ஊழல்தான் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது: சிபிஐ பொன்விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

டெல்லியில் சிபிஐ அமைப்பின் பொன்விழா இன்று கொண்டாடப்பட்டது. 1963 ஆம் ஆண்டு சிபிஐ உருவாக்கப்பட்டது. இதன் முதல் இயக்குநராக டி.பி. கோஹ்லி பதவி வகித்தார். அவர் 1968 ஆம் ஆண்டு வரை இப்பதவியில் இருந்தார். நடப்பாண்டு சிபிஐயின் பொன்விழாவைக் கொண்டாடும் வகையில் இன்று சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பொன்விழா ஆண்டு லோகோவையும் சிறப்பு மலரையும் வெளியிட்டுப் பேசினார்.
அவர் தமது உரையில், நமது நாட்டில் நல்லாட்சி, நல்ல நிர்வாகம் நடத்துவதற்கான அனைத்து அம்சங்களையும் நமது நாட்டை உருவாக்கிய தலைவர்கள் அரசியல் சாசனத்திலேயே இடம்பெறச் செய்திருக்கின்றனர். சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் ஊழல் புகார்கள் பற்றி விரைந்து விசாரணை நடத்த வேண்டும்.சிறப்பான ஆட்சியை மக்களுக்கு வழங்க வேண்டும். ஒருமித்த கருத்து ஒற்றுமையின் மூலம் சட்டம், ஒழுங்கை நிர்வகிப்பதில் நாம் இன்னும் மேம்பாடு எய்த வேண்டும்.
சமுதாயத்தில் உள்ள இயலாமைக்கு எல்லாம் சிறப்பான ஆட்சி முறையற்ற நிலைதான் காரணமாக உள்ளது. சிறப்பான ஆட்சியை வழங்க வேண்டும் என்பதே ஆட்சியாளர்களின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். நமது நாட்டின் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக ஊழல் உள்ளது. போலீசாரும், புலனாய்வு அமைப்புகளும், எந்த குற்றமும் தண்டனையில் இருந்து தப்ப கூடாது என்ற வகையில் செயலாற்ற வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications