ஷேக் ஹசீனா ஆதரவாளர் அப்துல் ஹமீத் வங்கதேச ஜனாதிபதியாக போட்டியின்றி தேர்வு

வங்கதேசத்தில் ஆளும்கட்சியான அவாமி லீக் நாடாளுமன்ற சபாநாயகர் அப்துல் ஹமீதை(69) ஜனாதிபதி பதவிக்கு நேற்று பரிந்துரை செய்தது. இந்நிலையில் வங்கதேசத்தின் 20வது அதிபராக ஹமீத் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று தலைமை தேர்தல் ஆணையர் காசி ரகீபுத்தீன் அகமது இன்று அறிவித்துள்ளார்.
அதிபர் பதவிக்கு அப்துல் ஹமீத் மட்டும் தான் வேட்புமனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வங்கதேச ஜனாதிபதியாக இருந்த ஜில்லுர் ரஹ்மான் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சை பெறச் சென்றார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 20ம் தேதி உயிர் இழந்தார். அவர் சிங்கப்பூர் சென்ற பிறகு கடந்த 14ம் தேதியில் இருந்து அப்துல் ஹமீத் தான் இடைக்கால ஜனாதிபதியாக இருந்து வந்தார்.
இந்நிலையில் ஜனாதிபதியாக ஹமீத் இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஹமீத் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. வங்கதேச அரசியலமைப்பு சட்டப்படி அதிபர் இறந்த 90 நாட்களுக்குள் புதிய அதிபரை தேர்வு செய்ய வேண்டும். அதன்படி தான் ஹமீத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications