மதுரையில் ரூ.2.5 லட்சம் ரூபாய்க்கு ஆண் குழந்தையை விற்ற 3 பெண்கள் கைது
மதுரை: மதுரையில் பெற்றோர்களிடம் பணத்தாசை காட்டி 50 ஆயிரம் ரூபாய்க்கு ஆண் குழந்தையை வாங்கி 2.5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
மதுரை ஆழ்வார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி காளீஸ்வரி. இவர்களுக்கு ஏற்கெனவே 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் 3ஆவது பிரசவத்துக்காக ஏப்ரல் 2ஆம் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் காளீஸ்வரி சேர்ந்துள்ளார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. காளீஸ்வரியின் ஏழ்மை நிலையை அறிந்த
ஆழ்வார்புரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (45) என்ற பெண், தனக்கு தெரிந்தவர்களுக்கு தத்துக் கொடுக்க முடியுமா என்று கேட்டுள்ளார். அதற்கு பணம் வாங்கித் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதையடுத்து கடந்த 13ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து காளீஸ்வரி ஆண் குழந்தையுடன் வீட்டுக்குச் சென்றுள்ளார். அதன்பின்னர் காளீஸ்வரியின் குழந்தையை ஆறுமுகம் ரூ.50 ஆயிரம் கொடுத்து வாங்கிச் சென்றுவிட்டார்.
அதன்பின் அவர் செல்லூர் மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த குடும்பக் கட்டுப்பாட்டுக்கு ஆள்களை அழைத்துவரும் தரகரான சாரதா(65) இஸ்மாயில்புரத்தைச் சேர்ந்த பாண்டியம்மாள் (45) ஆகியோர் மூலம் கான்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜா மனைவி செல்வியிடம் ரூ.2.50 லட்சத்துக்கு குழந்தையை விற்பனை செய்துள்ளார். இந்த பணத்தை பங்கீடு செய்வதில் மூன்று பேருக்கும் தகராறு ஏற்பட்டதை அடுத்து இப்பிரச்னை மதிச்சியம் போலீஸ் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது.
காளீஸ்வரி வீட்டிலிருந்து குழந்தை கடத்தப்பட்டதாக மதிச்சியம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) குழந்தை கடத்தப்பட்டதாகவும், அதில் சம்பந்தப்பட்டதாக ஆறுமுகம், சாரதா, பாண்டியம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் குழந்தையை மீட்டு காளீஸ்வரியிடம் ஒப்படைத்தனர்.
சிவகங்கையில் குழந்தை விற்பனை
இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் சிவகங்கை மாவட்டம் கீழக்கண்டனி பகுதியைச் சேர்ந்த ராதிகா வின் குழந்தை மதுரை அரசு மருத்துவமனையில் திருடு போனது. தற்போது அக்குழந்தையும் ஆறுமுகம் தரப்பினரால் வாங்கி ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் விற்கப்பட்டதாக தெரியவந்தது. அதுகுறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications