லோக்சபா தேர்தலை தேமுதிக புறக்கணித்தால் எந்த கட்சிக்கு சாதகம்? பாதகம்?

தேமுதிக கடந்த சட்டசபை தேர்தலில் முதல் முறையாக அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. இதனால் அக்கட்சிக்கு 29 எம்.எல்.ஏக்கள் கிடைத்தனர். இந்த 29 எம்.எல்.ஏக்கள் மற்றும் அதிமுக ஆதரவுடன் விஜயகாந்த் தமது மைத்துனர் சுதீஷை ராஜ்யசபா எம்.பி.யாக்க திட்டமிட்டிருந்தார். இதன் மூலம் நாடாளுமன்றத்துக்குள் தேமுதிக நுழைந்துவிட முடியும் எனவும் கனவு கண்டிருந்தார்.
ஆனால் அந்தக் கனவு ஒருகாலத்திலும் நடக்காது என்ற வகையில் அவரது கட்சியில் 5 எம்.எல்.ஏக்கள் அதிருப்தியாளர்களாகி அதிமுக அணிக்கு தாவினர். 6 எம்.எல்.ஏக்கள் 6 மாத காலம் சஸ்பென்ட் செய்யப்பட்டிருக்கின்றனர். திமுக ஆதரவு இருந்தால்தான் தேமுதிகவுக்கு ஒரு ராஜய்சபா சீட் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
இதையடுத்து தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டை விட்டுக் கொடுத்து லோக்சபா தேர்தலுக்கான கூட்டணிக்கு திமுக அடிக்கல் நாட்ட திட்டமிட்டிருக்கிறது.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் மாணவர் போராட்டங்களின் எழுச்சியை முன்வைத்து தமிழக சட்டசபையில் அதிரடியாக இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை குறிப்பாக தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அதிமுக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இதனால் தமிழீழம் கோரும் மதிமுக, அதிமுக அணியில் இணைவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே அதிமுகவின் கூட்டணிக் கட்சியாகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட்டு வருகிறது.
லோக்சபா தேர்தலில் பிரதான தேசியக் கட்சிகளான காங்கிரஸும் பாரதிய ஜனதாவும் தனித்து விடப்பட்டிருக்கின்றன. பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைப்பேன் என இந்திய ஜனநாயகக் கட்சி என்ற ஒரு சிறு கட்சிதான் ஓராண்டுக்கு முன்பே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த், லோக்சபா தேர்தலையே புறக்கணிப்போம் என்று அறிவித்திருப்பதன் மூலம் திமுக தரப்பு அதிர்ந்து போயிருக்கிறது. தேமுதிக ஒரு அரசியல் கட்சி. தேர்தலையே புறக்கணிப்பது என்பது சரியல்ல என்று அக்கட்சியின் எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் கருத்து தெரிவித்திருக்கிறார். அப்படி தேமுதிக உறுதியாக தேர்தல் புறக்கணிப்பை மேற்கொண்டால் திமுக-விடுதலைச் சிறுத்தைகள் ஒரு அணியாகவும் காங்கிரஸ் சிறு கட்சிகளுடன் இணைந்து மற்றொரு அணியாகவும் அதிமுக பலம் வாய்ந்த ஒரு அணியாகவும் தேர்தல் களத்துக்குப் போகக் கூடும்.
விடுதலைச் சிறுத்தைகளுடன் திமுக இணைவத்து அப்படி ஒன்றும் பெரும் பலம் அல்ல.. கிட்டத்தட்ட தனித்துப் போட்டியிடுவது போலத்தான் திமுகவுக்கு! தனித்துப் போட்டியிட்டால் என்ன நடக்கும் என்பதும் திமுக தலைமைக்கு நன்றாகவே தெரியும்!
அதேபோல் இதுநாள் வரையில் அதிமுக, திமுக என மாநிலக் கட்சிகளின் தோளில் சவாரி செய்து கொண்டிருந்த காங்கிரஸ் இப்போது தனித்துத்தான் போட்டியிட வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் இனி இருக்குமா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்கக் கூடிய தேர்தலாகவே வரும் லோக்சபா தேர்தல் இருக்கிறது.
அதிமுகவுக்கு மின்வெட்டு பிரச்சனை மிகப் பெரிய சிக்கல்தான்.. ஆனால் இந்த சிக்கலை ஈழப் பிரச்சனையில் மக்களின் மனோநிலைக்கு ஏற்றவாறு நடந்து கொண்டு ஒரு மக்கள் ஆதரவு நிலையைப் பெற்றிருக்கிறது அதிமுக அரசு.
இதனால் தேமுதிக எனும் பங்காளி இல்லாமல் களத்துக்குப் போகப் போகும் திமுகவுக்குத்தான் பேரிழப்பு! அதுவே அதிமுகவுக்கு சாதகமாக அமையும்! அதிமுக அணியில் இடம் பெற்றால் வைகோவின் மதிமுக இதுவரை கண்டிராத பெரும் ஏற்றத்தையும் கூட பெறக் கூடும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது!
ஆக லோக்சபா தேர்தல் களத்தில் திமுக- அதிமுக ஆகிய அணிகளின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கக் கூடிய தவிர்க்க முடியாத ஒரு சக்தியாகவே தேமுதிக இருந்து வருகிறது என்பதே நிதர்சனம். இருப்பினும் 'அனைத்து கட்சிகளும் தேர்தலை புறக்கணித்தால்தான் நாங்களும் புறக்கணிப்போம்' என்று விஜயகாந்த் பேசியிருப்பதால் திமுக சற்றே ஆறுதலோடு காத்திருக்கிறது... திமுகவின் காத்திருப்பு கரைசேருமா?












Click it and Unblock the Notifications