேகமும்; தமிழக மீனவர் இலங்கை கடற்படையினர் பிரச்சினையில் கடைப்பிடிக்கப்பட்டதுண்டா? கைது செய்த இந்திய மீனவர்களை காவல் நீடிப்பு செய்து மேலும் 15 நாட்களுக்கு சிறையிலே பூட்டிவைக்கப்படுகிறார்கள்.

ஏனென்றால் தமிழர்களின் ஒற்றுமையில்லாத போக்குத்தான் இதற்கு காரணம். தமிழக சட்டமன்றத்தில் தமிழ் ஈழத் தீர்மானம் வந்த போது தி.மு.க. வெளிநடப்பு செய்தது ஏன்? கருணாநிதிக்கு பழ.நெடுமாறன் கண்டனம் என்று தலைப்பிட்டு செய்தி வெளியாகியுள்ளது.பழ.நெடுமாறனை நான் கேட்க விரும்புவதெல்லாம், தமிழ் ஈழத் தீர்மானம் வந்த போது தி.மு.க. வெளிநடப்பு செய்ததா? அல்லது அவர்கள் வெளியேற்றப்பட்டார்களா? தமிழீழத் தீர்மானம் அவையில் கொண்டு வரப்போவது குறித்து முன்கூட்டியே யாருக்கும் தெரிவிக்கவில்லை.தமிழகத்தில் மாணவர்கள் நடத்தும் போராட்டம் குறித்து விதி 55-ன் கீழ் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது விவாதத்தில், முதல்வர் பதிலளித்து பேசும்போது என்மீதும், தி.மு.க. மீதும் கடுமையான குற்றச்சாற்றுகளை அடுக்கினார்.

இதை எதிர்த்து தி.மு.க. உறுப்பினர்கள் குரல் கொடுத்ததால், பேரவைத் தலைவர் தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டார். இதன் பின்னர் முன் அறிவிப்பும் இல்லாமல் ஈழத்தமிழர்களுக்கான திடீரென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.ஆனால் நெடுமாறன் தமிழ் ஈழத் தீர்மானம் வந்தபோது தி.மு.க. வெளிநடப்பு செய்தது ஏன் என்று எனக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். ‘‘வெளியேற்றப்பட்டனர்'', ‘‘வெளியேறினர்'' என்பதற்கு உள்ள வேறுபாட்டை நல்ல ஆசிரியர் ஒருவரை வைத்து அவர் கற்றுத்தெரிந்து கொள்வது நல்லது.வெளிநடப்பு செய்ததன் மூலம் ஈழத் தமிழர்களுக்கு தி.மு.க. துரோகம் செய்து விட்டதாம். தமிழகத்திலே இப்படி சில அரசியல்வாதிகள்!!

எங்கே இந்த ஆட்சியில் தங்களுக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்பதற்காக தேவையில்லாமல் ஓடிப்போய் பாராட்டு தெரிவிக்கிறார்கள். இப்படி பட்டவர்களின் பொல்லாத அணுகுமுறைகளால்தான் தமிழக மீனவன் தாக்கப்படுகிறான், நாதியற்றவனாக வாழ்கிறான் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+