3 தமிழர்களை காக்க அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேறுக : ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 3 தமிழர்களை காக்க அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தேவிந்தர் பால் சிங் புல்லார் என்பவர் தமது கருணை மனுவை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்தும் தீர்ப்பளித்திருக்கிறது.

தூக்கு தண்டனையை ரத்து செய்யும்படி தாம் தாக்கல் செய்த கருணை மனுவை 8 ஆண்டுகள் கழித்து தள்ளுபடி செய்தது தவறு என்றும், 8 ஆண்டுகளுக்கும் மேலாக தூக்குக்கயிற்றின் நிழலில் சிறையில் கடும் வேதனையையும், மன உளைச்சலையும் அனுபவித்த தமக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது இயற்கை நீதிக்கு எதிரானது என்றும் கூறித் தான் புல்லார் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஆனால், கருணை மனு மீது முடிவெடுப்பதில் கால தாமதம் செய்யப்பட்டதை கருத்தில் கொள்ளாமலேயே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இத்தீர்ப்பு கடும் அதிர்ச்சி அளிக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தவறு என்றும், கருணை மனு மீது முடிவெடுப்பதில் செய்யப்பட்ட கால தாமதத்தை நீதிபதிகள் கருத்தில் கொண்டிருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எஸ். சோதி உள்ளிட்ட சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

புல்லாரின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பதால், அதே காரணத்தின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூன்று தமிழர்களின் மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்யும் ஆபத்துள்ளது.

பாலாறு குண்டு வெடிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 பேர், தருமபுரி பேரூந்து எரிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட மூவர் ஆகியோர் தொடர்புடைய வழக்கிலும் இந்தத் தீர்ப்பு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த நிலையில் மூன்று தமிழர்களின் உயிரை காப்பாற்றுவது தமிழக அரசின் கைகளில் தான் உள்ளது.

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி கடந்த 2011-ஆம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதேபோன்று அரசியல் சட்டத்தின் 161- வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி மூவரின் தூக்கு தண்டனையை தமிழக ஆளுனர் ரத்து செய்ய வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றுவதன் மூலம் 3 தமிழர்களையும் காப்பாற்ற முடியும்.

அரசியல் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி மூவரின் தூக்கு தண்டனையை தமிழக ஆளுனர் ரத்து செய்யும் பட்சத்தில் அதில் யாரும் தலையிட முடியாது.

எனவே, தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக அமைச்சரவையை கூட்டி , தீர்மானத்தை நிறைவேற்றி பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று தமிழர்களின் உயிரையும் காப்பாற்ற வேண்டும்.

அதுமட்டுமின்றி, உலகில் சுமார் 125 நாடுகளில் தூக்கு தண்டனை ஒழிக்கப்பட்டு விட்ட நிலையில், அந்த நாடுகளை பின்பற்றி இந்தியாவிலும் தூக்கு தண்டனையை ஒழிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் ‘ எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+