கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் 2 தமிழர்களுக்கு வாய்ப்புத் தந்த எதியூரப்பா

Subscribe to Oneindia Tamil

IR perumal
பெங்களூர்: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் இரு தமிழர்களுக்கு போட்டியிட வாய்ப்பு தந்துள்ளார் கர்நாடக ஜனதா கட்சியின் தலைவரான எதியூரப்பா.

வரும் மே மாதம் 5ம் தேதி கர்நாடகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது.

இதில் நான்கு முனைப் போட்டி உருவாகியுள்ளது. காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம், கர்நாடக ஜனதா கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

இதில் எதியூரப்பா கட்சி சார்பில் பெங்களூர் சிவாஜிநகர் தொகுதியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான ஐ.ஆர்.பெருமாளும், சர் சி.வி.ராமன் தொகுதியில் ரவிக்குமாரும் போட்டியிடுகின்றனர்.

தேசியக் கட்சிகளான காங்கிரசும் பாஜகவும் தமிழர்களைப் புறக்கணித்துவிட்ட நிலையில், எதியூரப்பா தான் வாய்ப்புத் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களுரில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட காரணமாக இருந்தவரும் எதியூரப்பா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

1982ம் ஆண்டு கர்நாடக பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான பெருமாள் மைசூர் மினரல்ஸ் நிர்வாக இயக்குனராகவும், பல்வேறு கர்நாடக மாவட்டங்களில் ஆட்சித் தலைவராகவும், தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குனராகவும், கைத்தறித்துறை இயக்குனராகவும் இருந்தவர் ஆவார்.

அவர் கூறுகையில், சிவாஜி நகர் தொகுதியில் எனக்கு வாய்ப்பளித்த எதியூரப்பாவுக்கு நன்றி. பெங்களூரில் மொத்தமுள்ள 700 குடிசைப் பகுதிகளில் 300ல் தமிழர்கள் தான் வசிக்கின்றனர். முன்பு கர்நாடகத்தில் 500 தமிழ்ப் பள்ளிகள் இருந்தன. இப்போது அவை 50 ஆகக் குறைந்துவிட்டன. இந்தப் பிரச்சனைகளை எல்லாம் சரி செய்ய முயல்வேன்.

சிவாஜி நகர் தொகுதியில் 1.67 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 92,000 பேர் தமிழர்கள். இருந்தும் இதுவரை இங்கு ஒருமுறை கூட தமிழர்கள் வென்றதில்லை. இப்போது இங்கு போட்டியிட எனக்கு வாய்ப்புத் தந்துள்ளார் எதியூரப்பா என்றார்.

இவர் திருவண்ணாமலை மாவட்டம் பெரனமல்லூரைச் சேர்ந்தவர் ஆவார்.

அதிமுக சார்பில்...

இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் 5 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளராருமான ஜெயலலிதா. பெங்களூர் காந்தி நகரில் அதிமுக கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தியும், ராஜாஜி நகரில் கே.முனிசாமியும் போட்டியிடுகின்றனர். கோலார் தங்க வயல் தொகுதியில் எம்.அன்பு போட்டியிடுகிறார். மைசூர் மாவட்டம் நரசிம்மராஜா தொகுதியில் ரவீந்திர குமாரும், சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள ஹனூர் தொகுதியில் ரவியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு ஆதரவாக தமிழக அமைச்சர்களும் பிரச்சாரத்துக்கு வர உள்ளதாகத் தெரிகிறது.

ஆனால், ஒரு காலத்தில் கர்நாடக சட்டசபையில் எம்எல்ஏக்களைக் கொண்டிருந்த திமுக இப்போது கழுதை தேய்ந்த கதையாக மாறிவிட்டது. இங்கு அந்தக் கட்சி சார்பில் கவுன்சிலர் தேர்தலுக்குக் கூட யாரும் போட்டியிடுவதில்லை.

எதியூரப்பா இன்று வேட்பு மனு தாக்கல்:

இந் நிலையில் எதியூரப்பா ஷிமோகா மாவட்டத்தில் உள்ள தனது சொந்தத் தொகுதியான சிகாரிபுரா தொகுதியில் போட்டியிட இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

முன்னதாக இன்று காலை 10 மணிக்கு சிகாரிபுரா நகரில் ஆஞ்சநேயர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று தாசில்தார் அலுவலகத்தில் இன்று பகல் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+