இந்தியாவின் வீரமகன்… சரப்ஜித் சிங் மரணத்திற்கு மன்மோகன் சிங் இரங்கல்

பாகிஸ்தான் லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சரப்ஜித் சிங்கை சக கைதிகள் தாக்கியதால் கோமா நிலைக்கு சென்று மரணமடைந்தார். அவரது மரணத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங், தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:
சரப்ஜித் சிங் மீது தாக்குதல் நடத்தி அவரின் மரணத்துக்கு கிரிமினல்கள் காரணமாகிவிட்டனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள அரசு முயற்சி செய்யும்.
சரப்ஜித் சிங் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வந்து சிகிச்சை அளிக்க பாகிஸ்தானிடம் அரசும், சரப்ஜித் சிங் குடும்பத்தாரும் விடுத்த வேண்டுகோளை பாகிஸ்தான் மனிதாபிமான அடிப்படையில் அணுகவில்லை. சரப்ஜித் சிங் உடலை இந்தியா கொண்டுவருவதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.
வாழ்வின் மகிழ்ச்சியை அனுபவிக்காத இந்தியாவின் வீர மகனாகத் திகழ்ந்த அவரின் ஆன்மா அமைதியடைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு பிரதமர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
சரப்ஜித்சிங் குடும்பத்தினருடன் அமைச்சர் ஷிண்டே சந்திப்பு:
இதனிடையே சரப்ஜித் சிங் மரணச் செய்தி கேட்டதும் உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே, உடனே டெல்லியில் தங்கியிருக்கும் சரப்ஜித்சிங் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவரது உடலை இந்தியா கொண்டு வந்த குடும்பத்தினர் விருப்பப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
சரப்ஜித்சிங் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வெளியுறவுத்துறை மூலம் செய்து வருகிறோம். இந்த விஷயத்தில் அவரது குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். அவரது உடலை பாகிஸ்தான் அரசு இந்தியாவிடம் ஒப்படைக்கும் முன் எதுவும் செய்யமுடியாது.
உடல் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டால் அவரது குடும்பத்தினர் விரும்பியபடி இறுதி சடங்குகளும், இறுதி மரியாதைகளும் அளிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications